அறிவியல் ஆய்வு அரசியல் நோக்கிற்காக மேற்கொள்ள வேண்டாம்!
2021-07-23 09:51:49

கரோனா வைரஸ் தோற்றம் தொடர்பான 2ஆம் கட்டத் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டது. இத்திட்டத்தில், சீனா ஆய்வகத்தின் விதிமுறைகளைமீறியதால் வைரஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஆய்வின் முக்கிய பகுதியாக வகுத்துள்ளது. இந்தச் செயல் இவ்வமைப்பு சீனாவில் மார்ச் திங்களில் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வு முடிவில் ஆய்வகக் கசிவினால் வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று அறிவித்ததற்கு முற்றிலும் புறம்பானது.

தவிரவும், 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவிலும், 2019ஆம் ஆண்டு நவம்பரில் பிரேசிலிலும், 2019ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இத்தாலியிலும் கரோனா வைரஸ் தொடர்பான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், உலகளவில் பல நாடுகளிலும் பன்முகங்களிலும் வைரஸ் தோற்றம் தொடர்பான ஆய்வு மேற்கொள்வது மிக அவசியமாக உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வூஹான் ஆய்வகத்தை குறிவைத்து செயல்படும் சில மேலை நாடுகளின் பொய் கூற்றைக் கண்டித்துள்ளது. அதேவேளையில், பொது அறிவுகளையும் அறிவியலையும் அத்துமீறிய திட்டம் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்தது. நோய் வைரஸ் மனித குலத்தின் பொது எதிரியாகும். சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு மேற்கொண்டால் தான் இதனைத் தோற்கடிக்க முடியும் என்று சீனா கருதுகின்றது.