பெரிய நாட்டின் பொறுப்பை வெளிப்படுத்திய சீனத் திட்டம்
2021-09-22 19:15:03

உலகம் பல்வேறு அறைகூவல்களை எதிர்கொண்டுள்ள இக்காலக்கட்டத்தில் ஐநாவின் 76ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாகவும், காணொளி மூலமாகவும் உரை நிகழ்த்தினர். தொற்றுநோய் கட்டுப்பாடு, பொருளாதார மீட்பு, பலதரப்புவாதத்தின் முக்கியத்துவம், தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் இப்பேரவைக் கூட்டத்தின் விவாதத்தில் இடம்பிடித்த முக்கிய அம்சங்களாகும். இதில், காணொளி மூலம் உரையாற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், “உலகளாவிய அறைகூவல்களை ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்,” என்றார். ஷி ச்சின்பிங்கி உரை, உலகம் முன்னேறிய திசையைச் சுட்டிக்காட்டி, உலக வளர்ச்சிக்கு நம்பிக்கை மற்றும் வலிமையை ஊட்டும் என்று பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

கொவைட்-19 நோயைத் தோற்கடித்தல், உலகளாவிய வளர்ச்சியைத் தூண்டுவித்தல், உண்மையான பலதரப்புவாதத்தைப் பின்பற்றுதல், சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து செயல்படுவதை நிராகரித்தல், காலநிலை மாற்றம் ஆகிய விவகாரங்கள் பற்றி மிகவும் ஆழமான கருத்துகளை அவர் எடுத்து வைத்தார். வளமான எதிர்கால சமூகத்துக்காக நாம் ஒன்றிணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கடுமையான போரை மேற்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் அறிவியல்-அடிப்படையில் அமைய வேண்டும்.

கரோனா வைரஸுக்கு எதிராக நம் இடையே உள்ள வலுவான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனை சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். தனது சொல்லுக்கு ஏற்ப, இவ்வாண்டு இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகளை உலகுக்கு நன்கொடையாக அளிக்கும் என்ற வாக்குறுதியை சீனா உறுதியாக நிறைவேற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசி விவகாரத்தில், சில நாடுகள் தேசியவாதத்தைக் கடைப்பிடிக்கையில், சீனாவின் இத்தகைய நிலைப்பாடும் பங்கும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

“உலக நாடுகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துவிடக் கூடாது. இதற்கு மாறாக, அமைதி, வளர்ச்சி, சமநிலை, நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.