வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வலுவான அடித்தளத்தை இட்டுள்ள சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி
2021-07-16 11:03:30

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டை மட்டும் சார்ந்து அமைவதன்று. குறிப்பிட்ட நாட்டிற்கும் வெளியுலகிற்கும் இடையில் இருக்கும் உறவுகள், அதன் வழி பெருகும் வணிகத் தொடர்புகள் போன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. வெளிப்புறச் சூழல் நன்றாக அமைந்து மக்களுக்கான தேவைகள் அதிகரிக்கும் போது வணிகமும் செழிப்படைகின்றது. ஆனால், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அண்மைக்காலம் வரை உலக நாடுகள் பலவற்றிலும் வர்த்தகத்தில் பெரும் சுணக்கம் காணப்பட்டது. அண்மைக்காலமாக உலகின் பல நாடுகளும் கரோனா பெருந்தொற்றில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதன் காரணமாக சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் விரிவடைந்து வருகின்றது. இதனால், அது சார்ந்து இயங்கும் லாஜிஸ்டிக் எனப்படும் பொருள் புழக்கத் துறையும் நல்ல வளர்ச்சியைக் கொண்டு திகழ்கின்றது.

உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவின் வளர்ச்சி பலப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் பொருள் புழக்கத் துறை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாகச் சீனச் சுங்கத்துறை பொது நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் 27.1 விழுக்காடு அதிகரித்து 18.07 டிரில்லியன் யுவானை எட்டியுள்ளது. கடந்த காலங்களின் இதே காலத்திய புள்ளிவிவரத்தோடு ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி சிறந்த வளர்ச்சியாகும். புதிய சாதனையைப் படைக்கும் இவ்வர்த்தகத்தின் அளவு விரிவாகி வருவதன் காரணமாக, வர்த்தக நிறுவனங்களின் கப்பல் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகின்றது.

சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள ஒரு வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவராக உள்ள யாங் நான் இது குறித்துப் பேசுகையில், தமது நிறுவனம் நாள்தோறும் வெளிநாடுகளுக்குப் பொருட்களை அனுப்பி வருவதால், ஆண்டொன்றுக்கு 10,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

சீன அரசானது சீனச் சரக்குப் போக்குவரத்தினை மேம்படுத்தியதன் காரணமாக சரக்கு ரயில் போக்குவரத்தும் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது தொடர்பாக, சீனச் சரக்கு இரயில் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி இவ்வாண்டின் முற்பாதியில் மட்டும் சீன – ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி 7377 முறை பயணித்து, கடந்த ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் 43 விழுக்காடு அதிகரித்துள்ளது. பெயர்ச்சி செய்யப்பட்ட சரக்குகளின் அளவும் 52 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறைந்த விலையில் சிறந்த தரத்தோடு விற்கப்படும் சீனப் பொருட்கள் உலகம் முழுவதிலும் பெருமளவில் வரவேற்கப்படுகின்றன. இதனால் விமானச் சரக்குப் போக்குவரத்தின் அளவும் உயர்ந்துள்ளது. இது குறித்து சீனாவின் சிவில் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இவ்வாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் சீன விமானச் சரக்குப் போக்குவரத்து விகிதமானது 24.6 விழுக்காடு அதிகரித்து 3.74 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சீனச் சுங்கத்துறை பொது நிருவாகத்தின் செய்தித்தொடர்பாளர் லீ குய்வென் பேசுகையில்,  சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சி உற்பத்தி மற்றும் தேவையை உயர்த்தி வருவதோடு, வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை இட்டு, உலகப் பொருளாதார மறுமலர்ச்சிக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சீனாவில் சிறந்த வளர்ச்சி காணப்பட்டிருப்பினும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களிடையே காணப்படும் ஏற்ற இறக்கத்துடன் கூடிய மாற்று விகிதம், போக்குவரத்துச் செலவு உயர்வு மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் சீன நிறுவனங்கள் வளர்ச்சியின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையில், வெளிநாட்டு வர்த்தகத்தை மேலும் ஊக்குவித்து போட்டியாற்றலை வளர்க்கும் வகையில் சீன அரசானது இம்மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாட்டு வர்த்தகத்தின் புதிய வடிவங்கள் மற்றும் மாதிரிகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குரிய இத்தகு வழிகாட்டுதல்களை தொடர்புடைய நிறுவனங்கள் பின்பற்றி, போட்டியாற்றலைக் கூர்மைப்படுத்தித் தங்களின் சந்தைகளை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.