அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ள ஆர்சிஈபி
2022-01-01 17:42:16

புத்தாண்டின் முதல் நாளில், ஆர்சிஈபி உடன்படிக்கை அதாவது பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு பற்றிய உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. உலகின் 220 கோடி மக்களுடன் தொடர்புடைய இவ்வுடன்படிக்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முழு உலக அளவிலும் சுமார் 30 விழுக்காடு வகிக்கின்றது. இது ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 6 நாடுகள், சீனா, ஜப்பான், நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 10 நாடுகளில் முதலில் செல்லுப்படியாகும். பிப்ரவரி முதல் நாள் தென் கொரியாவும் இதனை நடைமுறைப்படுத்தத் துவங்கவுள்ளது.

இவ்வுடன்படிக்கையின்படி, மேற்கூறிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சரக்குகள் படிப்படியாக காப்புவரி விலக்கச் சலுகை பெற முடியும்.

ஐ.நாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பின் மதிப்பீட்டின்படி, குறைந்த சுங்கவரிக் கொள்கையால், தொடர்புடைய நாடுகளுக்கிடையில் சுமார் 1700 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகம் கூடுதலாக மேற்கொள்ளப்படும்.

திறப்பு, ஒத்துழைப்பு மற்றும் தாராள வர்த்தகத்தை ஆதரிக்கும் பன்னாடுகளின் வலுவான விருப்பத்தை இவ்வுன்படிக்கையின் நடைமுறையாக்கம் காட்டுகின்றது என்று கருதப்படுகின்றது.  தவிரவும், பாதுகாப்பு வாதத்துக்கு எதிரான பல தரப்பு வாதத்தின் முழு வெற்றியாகவும் இது கருதப்படுகின்றது.