கைப்பேசிக்காக MP3வடிவில்
நீங்கள் இப்போது கேட்டுக்கொண்டிருப்பது, 《ராங் வோ டின் துங் நி து யியு யென்》என்னும் பாடலாகும். உங்கள் பேச்சை அறிந்துக்கொள்ள விடுங்கள் என்பதென்ற பொருளை இது தருகிறது. இந்தப் பாடல் சீனாவின் யுன்னான் மாநிலத்து சிஷூவாங்பான்னா தைய் இனத் தன்னாட்சி சோவில் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தேசிய இனப் பாணியுடைய சிஷூவாங்பான்னாவில், இப்பாடலின் இசையமைப்பாளர் தௌஹூங்யொங் ஆசிரியர் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். சிஷூவாங்பான்னா தன்னாட்சி சோவின் நாட்டுப்புற இசை மற்றும் நடனக் குழுவின் இசையமைப்பு அலுவலகத்தின் இயக்குநராகவும் அவர் பதவி வகிக்கின்றார். இப்பாடலை அமைத்ததற்கான ஓர் உண்மை கதையை அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அதாவது, முன்பு, இளைஞர் ஒருவர் சிஷூவாங்பான்னாவுக்கு வந்து அங்குள்ள அழகான இயற்கைக் காட்சிகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். ஆனால், இங்குள்ள மொழி தெரியாததால், உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு அப்பிரதேசம் மீதுள்ள அவரது விருப்பத்தைத் தெரிவிக்கவும் முடியாது போயிற்று. இறுதியில், வருத்தத்துடன் சிஷூவாங்பான்னாவிலிருந்து வெளியேறினார். இந்தக் கதையைக் கருப்பொருளாகக் கொண்டு, தௌஹூங்யொங் இரண்டு மணிநேரத்துக்குள் புகழ் பெற்ற இப்பாடலின் இசையை அமைத்து முடித்தார். உள்ளூரில், பெரும் வரவேற்பை இந்தப் பாடல் பெற்றுள்ளது.
நடனம், இசைக் குழு, இசையமைப்பு முதலிய கலைப்பணிகளில், தௌஹூங்யொங் ஈடுபட்டுள்ளார். கலை தொடர்பான சிறப்புக் கல்வி பயிலாமல் இருந்தாலும், தற்கல்வி மூலம், இசைத் துறையில், ஒரு லட்சியத்துடன், அவர் படிப்படியாக முன்னேறி வருகிறார்.
நடிகராக இருந்த போது, சிஷூவாங்பான்னாவின் நாட்டுப்புறப் பாடல்களைத் திரட்டுவதில், அவர் கவனம் செலுத்தினார். அப்போது, வேலை இல்லாத நேரங்களில், அவர் உள்ளூரில் இசைக் கருப்பொருட்களைத் திரட்டுவது வழக்கம். ஒலிப்பதிவு பொறி இல்லாமல், அவற்றைக் குறிப்பேடுகளில் எழுதினார். பல மதிப்புக்குரிய நாட்டுப்புறப் பாடல்கள் தௌஹூங்யொங் ஆசிரியரால் கையேற்றப்பட்டுள்ளன.