பயங்கரவாதத்தை ஒழிக்கப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்
2021-09-15 15:27:47

அமெரிக்கா செப்டம்பர் 11 தாக்குதலின் இருபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆப்கானிஸ்தானிலிருந்த தன்னுடைய படைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு என்னும் பெயரில் வெளிநாடுகளில் அமெரிக்கா நடத்தி வந்த பெரும் போருக்கு ஆப்கானிஸ்தானில் அந்நாடு எடுத்த முடிவு பெரும் அவமதிப்பைத் தேடித் தந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் மிகப் பெரும் சக்தியான அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிகழ்வானது, எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கான காரணத்தை ஆராயாமல் அதனை ஒழித்து விட முடியாது என்பதைக் காட்டுகின்றது.

வறுமை, சமூகச் சமத்துவமின்மை, கல்வி இடைவெளி மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை தீவிரவாதக் கருத்துக்களை உருவாக்குவதோடு, பயங்கரவாதக் குழுக்களுக்கான ஆட்களைக் கண்டறிய உதவும் முக்கிய காரணிகளாகப் பரவலாகக் கருதப்படுகின்றன. பயங்கரவாதம் குறித்த உலகளாவிய தரவின் படி 2017 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்கத்திற்கு ஆட்பட்டு 26 ஆயிரத்து 445 பேர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 95 விழுக்காட்டினர் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாவர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் ஏற்பட்ட பாதிப்பு வெறும் 2 விழுக்காடு மட்டுமே ஆகும். எனவே, பயங்கரவாதத்தை வெல்ல விரும்பும் ஒரு நாடு பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை வளர்க்க வேண்டும். அதோடு, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்குச் சீரான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். இத்தகு பணிகளைச் செய்யாமல் வெறும் இராணுவ வலிமையால் மட்டும் பயங்கரவாதத்தை வென்று விட முடியாது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் கல்வி மிகப் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. எனவே, குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் சரியான கல்வியை வழங்க வேண்டியதும் முக்கியம்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் விரைவான வளர்ச்சியினால், உலகின் கிட்டத்தட்ட எல்லா மூலைகளிலும் தீவிரவாதக் கருத்துகள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இதன் காரணமாக வளர்ச்சி குறைந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் பள்ளிக்குச் சென்று எழுதுகோலைப் பிடிக்க வேண்டிய வயதில் ஏ.கே.47 மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை வைத்திருக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தி இண்டிபெண்டன்ட் என்னும் செய்தித்தாளானது, அந்நாட்டில் 13 ஆவது வயதில் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் பிற்காலத்தில் புதிய நாசி இணையவழி தீவிரவாத அமைப்பின் தலைவராக உயர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் குழந்தைகளையும் இளைஞர்களையும் சரியான திசையில் வழிநடத்தி அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு முதலானவற்றை அளிக்க வேண்டியது அவசியம். இத்தகு முறையிலேயே சீனா சின்ஜியாங்கில் பயங்கரவாதத்தை வென்றுள்ளது. பல ஆண்டுகளாகச் சின்ஜியாங்கில் ஒரு சிறு தாக்குதல் கூட நடைபெறவில்லை. இத்தகு நிலையை அடைய சின்ஜியாங் அரசு இளைஞர்களுக்குத் தொழிற்கல்வி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருதல் உள்ளிட்ட விரிவான முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.  

இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் எந்தவொரு நாடும் தனித்து நின்று பயங்கரவாதத்தை வேரறுத்து விட முடியாது. எனவே, உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பில் பல்வேறு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம் இத்தகு பணியைச் செய்யும் போக்கில் அமெரிக்கா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தைச் சாக்குப் போக்காக் கொண்டு பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் போக்கை அனுமதிக்கக் கூடாது. அத்தகு செயல்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்து விடும்.

இத்தகு நிலையில் தான் சீனா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்னும்  முன்முயற்சியுடன் வளரும் நாடுகளுடன் இணைந்து உலகளாவிய பயங்கரவாதத்தை அடிப்படை வழியில் எதிர்கொள்ளும் நம்பிக்கையுடன் பொதுவான வளர்ச்சியை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலகின் 140 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஈர்ப்பைப் பெற்றுள்ள சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டமானது, 2030 ஆம் ஆண்டில், உலகில் 7.6 மில்லியன் மக்களைத் தீவிர வறுமையில் இருந்தும், 32 மில்லியன் மக்களை மிதமான வறுமையில் இருந்தும் மீட்கும் எனத் தெரிவித்துள்ளது. இது போன்ற வழிமுறைகளில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியது மனித குலத்தின் பொதுப் பொறுப்பாகும். அத்தகு பொறுப்புடனேயே சீனா பயங்கரவாத எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றது.