மக்களின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சீனாவின் அரசியல் கட்சி அமைப்பு முறை
2021-07-01 15:36:01

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நூற்றாண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாடியது. சீனாவில் 1919 ஆம் ஆண்டு தொடங்கிய மே 4 இயக்கத்தின் எழுச்சியின் காரணமாக புதிய ஜனநாயகப் புறட்சி துவங்கியது. 1921 ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பெற்றது. அதன்பின் 1949 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் ஒன்றாம் நாள் சீனாவை ஆளும் கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் சீனாவில் காணப்பட்டுள்ள மாற்றங்கள் உலகம் எதிர்பாரா ஆச்சரியங்களுள் ஒன்று. ஜுலை முதல் நாள் கட்சியின் 100 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்தில் சீனாவில் ஓரவு வசதி படைத்த சமூகம் பன்முகங்களிலும் கட்டி நிறைவேற்றப்பட்டதாக சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அறிவித்தார்.

சீனத் தனிச்சிறப்பியல்புகளுடன் கூடிய கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவில் உள்ள ஜனநாயகக் கட்சிகளுடன் ஒத்துழைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியையும் பல கட்சி அரசியல் பங்கேற்புடன் கூடிய புதிய அரசியல் அமைப்புமுறையை மானுட குலத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஜனநாயகப் புரட்சியில் இருந்து முகிழ்த்த இப்புதிய அமைப்புமுறையானது, பொதுவுடைமைப் புரட்சி, அதன் கட்டுமானம் மற்றும் சீர்திருத்தத்தின் செயல்பாட்டினால் பெரும் வளர்ச்சியடைந்தது. நடைமுறைக்கேற்ற வகையில் சோதிக்கப்பட்ட இந்தப் புதிய அமைப்பு முறையினாலேயே உலகமே கண்டு வியக்கும் சீனாவின் வளர்ச்சிச் சாதனைகள், நவீனத் தன்மையுடன் கூடிய ஆளும் நிருவாக மற்றும் நாட்டின் நிருவாக அமைப்பு முறை ஆகியன உருவாயின.  

சீனத் தனிச்சிறப்பியல்புகளுடன் கூடிய இந்தப் புதிய அரசியல் கட்சி அமைப்புமுறையைச் சீனர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். ஆனால், வழக்கம் போல மேற்குலம் இதனை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கவில்லை. பகுத்தறிவுடன் முன்னேற்றத்தை நோக்கிச் செயல்படும் இந்த அரசியல் அமைப்பு முறையினை அவர்கள் தொடர்ச்சியாகக் களங்கப்படுத்திக் கொண்டே இருந்தனர். இருக்கின்றனர். சீனாவின் வளர்ச்சியினால் அவர்களின் தப்பெண்ணம் மாறும் என நம்புவோம்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சீனாவின் முன்னணி மற்றும் ஆளும் கட்சியாகக் குறிப்பிடும் அரசின் வெள்ளை அறிக்கை, சீனாவில் உள்ள பிற ஜனயநாயகக் கட்சிகளைச் சீனத் தனிச்சிறப்பியல்புகளுடன் கூடிய சோஷலிசக்கட்சிகள் என வர்ணித்துள்ளது. மேலும், அக்கட்சிகள் எதிர்க்கட்சிகளல்ல என்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சியில் பங்கேற்கும் கட்சிகள் என்றும் சுட்டப்படுள்ளன. உலகின் பார்வைக்குப் புதிதாகத் தோன்றும் இந்தப் புதிய அரசியல் அமைப்பு முறையானது கட்சிகளுக்கு இடையிலான போட்டிகளைத் தவிர்த்து, மக்களையும் அனைத்துக் கட்சிகளையும் இணைக்கும் வலுவான குறிக்கோளை முன்னிறுத்திச் செயல்படுகின்றது. இதன் காரணமாகவே சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிற ஜனநாயகக் கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான உறவு பேணப்பட்டு வருகின்றது. மேலும், ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் இணக்கத்தோடு அனைத்து விவகாரங்களும் ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்கப்பட்டு சிறந்த முடிவுகள் எட்டப்படுகின்றன. ஆனால், மேற்கத்தியர்களோ இரண்டு அல்லது பல கட்சி அமைப்பு முறைகளைக் கொண்டதே ஜனநாயகம் என ஜனநாயகத்தைக் குறுகிய பார்வையுடன் அணுகுகின்றனர்.

அரசியல் கட்சி என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அந்த வகையில் சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒன்றிணைந்த புதிய கட்சி அமைப்பு முறையானது, தேசியச் சுதந்திரம், விடுதலை உணர்வுடன் கூடிய மக்கள், வளமான நாடு மற்றும் மகிழ்ச்சியான மக்கள் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இத்தகு பொதுவான குறிக்கோள்களால் தூண்டப்பட்டு செயல்பட்டு வரும் சீனாவின் புதிய அரசியல் கட்சி அமைப்பு முறையானது, ஆற்றலுடன் கூடிய சமூகத்தின் அனைத்துச் சக்திகளையும் ஒன்றிணைத்து, எதிர்காலத்தில் மேலும் பல புதிய சீன அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் என்பதில் ஐயமில்லை.