பெய்ஜிங் மற்றும் ஷாங்காய், சீனாவின் மிகப் பெரிய நகரங்களாகும். பல வம்சங்களின் தலைநகரான பெய்ஜிங் மாநகரம் நீண்டகால வரலாறுடையது. என்னுடைய முதலாவது படைப்பில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் பற்றி அறிமுகப்படுகின்றேன்
இருபத்தாறு கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்நூல், வரிக்கு வரி அரிய தகவலை வெளியிடும் களஞ்சியமாக மின்னுகிறது. பெய்ஜிங் என்றால் சீனப் பெரு சுவர், தியான் அன் மென் சதுக்கம் என்பதை மாற்றி, அங்கு நாம் கண்டு களிக்க வேண்டிய இடங்களை அருமையாகப் பட்டியலிட்டு விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
பெய்குங் வனப் பூங்காவில், இசையொலி எழுப்பும் கற்கள் பற்றிய செய்தி புதிது. சூங் சான் வனப் பூங்காவுக்குச் சென்றால், விவசாயிகளின் இல்லங்களில் தங்கி, பழங்குடிக் காட்டை பார்த்து வரலாம். புகழ்பெற்ற வெப்ப ஊற்றைக் கண் குளிர கண்டுவரலாம். 1956 இல் நிறுவப்பட்ட பெய்ஜிங் தாவரவியல் தோட்டம் பற்றிய தகவல்கள் அருமை. சீஷல்ஸ் தீவிலிருந்து கொண்டு வரப்பட்டு, இங்கு விளையும் கடல் தேங்காய் பற்றிய செய்தி, ஆர்வத்தை துண்டுவதாக அமைகிறது.