பாசும் தங்குவீடுகளில் அதிக குளிராக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டே இருந்ததால் குளிர்காலம் மீண்டும் தோன்றிவிட்ட உணர்வை ஏற்படுத்தியது. கடும் குளிரிலும் காலையில் கண்விழித்து கிளம்புவதற்கு தயாராகிய பின்னர் காலை உணவு சாப்பிட்டோம். திபெத் பணிப்பயணத்தில் நான்காம் நாளாகிய இன்று (ஆகஸ்ட் நான்காம் நாள்) லின்ச்சு வட்டத்தின் சில இடங்களை பார்ந்துவிட்டு, பாயி மாவட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
பாசும் இயற்கை பாதுகாப்பு மண்டலம்
காலை எட்டு முப்பது மணிக்கு பாசும் ஏரி இயற்கை பாதுகாப்பு மண்டலத்திற்கு சென்றோம். முப்பத்தி ஏழரை சதுர கிலோமீட்டர் பரப்பளவையுடைய மலைகளால் சூழ்ந்துள்ள அந்த ஏரி பகுதியை ஒட்டிய இடங்களில் பச்சைபசேலென வளர்ந்த மரங்கள், தாவரங்களை பார்த்தோம். பாசும் ஏரியில் இடப்பட்டிருந்த மிதவை பாலத்தில் நடந்து எரியினுள்ளே தீவாக இருக்கின்ற பகுதியை பார்வையிட்டோம். கடல் மட்டத்திலிருந்து, மூவாயிரத்து ஐநூற்று முப்பத்து எட்டு மீட்டர் உயரத்திலுள்ள பாசும் ஏரியை சுற்றுலா மையமாக உருவாக்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தீவு போன்ற அந்த இடத்தில் பௌத்த கோயில் ஒன்று காணப்பட்டது. கண்கொள்ளா காட்சிகளை நிழற்பட கண்களில் உள்வாங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
வேளாண்மைக்கு அரசு உதவி
பத்து மணியளவில், லாழு கிராமத்தில் அரசு உதவியோடு திபெத் மக்கள் பயனடைந்து வரும் வேளாண் பகுதியை சென்றடைந்தோம். நான்கு கிராமங்களை கொண்ட வட்டத்தின் தலைவர் ஜியாஜூன், அவ்வட்டத்தின் நிர்வாக அலுவலக தலைவர் தாங்கன் நீமா, லாழு கிராம கட்சிக்குழு தலைவர் சிஜியன் உருது ஆகியோருடன் பேட்டி கண்டோம். அரசு, திபெத்தின மக்களுக்கு வேளாண்மை செய்ய கற்றுக் கொடுக்கிறது. கூடாரம் அமைத்து, பாதுகாப்பாக விவசாயம் நடத்துவதை மக்கள் கற்றுக்கொள்வதோடு, அதனால் கிடைகின்ற வருமானத்தை அனைவரும் பங்கிட்டு கொள்கின்றனர். தர்பூசணி, திராட்சை, பச்சைமிளகு என பலவற்றை பயிரிட்டு வருமானத்தை அதிகரிக்கும் வழிகளை உருவாக்குகின்றனர். இவ்வாறு அதிக மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி பணப்பயிர்களில் ஒன்றான எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு அப்பகுதியில் வண்ணமய காட்சிகளை உருவாக்கி சுற்றுலா வளர்ப்பதை இறுதி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்த குடும்பங்கள் பயிரிடும் காய்களை சந்தை நிலவரப்படி விற்கவும், விவசயிகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். குளிர்காலத்தில் வழக்கமாக காய்கறி கிடைக்காத நிலமையை இந்த வேளாண் உதவி திட்டம் மாற்றிவிட்டது. எண்ணெய் வித்துக்களை பயிரிட வைத்து, அந்த பகுதியையே பூக்களால் அலங்கரித்து, மக்களுக்கு இனிய காட்சிகளை வழங்கி, அவ்விடத்திற்கு ஈர்க்க நினைக்கும் திட்டம், எதிர்காலத்தில் நிச்சயம் நனவாகும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. கூடாரங்களில் பழங்கள், காய்கறிகளை வளர்த்து வரும் விவசாயிகள் அங்கு வந்து தாங்கள் பயிரிட்டவற்றை எமக்கு காட்டி மகிழ்ந்தனர்.