அவரைத் தொடர்ந்து, பல்லவி திரு.கே.பரமசிவன் உரையாற்றினார். 1986 ஆம் ஆண்டில், அவரும், காலஞ்சென்ற ஒய்.எஸ்.பாலு அவர்களும் இணைந்து மேற்கொண்ட முதலாவது சீனப் பயணம் பற்றியும், பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்ப்பிரிவின் அப்போதைய தலைவர் திரு.எஸ்.சுந்தரன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம் துவக்கியது பற்றியும் சுவைபட விளக்கிக் கூறினார்.
பின்னர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முனைவர் ந.கடிகாசலம் அவர்களின் உரை துவங்கியது. நகைச்சுவையுடன் அதே வேளையில் கருத்துச் செறிவுடன் பல்வேறு தகவல்களை நேயர்களிடையே அவர் பகிர்ந்து கொண்டார். 1983 ஆம் ஆண்டு, சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியில் சேர்ந்து, நிகழ்ச்சிக் கட்டமைப்பில் மேற்கொண்ட சீர்திருத்தம் முதல், அண்மையில் அவர் மேற்கொண்ட சீனப் பயணம் வரை, பல்வேறு செய்திகளை அவர் நன்றாக எடுத்துக் கூறினார். மூன்று கட்டங்களாக, மொத்தம் 12 ஆண்டுகள் சீன வானொலியில் ஆற்றிய பணியின்போது, சீனாவின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கண்கூடாகக் கண்டவர் அவர். எனவே, அவரின் அனுபவ உரை, நேயர்களை கட்டிப்போட்டது.