ச்சாங் சியாவ்லிங்(இடது1)
இந்தப் பரப்புரைக் குழுவில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் வா இனத்தைச் சேர்ந்தவராவர். வேறுபட்ட பள்ளிகளிலிருந்து அவர்கள் வருகின்றனர். ஆனால், வா இனப் பண்பாட்டின் மீதான பேரார்வமும், கலை அரங்கேற்றத்துக்கான அடிப்படையும் அவர்களின் பொது தனிச்சிறப்புகளாகும்.
வா இன ஆடல் பாடல்களைத் தவிர, வா இன மக்களிடையில் பரவலாகி வரும் தொன்மை வாய்ந்த செவிவழிக் கதைகளையும் அவற்றிலிருந்து ஏற்பட்ட பாரம்பரிய பண்பாட்டையும் இளம் தலைமுறையினர்களுக்கு கற்றுக் கொடுப்பது தான், மேலும் முக்கியமான அம்சமாகும் என்று ச்சாங் சியாவ்லிங் அம்மையார் கருதுகிறார்.
"வா இன மக்கள் சி காங் லி என்ற செவிவழிக்கதை மூலம் அறியப்படுகின்றனர். உன் பெயர் என்ன, உங்கள் தந்தையின் பெயர் என்ன, உங்கள் தாத்தாவின் பெயர் என்ன என்பது முதல், சி காங் லி என்பது வரை நினைவில் வைத்திருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
சி காங் லி என்பது, வா இன மக்களிடையில் பரவலாகி வரும் பழைய செவிவழிக் கதையாகும். சி காங் லி என்றால், குகையிலிருந்து வெளியேறுவது என்று பொருள். பண்டைக்காலத்தில், மனிதர்கள் மூடிய மலைக் குகையில் அடைப்பட்டு வெளியேற முடியாமல் இருந்தனராம். கடவுள் அனுப்பிய பறவை, எலி மற்றும் சிலந்தியின் உதவியுடன், மனிதர்கள் குகையிலிருந்து வெளியேறி, பல்வேறு இடங்களுக்குச் சென்று அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர் என்கிறார்கள். சி காங் லி எனப்படும் செவிவழிக் கதை, மனிதக்குல வரலாற்றின் தோற்றுவாய் தான்.
நீண்டகால வரலாறு உடையது என்ற போதிலும், வா இனத்துக்கு எழுத்துக்கள் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வா இனத்தின் வரலாறும் பண்பாடும், வாய் மொழியாகக் கூறப்படுகின்றன. எழுத்துக்கள் இல்லாத வா இனப் பண்பாட்டைச் சேமித்து பரவல் செய்து, மேலதிக வா இனக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில், பரப்புரைக் குழுவின் கற்பிப்புப் போக்கில், ச்சாங் சியாவ்லிங் அம்மையார் சிறந்த வழிமுறையைக் கண்டறிந்துள்ளார்.
"வா இனத்துக்கு எழுத்துக்கள் இல்லை. வாய் மொழியாகவே அறிவைக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. தற்போது, சீன மொழியின் தொனி மூலம் வா இன மொழியைப் பதிவு செய்யும் முறையில் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றேன். பதிவு செய்த பின், வா இன மொழியின் தொனியை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்" என்று அவர் கூறினார்.
ச்சாங் சியாவ்லிங் அம்மையாரின் முயற்சிகளின் மூலம், வா இனப் பண்பாட்டை வெளிக்கொணர்ந்து பரவல் செய்யும் பணியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு இந்தப் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த குழந்தைகள், பெய்ஜிங்கில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச இசை மன்றத்தின் கருத்தரங்கில், வா இன ஆடல்பாடல்களை அரங்கேற்றி, பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றனர். ச்சாங் சியாவ்லிங் அம்மையாரின் மாணவர் யான்ஜியாங், மாவட்ட ஆடல்பாடல் குழுவில் வேலை செய்கிறார். வா இனப் பண்பாடு தொடர்பான அரங்கேற்றத்தில் பங்கெடுப்பது, அவருக்குப் பெருமை தருகிறது. அவர் கூறியதாவது—
"சுமார் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி வழங்குகின்றோம். எனது இனத்துக்குரிய இசைக் கருவியை இசைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வா இனப் பண்பாட்டைப் பரவல் செய்யும் வகையில், வாய்ப்பு இருந்தால், ஒரு வகுப்பை நடத்துவேன். வாய்ப்பு இல்லை என்றால், நான் எனது குழந்தைக்கு இது தொடர்பான அறிவைக் கற்றுக் கொடுப்பேன்" என்றார் அவர்.
முயற்சிகளின் மூலம் கிடைத்த சாதனைகளையும், தனது விருப்பத்துடன் ஒரே மாதிரியான மாணவரின் கனவையும் கண்டு, ச்சாங் சியாவ்லிங் அம்மையாரும் மகிழ்ச்சி அடைகிறார்.
"அடுத்த தலைமுறையினர்களிடையில் எங்கள் வா இனப் பண்பாடு பரவல் செய்யப்படுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வா இனப் பண்பாடு அழியாமல் காக்கும் வகையில் நான் இயன்ற அனைத்தையும் செய்வேன். வா இனப் பண்பாடு தலைமுறை தலைமுறையாக பரவல் செய்யப்பட வேண்டும் என்பது எனது விருப்பமும் கனவும் ஆகும்" என்று ச்சாங் சியாவ்லிங் அம்மையார் கூறினார்.