கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழன்பன் உங்கள் கருத்து கடிதங்கள் சுமந்து வந்த செய்திகளை உங்களுக்கு அறிவிக்கின்றோம். கடிதம் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ கருத்துகளை அனுப்புகின்றபோது, உங்களது பெயர்களை மட்டும் எழுதி அனுப்ப கேட்டுக்கொள்கின்றோம். நண்பர்கள் பலரின் பெயர்களை கருத்துக் கடிதங்களில் அல்லது மின்னஞ்சல்களில் சேர்த்து எழுதி அனுப்ப வேண்டாம். நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு அவ்வாறு செய்தால் பரவாயில்லை. நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு அவ்வாறு எழுத வேண்டாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
கலை இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு வழங்குகின்ற நேயர்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த ஆதரவு தொடரட்டும்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் தெரிவித்த கருத்துக்களை கேளுங்கள்.
கலை கடிப்பகுதியில் முதலாவதாக, இன்றைய திபெத் நிகழ்ச்சி பற்றி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் அனுப்பிய கடிதம். லாசாவில் நடைபெறும் ஷேட்டோன் விழாவின் சிறப்புகளை கலைமகள் விரிவாக அளித்தார்கள். 1000 ஆண்டுககால வரலாறுடைய இந்த விழாவைப் பற்றியும், அந்நாட்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளின் விபரங்களையும் வைத்து திபெத்தின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தெரிந்து கொண்டோம்.
தமிழன்பன் இலங்கை காத்தான்குடியிலிருந்து முஹம்மது மன்சூர் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளில் நேருக்கு நேர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு நேயர்களும் சீன வானொலியை கேட்பதற்கு காட்டும் ஆர்வமும் அவர்களின் தியாகங்களும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்பதற்கு எனது ஆர்வத்தை தூண்டி இழுக்கிறது. இவ்வாறு மக்களின் மனங்களை கொள்ளைகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளோடு சீன வானொலி மிளிர வாழ்த்துக்கள்
கலை தொடர்வது, இராசிபுரம் எம்.குருசாமி சீன உணவரங்கம் பற்றி அனுப்பிய கடிதம். சைவ உணவு சாப்பிடுகின்றவர்களுக்கு ஏற்ற உணவு வகை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை, ரப்பர் அரிசி ஆகியவற்றுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், எண்ணெய் போன்றவற்றை சேர்த்து இந்த உணவு வகையை செய்ய சொல்லிக் கொடுத்தற்கு நன்றிகள்.
தமிழன்பன் அடுத்து, வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி வேலூர் குமார இராமமூர்த்தி எழுதிய கடிதம். சீனாவில் பல்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை பற்றி இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் சீனா அனுபவித்த வேதனைகள் அதிகம். ரிக்டர் அளவையில் 7.8 என்று பதிவான இந்நிலநடுக்கத்தால் சுமார் இரண்டு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான தொடர் பேரிடர் நிகழ்வுகளையும் தாண்டி, சீனா உலக வல்லரசாக உருவாகி வருவது பெரும் சாதனையே.
கலை சென்னை எஸ் ரேணுகாதேவி சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன கட்டிடக்கலையின் மூன்று கட்ட வளர்ச்சியையும், எழுச்சியையும், பாரம்பரிய கட்டிடக்கலைப் பண்பாட்டையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் நன்கு புரிய வைத்தீர்கள். பண்டைய எகிப்தின் கலையோடும், அமெரிக்க கட்டிட மாதிரிகளோடும் புகழ்பெற்றதையும் அறிந்தேன். கற்கோயிலும், குகைக் கோயில் நினைவு கோபுரங்களும், சீனப் பண்பாட்டின் எடுத்துக்காட்டாய் விளங்குவது பெருமை.
தமிழன்பன் தொடர்வது, நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி குடியாத்தம் கே.வீரமணி எழுதிய கடிதம். அழகிய கண்ணே, தூங்காதே தம்பி தூங்காதே, விருப்போடு கையாலே என்னை, ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்கையில்லை என்ற பாடல்களை கேட்டேன். பழைய மற்றும் புதிய பாடல்களை வழங்கிவரும் இந்நிகழ்ச்சி இனிமையாய் உள்ளது.