கரோனா பெருந்தொற்றினை வென்றால் மட்டுமே சீரான பொருளாதார வளர்ச்சி சாத்தியம் - எபெக் அமைப்பு
2021-07-21 14:38:29

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா திரிபுகள்,  தடுப்பூசிப் பங்கீட்டில் இருக்கும் சமமற்ற நிலைமை ஆகிய காரணங்களினால் ஏற்கனவே சமனற்றுக் காணப்படும் உலகப் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை எபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஓத்துழைப்பு மாநாடு காணொலி வழி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலைவர்கள், அடுத்த இருபது ஆண்டுகளுக்குள், உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழியை இரட்டிப்பாக்கவும், திறப்பு, ஆற்றல், நெகிழ்ச்சி மற்றும் அமைதியான கட்டமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த உறுதிமொழிகள் நடைமுறைக்கு வரும் நிலையில், பிராந்தியப் பொருளாதார மீட்சி துரிதமடைவதோடு உலகளாவிய சமூகமும் பெரும் நலனை அடையும். நோய்க்கிருமிகள் தொடர்ச்சியான திரிபுகளை அடையும் இத்தருணத்தில் இது போன்ற ஒத்துழைப்புகள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆசிய பசிபிக் பிராந்தியமானது, தனக்கேற்பட்ட நெருக்கடிகளை மிகச் சாதுர்யமாக சமாளித்து வருகின்றது. கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச்சிறந்த ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தேசிய மற்றும் பிராந்திய நிலைகளில், மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து தடுப்பூசியை அனுப்பியுள்ளன. எடுத்துக்காட்டாக சீன அரசானது வளரும் நாடுகளுக்கு 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை அனுப்பியதைக் குறிப்பிடலாம். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை எபெக் மாநாட்டில் பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கரோனா பிரச்சினையில் வளரும் நாடுகளுக்கு உதவும் வகையிலும், அந்நாடுகளின் பொருளாதர மற்றும் சமூக மீட்சியை விரைவுபடுத்தும் வகையிலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 300 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றினை வென்றால் மட்டுமே ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும், உலகம் முழுவதிலும் சீரான பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும் என்பதை உணர்ந்துள்ள எபெக் அமைப்பின் தலைவர்கள், அதன் பொருட்டு கூட்டத்தின் முடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தரம் வாய்ந்த தடுப்பூசிகளை அனைவரும் பெறும் வகையில் மலிவு விலையில் வழங்க வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளனர்.

உலகளாவிய வளர்ச்சியின் முக்கியச் சக்தியாகத் திகழும் எபெக் அமைப்பானது, தன்னுடைய திறந்த மற்றும் ஒத்துழைப்புத் தன்மையின் காரணமாக, உலகளவில் நேர்மறையான தாக்கங்களைக் கொண்டு செலுத்தும். எனவே, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் தாராள வர்த்தகத்திற்கான ஒரு பகுதியை நிறுவுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். அதோடு, பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த பொருளாதாரக் கூட்டணியையும், உலகின் மிகப் பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்தையும் மிக முன்னதாகவே உருவாக்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில் உலகின் இரண்டாவது பொருளாதார நாடாகத் திகழும் சீனா முக்கியப் பங்கை வகிக்கும். 2021 ஆம் ஆண்டின் முற்பாதியில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 12.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ள சீனா, புதுமை, ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்புத்தன்மை மற்றும் பகிர்வுத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட புதிய வளர்ச்சித் தத்துவத்தைப் பின்பற்றி வருகின்றது.  இந்தப் போக்கானது, பிராந்திய வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். எனவே, பிராந்திய நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியைத் திறமையானதாகவும் நிலையானதாகவும் மாற்ற சீனாவின் அணுகுமுறையைப் பின்பற்றி வளர்ச்சி உத்திகளை மேம்படுத்த வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் எண்ணியல் பொருளாதாரம் எதிர்காலத்திற்கான புதிய இயக்காற்றலாக மாறியுள்ளதை உணர்ந்து கொண்ட எபெக் உறுப்பினர்கள், தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் எண்ணியில் பொருளாதாரத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தியுள்ளனர். இப்போக்கில், எண்ணியல் பொருளாதாரமானது திறப்புத் தன்மை, நியாயம் மற்றும் பாகுபாடற்றத் தன்மையுடன் இருக்கும் வகையில் அவர்கள் பணியாற்ற வேண்டும். அதோடு, பசுமை வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பில் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இடம் கிடைத்தல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை அடைவதற்குரிய முயற்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எபெக் மாநாட்டின் முறைசாரா கூட்டத்தில் பேசிய சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், ‘’உங்கள் முகத்தைச் சூரியனை நோக்கித் திருப்புங்கள், நிழல் உங்களுக்குப் பின்னால் விழும்’’ என்று குறிப்பிட்டார். அந்த வகையில், ஆசிய-பசிபிக் பொருளாதாரச் சக்திகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, தங்களின் இலக்கினில் கவனம் செலுத்தும் வரை, தங்களுக்கான நெருக்கடிகளைப் பின்னுக்குத்தள்ளி, உலகின் பிரகாசமான பகிரத்தக்க எதிர்காலத்தை உருவாக்குவதில் பிறநாடுகளுடன் இணைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.