அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் அமெரிக்கா மட்டுமே
2021-07-27 10:48:15

அமெரிக்காவின் புதிய அரசுத்தலைவராக பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பும் கூட சீனாவின் மீதான அந்நாட்டின் கொள்கைளில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. பைடனுக்கு முன்பிருந்த டிரம்பின் கொள்கைகளையே பைடன் அரசும் கடைப்பிடித்து, சீனாவிற்கு மேலதிக நெருக்கடிகளைக் கொடுக்க முயற்சித்து வருகின்றது. இதனால் இக்கொள்கையை டிரம்ப் இல்லாத டிரம்பியம் என்று அரசியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் ஜூலை 19 அன்று அமெரிக்கா, சீனா, உலகளவில் இணையத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது போன்ற குறிப்பினை வெளிப்படுத்தியது. இது, சீனாவின் வழக்கமான போட்டியாளர்கள் சீனாவை மையப்படுத்தி பரப்பும் விஷமத்தனமான பரப்புரையன்றி வேறில்லை. உண்மையிலேயே சீனா அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலா? என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. அப்படிச் சிந்திக்கும் போது தான் அமெரிக்காவின் புரட்டு வெளிப்பட்டு உண்மை நிலை தோன்றும். 

ஜூலை 21 ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் ஒஹியோவில் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் உரையாற்றினார். அப்போது, புதிய கரோனா தொற்று, பணவீக்கம், வேலையின்மை, உள்கட்டமைப்பு, அமெரிக்க அரசியல் போன்ற பிரச்சினைகள் பற்றி மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இவற்றுள் கரோனா தொற்று மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒன்று. தற்போது அமெரிக்காவின் 50 மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இவ்வற்றுள் 38 மாநிலங்களில் பரவல் விகிதம் 50 விழுக்காட்டைத் தாண்டியிருக்கின்றது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி அமெரிக்காவில் கடந்த நாட்களில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 55 ஆயிரம் என்னுளவில் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு தற்போது உலகளவில் ஒரு நாளில் காணப்பட்ட மிக உயர்ந்த பதிவாகும். 2020 ஆம் மார்ச் முதல் தற்போதைய நிலவரம் வரையிலான சூழலைக் கணக்கிடும் போது அமெரிக்காவில் விரைவில் கரோனாவின் நான்காவது அலை ஏற்படக்கூடும் எனத் தெரிய வருகின்றது. முன்னதாக பைடன் பதவியேற்ற பிறகு  ஜுலை 4ஆம் நாளுக்குள் அதாவது அமெரிக்காவின் தேசிய விழாவுக்கு முன் அமெரிக்காவில் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்நாட்டில் 48.7 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பல அமெரிக்கர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை. இதற்குப் பக்கவிளைவுகள் மட்டுமல்லாது, குடியரசுக் கட்சியினரின் பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் நகைச்சுவை நிரம்பிய அரசியல் சார்ந்த கருத்துகளும் முக்கியக் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.

அமெரிக்காவில் நோய்த்தடுப்பை அதிகரிக்கும் பொருட்டு தடுப்பூசிகளை அதிகரித்தலின் மூலம் குடிமக்களைப் பாதுகாப்பதோ அல்லது குடிமக்களின் சுயேச்சையான தேர்வுரிமையைப் பாதுகாப்பதோ அந்நாட்டின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையிலான போட்டியின் மையமாக மாறியுள்ளது. இதனிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே கரோனா தொற்றின் புதிய அலை ஏற்படுவதற்கான காரணம் என பைடன் குறைகூறினார். அதேவேளையில், சமூக வலைத்தளத்தில் கரோனா தொடர்பான பொய் கூற்றுகளும் பரப்பியதை பைடன் குற்றஞ்சாட்டினார்.  குடியரசுக் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதும் கொள்ளாததும் தங்களின் அரசியலமைப்பு உரிமை என குடியரசுக் கட்சியினர் பேசி வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்றினால் மட்டுமல்லாது அண்மைக்காலமாக அமெரிக்கா வன்முறைச் சம்பவங்களாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டில் சிகாகோவில் மட்டும் 33 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு, 2020 ஆம் ஆண்டில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தால் 280 பில்லியன் டாலர் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பைடன் அரசானது அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. ஆனால் குடியரசுக் கட்சியினரோ அமெரிக்கர் துப்பாக்கிகள் மூலம் சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற பாரம்பரிய நடைமுறையில் ஊன்றி நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால் இவ்விரு கட்சிகளாலும் துப்பாக்கிப் பிரச்சினையில் ஒற்றுமையை எட்ட இயலவில்லை. இதனிடையில் குடியரசுக் கட்சியில் டிரம்பின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. அவரின் வலது சாரி தீவிரவாதச் சிந்தனைகள் அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கும் நிலையில், அமெரிக்காவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் காணப்படும் கொந்தளிப்பினை அவ்வளவு எளிதில் சரிசெய்ய முடியாது என்றே கருத வேண்டியிருக்கின்றது.

அமெரிக்காவில் இத்தகு பிரச்சினைகள் இருக்கும் சூழலில் அந்நாடு சீனாவை மிகப்பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கின்றது. அமெரிக்காவின் நோக்கம், அந்நாட்டில் நிலவும் உள்நாட்டு முரண்களைத் திசைதிருப்புவதைத் தவிர, அதன் மேலாதிக்க நோக்கம் மற்றும் அரசியல் பயன்களின் தேவைக்காகவும் ஆகும். ஆனால் உண்மை நிலை வேறு. பிரிட்டனின் தி கார்டியன் ஊடகமானது அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் லேக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், அமெரிக்காவின் மிகப்பெரும் அச்சுறுத்தல் சீனா அல்ல என்றும், அது அமெரிக்கர்களின் கண் முன்னாலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். லேக் அந்தக் கட்டுரையில் அமெரிக்கா இன்று எதிர்கொள்ளும் அச்சுறுத்தலாக அந்நாட்டின் பெரும் நெருக்கடிகளைக் குறிப்பிட்டிருக்கலாம். அவ்வாறு குறிப்பிட்டிருப்பாரேயானால் அமெரிக்காவின் தற்போதைய மிகப்பெரும் எதிரி அமெரிக்கா தான் என்பது அனைவருக்கும் துல்லியமாகப் புரிந்திருக்கும்.  (இளந்தமிழ்)