ச்சாங் சியாவ்லிங்கின் மாணவர்
சீனாவின் தென் மேற்கு எல்லை பகுதியிலுள்ள யுன்னான் மாநிலத்தின் பூஏர் நகரத்தில், சிமெங் வா இனத் தன்னாட்சி மாவட்டம் அமைந்துள்ளது. சீனாவில் ஒரேயொரு வா இனத் தன்னாட்சி மாவட்டம் இதுதான். அழகான காட்சியையும் ஈரப்பதமுள்ள காலநிலையையும் கொண்ட இந்த மாவட்டம், மழை நகரம் என அழைக்கப்படுகிறது. இந்த அருமையான நிலத்தில் வா இன மக்கள் தலைமுறை தலைமுறையாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, பாடகி ச்சாங் சியாவ்லிங் பாடிய வா இன மக்கள் புதிய பாடலைப் பாடுவதென்ற பாடலாகும். வா இனத்தைச் சேர்ந்த ச்சாங் சியாவ்லிங் அம்மையார், தற்போது வா இனப் பண்பாட்டுப் பரப்புரைக் குழுவில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
சிமெங் வா இனத் தன்னாட்சி மாவட்டத்தில், வா, லாகு, தை, ஹான் உள்ளிட்ட பல இனங்கள் ஒன்றுகூடி வாழ்கின்றன. இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் வா இன மக்கள் தொகை 72 விழுக்காடு வகிக்கிறது. தனிச்சிறப்புடைய இருப்பிடம் மற்றும் நில அமைவின் காரணமாக, இன்றுவரை, தொன்மை வாய்ந்த அற்புதமான நறுமணம் சிமெங் பண்பாட்டில் நிலைநிறுத்தப்படுகிறது. வா இனத்தின் பாரம்பரிய இசைக் கருவி, காதல் பாடல் உள்ளிட்ட நாட்டுப்புற நடவடிக்கைகள், மர முரசு தயாரிப்பு, ஈட்டியால் காளையைக் கொலை செய்து பலி கொடுக்கும் சடங்கு முதலியவை, சிமெங் வா இனத்தின் பழமை வாய்ந்த சிறப்பான பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
ச்சாங் சியாவ்லிங் அம்மையார், குழந்தைப் பருவத்திலிருந்து, தமது தாய் மற்றும் முதியவர்களிடமிருந்து, வா இனத்தின் ஆடல் பாடல்களைக் கற்றுக் கொண்டு வந்தார். பணியில் சேர்ந்த பின், பொது மக்களிடையில் பரவலாகி வரும் வா இனப் பண்பாட்டு வளங்களை அவர் தட்டியெழுப்பி வருகிறார்.
"அப்போது வசதி அதிகம் இல்லை. ஒலி பதிவு மூலம் வீட்டில் தரவுகளைத் தொகுத்து ஆராய வேண்டியிருந்தது. தற்போது நான் பாடும் பாடல்கள், குழந்தைப் பருவத்தில் முதியவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடல்களாகும். நமது மாவட்ட ஆடல் பாடல் குழுவில் சேர்ந்த பின், கிராமப்புறத்துக்குச் சென்று, நாட்டுப்புறக் கலைஞர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து பழமை வாய்ந்த வா இனப் பண்பாடு, சி காங் லி பற்றிய செவிவழிக் கதை, வா இனத்தின் நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்கின்றோம். பின்னர் முதியவர்கள் விவரித்த கதைகளின்படி நடனங்களை வடிவமைக்கின்றோம்" என்று ச்சாங் சியாவ்லிங் அம்மையார் கூறினார்.
2003ஆம் ஆண்டில், பண்பாட்டின் மூலம் மாவட்டத்தை வளர்க்கும் நெடுநோக்குத் திட்டத்தை சிமெங் வா இனத் தன்னாட்சி மாவட்டம் முன்வைத்தது. இதன் விளைவாக, வா இன அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. தேசிய இன ஆடல் பாடல் குழு வளர்க்கப்பட்டு வருகிறது. மர முரசு விழா ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. சிறப்பு பெயரிடப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாழ்க்கை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், வா இனப் பண்பாட்டுப் பரப்புரைக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. வா இனத்தின் தலைசிறந்த பண்பாட்டைப் பாதுகாத்து வெளிக்கொணர்வது என்பது, இக்குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அப்போதுதான், ச்சாங் சியாவ்லிங் அம்மையார், மாவட்டத்தின் பண்பாட்டுப் பணியகத்திலிருந்து தேசியப் பண்பாட்டுப் பரப்புரைக் குழுவுக்கு வந்து, வா இனப் பண்பாட்டை வெளிக்கொணர்ந்து பரவல் செய்யும் பணியை மேற்கொள்ளத் துவங்கினார். இது பற்றி அவர் கூறியதாவது—
"வா இனப் பண்பாட்டுப் பரப்புரைக் குழுவை நமது மாவட்டம் 2006ஆம் ஆண்டில் உருவாக்கத் துவங்கியது. முதல் தொகுதி ஆசிரியர்களில் ஒருவராக, நிர்வாகப் பணிக்கு முக்கியமாக பொறுபேற்கின்றேன். வா இனத்தின் நாட்டுப்புறப் பாடல்கள், செவிவழிக் கதைகள், நாட்டுப்புற இசைக் கருவிகள், வா இனத்தின் பழக்கவழக்கங்கள், பழமை வாய்ந்த பண்பாடு ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து பரவல் செய்யும் வகையில், நாட்டுப்புறக் கலைஞர்களை அழைக்கின்றோம்" என்று அவர் கூறினார்.