அமெரிக்காவின் பிரச்சினைகளுக்குச் சீனாவைக் குற்றஞ்சாட்டுதல் தீர்வாகாது
2021-06-24 10:50:20

சீனர்கள் கடும் உழைப்பாளிகள். தங்களின் அரும்பெரும் உழைப்பினால் ஆகச்சிறந்த வாழ்வைக் கட்டியமைத்துக் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாகக் கடந்த 30 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்து மட்டங்களிலும் கல்வியை மேம்படுத்துதல், பன்னாட்டளவில் பொருளாதாரம் சார்ந்த கூட்டாளிகளைத் தேடுதல், வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தற்சார்புடன் ஈடுபடுவது என முன்னேறி வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான சீனர்கள் உலகளவில் சிறந்த பொருளாதார நிலைமையை அடைந்துள்ளனர். பல சீனப் பல்கலைக்கழகங்களின் தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. சொந்த நாட்டில் வலுவாகவும் வெளிநாடுகளில் மதிக்கத்தக்க நாடாகவும் உள்ள சீனாவினைப் பின்பற்றி பல வளரும் நாடுகள் தங்களைச் சீரமைத்துக் கொள்ள முயன்று வருகின்றன. சீனாவின் இத்தகு முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பைக் குறிப்பிடலாம். உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ள இத்திட்டமானது பொருளாதாரத்தை மிகப் பெரும் நிலைக்கு உயர்த்தும் திறனைக் கொண்ட திட்டம் எனக் கருதப்படுகின்றது. இத்தகு சூழ்நிலையில் ஜி7 உச்சிமாநாட்டில் சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்புக்கு மாற்றாகச் சிறந்த உலகை மீண்டும் கட்டியமைப்போம் என்னும் திட்டமொன்றை அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் அறிவித்துள்ளார். இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் சீனாவின் திட்டம் போன்று பரந்த அளவில் பல்வேறு நாடுகளுக்கும் பலனளிக்குமா என்னும் கேள்விகள் எழாமல் இல்லை. இது புறமிருக்க மற்றொரு புறம் தொடக்கம் முதலே சீனாவின் மீது பல்வேறு பொய்யான புகார்களைக் கூறிவரும் அமெரிக்கா, சீன விரோதப் போக்கைப் பரப்புவதன் மூலம் தன்நாட்டு மக்களை உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப முயன்று வருகின்றது. அமெரிக்காவின் இப்போக்கு ஒரு கட்டத்தில் அந்நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்துவதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகம். சீனாவைக் குற்றம் சொல்வதன் வழி தன்னாட்டுப் பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கும் அமெரிக்கா, இச்செயலின் வழி தன்னுடைய வளர்ச்சியைக் கவனிக்காமல் விட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க உயரதிகாரிகளும் அந்நாட்டு ஊடகங்களும் சீனாவைப் பற்றிப் புகார் செய்வதிலும், குற்றம் சாட்டுவதிலுவே கவனம் செலுத்துகின்றனரே அன்றி நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு காலத்தில் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டை உலக அரங்கில் முதன்மையான நாடாக மாற்றுவதற்குக் கடுமையாக உழைத்தனர். அந்நாட்டுத் தலைவர்கள் உலகெங்கும் சென்று அமெரிக்க நலன்களை முன்னேற்றினர். அது போன்றே ஒரு காலத்தில் கடின உழைப்பு, முன்முயற்சி மற்றும் அரசாங்கக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று பல பத்தாண்டுகளாக கூறப்பட்ட அமெரிக்கா, இன்று சீனாவை குற்றம் சாட்டவும் பயமுறுத்தவும் செய்கின்றது. மாறாக சீனாவோ இத்தகு மிரட்டல்களைத் துணிவோடு எதிர்கொண்டு படிப்படியாகத் தன்னை உயர்த்திக் கொண்டு வருகின்றது. உள்நாட்டில் வெற்றிபெறுவதன் வழி வெளிநாட்டில் பெரும் புகழை அடையலாம் என்னும் வழிமுறையானது இனியும் அமெரிக்காவுக்கு உரியதாக இருக்க முடியாது. இப்போது சீனா தன்னுடைய பொறுப்பு மிக்கச் செயல்பாடுகளால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்மைகளையும் மதிப்பையும் பெறும் நாடாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

சீனாவைத் தொடர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்காவின் செயலை விமர்சிக்கும் அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவரான பில் கிளிண்டனின் காலத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த இராபர்ட் ரெய்ச், அமெரிக்காவுக்குச் சீனாவைக் குற்றஞ்சாட்டுதல் என்பது எளிதான ஒன்று. ஆனால் அது மடத்தனமான முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்று காலத்திற்கேற்ற வகையில் சீனா தன் நாட்டைத் தாண்டி பரந்துபட்ட அளவில் சிந்திக்கின்றது. அமெரிக்காவோ உள்நாட்டளவிலேயே சிந்திக்கின்றது. அமெரிக்காவின் இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் கூடிய அணுகுமுறையானது காலப்போக்கில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கி வளர்ப்பதாக அமைந்து விடும். இந்தப் பின்னணியில் அமெரிக்காவானது, அந்நாட்டில்  பாசிச கருத்துகளுக்கு ஆதரவாக வலுத்து வரும் ஆதரவு மற்றும் நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க நிலையான வழியைக் கண்டுபிடிக்க முடியாமை என்னும் இரு பெரும் ஆபத்துகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் அந்நாட்டில் ஜனநாயகமும் கேள்விக்குள்ளாகி வருகின்றது. இது குறித்து அண்மையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், வெளிநாடுகளில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பவராக அறியப்படும் ஜோ பைடன் தான், சொந்த நாட்டில் அதன் அழிவைக் கையாண்டுக் கொண்டிருக்கின்றார் என விமர்சனம் செய்துள்ளது.

இதனிடையில் உலகமே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் கரோனா தொற்றினை வெற்றிகரமாகச் சமாளித்து மீண்டு வந்துள்ள சீனா, வலுவான பொருளாதார மீட்சியை உருவாக்கி அதனைத் தன்னுடைய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்குரிய கதைகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அமெரிக்காவோ பதில்களே இல்லாத பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றது. அத்தகு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் அமெரிக்கா சீனாவைத் தாக்குவதைக் கைவிட்டுவிட்டு தன் பிரச்சினைளைக் களைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.