சீனாவின் புதிய அடையாளமாக மாறும் புடங் புதிய பிரதேசம்
2021-07-16 18:58:33

சீனாவின் வணிகத் தலைநகர் என அழைக்கப்படும் ஷாங்காய் மாநகர் சர்வதேசத் தரத்திலாநது. சீனாவின் கனவான சோசலிச நவீனமயமான நாட்டைக் கட்டியமைக்கும் போக்கில் முன்னணி நகராக இருப்பது ஷாங்காய். நாட்டின் முன்னணி பகுதியாக அதை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டு உயர்நிலைச் சீர்திருத்தம் மற்றும் திறப்பில் புடங் புதிய பிரதேசம் முக்கியப் பங்காற்ற உள்ளது.

புடங் புதிய பிரதேச கட்டமைப்பு தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட ஆவணம் ஒன்றை சீன அரசு வெளியிட்டுள்ளது. சிக்கல் நிறைந்த சர்வதேச சூழலுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில் புடங் புதிய பிரதேசம், ஷாங்காயில் சீர்திருத்தம் மற்றும் திறப்பு ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது, சீர்திருத்தம் மற்றும் திறப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் உயர்தர பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் இரட்டை சுழற்சி வளர்ச்சி முறையை வளர்ப்பதற்கும் சீனாவுக்கு வழிவகை ஏற்படுத்தித் தரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புடங்கை உள்நாட்டுச் சந்தையில் ஒரு மைய முனையாக கட்டமைத்தல்; உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இடையே ஒரு வியூக இணைப்பை நிறுவுதல்; யாங்சு நதிக்கரை ஒட்டியுள்ள பகுதிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இப்புதிய ஆவணம் வழிகாட்டும்.

2035 ஆம் ஆண்டு எனும்போது புடங்கின் நவீன பொருளாதார அமைப்பு முழுமையாக நிறுவப்பட்டு விடும். நவீன நகர்ப்புறபகுதி முழுமையாக கட்டமைக்கப்படும். மேலும், அதன் அமைப்பு மற்றும் நிர்வாகத் திறன் நவீனமயமாக்கப்படும். அக்காலக்கட்டத்துக்குள், அதன் வளர்ச்சி நிலை மற்றும் சர்வதேச போட்டித்தன்மை ஆகியவை உலகின் முன்னணி நகரங்களுக்கு ஈடாக அமையும். 2050-க்குள் கவர்ச்சி, படைப்பு, போட்டித்தன்மை, செல்வாக்கு ஆகியவற்றில் சர்வதேசத் தரத்துக்கு புடங் உருவெடுக்கும்.

ஷாங்காய் சமூக அறிவியல் கழகத்தின் துணைத் தலைவர் வாங் ஜென் கூறுகையில், இந்த புதிய ஆவணம் உயர்நிலைச் சீர்திருத்தத்தை ஊக்குவிப்பதிலும், திறப்பை ஊக்குவிப்பதிலும், உலகளாவிய அளவில் கண்டுபிடிப்பு மையமாக புடங்கைக் கட்டமைப்பதிலும் முழு பங்கை வழங்கும் என்றார். மின்னணுப் பொருள்கள், வாழ்க்கை அறிவியல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை புடங் புதிய பிரதேசம் வேகப்படுத்தும். இதனால், மேலும் பல வெளிநாட்டு தொழில்நிறுவனங்கள் ஷாங்காயை நோக்கிச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டுரங்கன், பெய்ஜிங்.