ஆப்கானிஸ்தானின் இன்றைய வீழ்ச்சிக்கு அமெரிக்காவே பொறுப்பு
2021-08-20 09:00:29

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் அந்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் நிலவிய உளநாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சர்வதேச நாடுகளின் ஆதரவோடு அமைக்கப்பட்டிருந்த அரசின் தலைவரான அஷ்ரப் கானி ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்றதையடுத்து தலிபான்கள் அரசுத் தலைவர் மாளிகையைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தாலிபான் அமைப்பானது பல்வேறு இடங்களைக் கைப்பற்றி வந்ததும், ஆப்கன் படையினர் அவ்வமைப்பிடம் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண்டைந்ததையும் உலக நாடுகள் உற்று நோக்கின என்றாலும், அந்நாட்டின் தலைநகரான காபூலைத் தலிபான்கள் எவ்விதச் சிரமுமின்றி எளிதாகக் கைப்பறியிருப்பது உலக நாட்டுத் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஆப்கனில் நடந்த உள்நாட்டுப் போரை 20 ஆண்டுகளாக முன்னின்று நடத்தி வந்த அமெரிக்கா, தன் படையைத் திரும்பப் பெற்ற பிறகே தலிபான்கள் இத்தகு முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர். இதனிடையில் அவசரகதியில் அமெரிக்கா எடுத்த இம்முடிவு குறித்து உலகின் பல நாட்டுத் தலைவர்களும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ஆப்கனில் படைகளை முன்கூட்டியே திரும்பப் பெற்றது அமெரிக்காவின் தவறான கணக்கீடு என்று ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன. ஆனால், அமெரிக்க அரசுத் தலைவர் பைடனோ ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதற்கு அந்நாட்டு அரசும் படைகளுமே காரணம் என்று தெரிவித்துள்ளார். பைடன் சொல்வது போல ஆப்கானிஸ்தான் காப்பாற்ற முடியாத அளவுக்கு ஊழல் மலிந்த நாடாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் குறுகிய காலத்துக்குள் நிகழ்ந்த ஒன்று அல்ல. இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. இத்தகு சூழலில் திடீரென ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியிருப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. இந்நிலையில், ஆப்கனில் இன்று ஏற்பட்டிருக்கும் முடிவுக்குப் பின்னால் அமெரிக்காவின் சில முக்கியச் செயல்பாடுகள் இருப்பதாக ரஷ்யாவைச் சேர்ந்த அமெரிக்க அரசியல் ஆய்வாளரான ஆண்ட்ரூ கொரிப்கோ குறிப்பிடுகின்றார்.

அவற்றுள் முதலாவதாக அவர் அமெரிக்காவின் விமானப் படையின் தாக்குதலைக் குறிப்பிடுகின்றார். ஆப்கனில் தாலிபான்களை எதிர்த்துப் போரிட்டதில் அமெரிக்க விமானப் படைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. ஏனெனில் தாலிபான்களிடம் அமெரிக்க விமானப்படையை எதிர்கொள்ளும் அளவுக்கு விமானப் படை வசதி இல்லை. இதனால், தாலிபான்கள் எங்கெல்லாம் கூட்டமாகத் தென்படுகின்றார்களோ அங்கெல்லாம் அமெரிக்க விமானப் படையினர் குண்டுகளை வீசித் தாக்கினர். இதில் பெருமளவு தாலிபான்கள் தாக்கப்பட்டனர் என்றாலும் கூட பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாயினர். அதனால் உயிர்ச்சேதமும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களில் பலர் தாலிபான்களை நோக்கித் திரும்பியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இரண்டாவதாக ஆப்கன் தேசியப்படை வீரர்களுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர் செலிவிட்டு பயிற்சியளித்தும் கூட அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஆப்கன் தேசியப்படைக்கோ அமெரிக்காவுக்கோ ஆதரவானரவர்களாக இல்லை. இதனை ஆப்கனின் தேசியப் படையினர் பலர் தாலிபான்களிடம் சண்டையிடாமலேயே சரணடைந்ததைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்.

மூன்றாவதாக அமெரிக்கா ஆப்கன் மறுமலர்ச்சிக்காக 2 டிரில்லியன் அமெரிக்க டாலரைச் செலவழித்தது. ஆனால், அந்நாட்டில் நிலவிய ஊழலினால் அதற்குரிய பயனை அடைய முடியவில்லை. ஆப்கன் மறுமலர்ச்சிக்கான சிறப்புக் காவல் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ஊழல் நடந்தது தெரியவந்துள்ளது. அதோடு, ஆப்கனானது அமெரிக்க இராணுவ-தொழில்துறை ஊழலுக்கான வடிகாலாக மாறியது. இது அமெரிக்காவில் கூறப்பட்ட இராணுவ-அரசியல் நோக்கங்களுக்கு எதிராக சென்றதோடு மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானின் சமூக-பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளை ஊனமாக்கி, அந்நாட்டை மிகவும் பலவீனமாக மாற்றியது.

நான்காவதாக அமெரிக்கா 20 ஆண்டுகளாக ஆப்கனில் திட்டமிட்டு நடத்தி வந்த போரிலிருந்து பொறுப்பற்ற முறையில் விலகும் நோக்கில் தன் படைகளை விலக்கிக் கொண்டதைக் குறிப்பிடுகின்றார் ஆண்ட்ரூ. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கும் போது ஆப்கானிஸ்தானின் இன்றைய வீழ்ச்சிக்கு அமெரிக்காவே முக்கியப் பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் இன்று நடந்திருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னால் அந்நாட்டின் இராணுவம், பொருளாதாரம், அரசியலில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இருந்ததே மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றது. ஆப்கனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா, அந்நாட்டுக்காகப் பெரும் தொகையை செலவிட்டதோடு, ஆப்கனில் இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட மிக மோசமான சூழலை உருவாக்கிச் சென்றிருப்பது அதன் வல்லரசுத் தன்மையில் மேல் விழுந்திருக்கும் பேரிடியாகும்.