இந்தியாவும் சீனாவைப் போல விளையாட்டில் ஒளிர அதிக முதலீடும் முயற்சியும் அவசியம்
2021-08-12 16:06:57

கரோனா பெருந்தொற்றின் காரணமாக நடக்குமா நடக்காதா எனப் பலரையும் எண்ண வைத்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஒருவழியாக ஜூலை 23 தொடங்கி ஆகஸ்டு 8 வரை நடந்து முடிந்திருக்கின்றது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பதக்க வரிசையில் அமெரிக்கா முதலிடத்தையும் சீனா இரண்டாவது இடத்தையும் இந்தியா 48ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. 38 தங்கப் பதக்கங்கள், 32 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் என சீனா மொத்தமாக 88 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்தியா 1 தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 7 பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது. சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகளாக இருப்பதுடன் மக்கள் தொகையிலும் கிட்டதட்ட சமநிலையை வகிக்கின்றன. ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுதல் என்று வரும்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. சீனாவில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுத் துறை சார்ந்த கட்டுமானங்களும் சீனர்களுக்கு இயல்பாகவே விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வமும் இதற்கான முக்கியக் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, விளையாட்டுத் துறைக்கு அண்மைக்காலமாகப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அதோடு, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவர்களை இந்தியர்கள் கொண்டாடித் தீர்க்கின்றார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்ற போதும், பேட்மிட்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வாங்கிய போதும் இந்தியர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து பெண்களுக்கான குத்துச்சண்டையில் லாவ்லினா போர்கோஹய்னும், ஆண்களுக்கான மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா முறையே வெண்கலமும் வெள்ளியும் பெற்றுத் தந்தனர். அதற்கு அடுத்ததாக இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று தந்தது மிகப் பெருமைக்குரியாக ஒன்றாகப் பேசப்பட்டது. ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டில் தன்னிகரற்று விளங்கிய இந்தியா கடந்த 48 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பதக்கத்தைக் கூட வெல்லவில்லை என்னும் பெரும் பழியை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றதன் வழி துடைத்தெறிந்தது. நிறைவாக, கடைசி நாளில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வாங்கிய போது அவரைத் தங்க மகன் என அழைத்து இந்தியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

இப்படியாக இந்தியா பதக்கங்களை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருக்கையில் சீனா சத்தமேயில்லாமல் பெரும் சாதனைகளோடு ஒலிம்பிக் பதக்க வரிசையில் இரண்டாவது இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களை இந்தியர்கள் பெரிதும் கொண்டாடி மகிழ்கின்றனர். பெரு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பரிசுகளை அறிவிக்கின்றன. ஆனாலும் சீனா போன்று பதக்க வரிசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவில் ஒலிம்பிக் வீரர்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் நடைமுறை வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாதேயாகும். இன்றும் கூட இந்தியப் பெற்றோர்களில் பலரும் தங்கள் குழந்தைகளை மருத்துவராகவோ, மென்பொறியாளராகவோ மாற்ற விரும்புகின்றார்களே தவிர, பெரும் விளையாட்டு வீரனாக மாற்றுவதற்குரிய முனைப்பு குறைவாகவே இருக்கின்றது. அதற்கு நீண்ட தொலைவு பயணப்பட வேண்டும். அதற்குள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்னும் கவலை பெற்றோர்களை சூழ்ந்து கொள்கின்றது. இந்தியப் பெற்றோர்கள் இந்தச் சிந்தனையில் இருந்து வெளிவர வேண்டும். அதோடு, இந்திய அரசும் விளையாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்தி மேலதிக மேம்பாடுகளைக் கொண்டு வர வேண்டியது அவசியம். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி மற்றும் 16 வெண்கலங்கள் என மொத்தமாக 35 பதக்கங்களை மட்டுமே வென்றிருக்கின்றது. ஆனால் சீனாவோ இதுவரை 261 தங்கப்பதக்கங்கள் 200 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 174 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 635 பதக்கங்களை வென்றிருக்கின்றது. கிட்டதட்ட சம அளவிலான மக்கள் தொகை கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளின் பதக்கங்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடு மிகப்பெரியதாகும்.  இந்த நிலை மாற வேண்டுமானால் இந்திய அரசும் சீனாவைப் போன்று விளையாட்டுக்கென அதிக முதலீடுகளைச் செய்து உரிய திறமையுடைய பயிற்சியாளர்களை நியமித்து கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதோடு, விளையாட்டு குறித்த இந்தியர்களின் மனநிலையும் மாற வேண்டும்.