• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன-அமெரிக்க-ஜப்பான்-ரஷிய உறவு]

சீன-ஜப்பானிய உறவு  

அரசியல் துறையில், சீன-ஜப்பானிய உறவின் மீட்புக்கான 3 கோட்பாடுகளை சீனா 1971ஆம் ஆண்டு அக்டோபர் 2ந் நாள் முன்வைத்தது. அவை, சீன மக்கள் குடியரசு, சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு சட்டப்பூர்வமான அரசாங்கமாகும். தைவான், சீன மக்கள் குடியரசின் புனிதமான, பிரிக்கப்பட முடியாத பகுதியாகும். ஜப்பானிய-சியாங்கேஷக் சமாதான உடன்படிக்கை, சட்டத்துக்குப் புறம்பானது. பயனற்றது. இதை நீக்க வேண்டும் என்பனவாகும். 1972ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ந் நாள், ஜப்பானிய தலைமைச்சர் கனாக்கா காக்குஏ சீனப் பயணம் மேற்கொண்டார். 29ந் நாள், சீன அரசாங்கமும் ஜப்பானிய அரசாங்கமும் கூட்டறிக்கை வெளியிட்டன. சீன-ஜப்பானிய தூதாண்மை உறவின் சுமுகம் நனவாயிற்று.

தற்போது, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சிப்போக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வ சாதனை பெற்றுள்ளது. ஆனால், ஜப்பானிய தலைமையமைச்சர் சுனிசிரோ கொய்சுமி அடுத்தடுத்து யசுகுனி கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது என்பது, தற்போதைய சீன-ஜப்பானிய அரசியல் உறவைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

பொருளாதாரத் துறையில், சீனாவும் ஜப்பானும் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். ஜப்பான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கிவருகின்றது. ஜப்பானின் 2வது பெரிய வர்த்தக நாடாகவும் 2வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் சீனா திகழ்கின்றது.

அறிவியல், கல்வி, பண்பாட்டு மற்றும் நல வாழ்வு ஒத்துழைப்புத் துறைகளில், சீன-ஜப்பானிய தூதாண்மை உறவு சுமுகமான பின், இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலான அறிவியல்-தொழில் நுட்ப ஒத்துழைப்புறவு நிறுவப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு மே திங்களில் சீன-ஜப்பானிய அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான அறிவியல்-தொழில் நுட்பப் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் விரைவாக வளர்ச்சியடைந்துவருகின்றன. அளவும் தொடர்ந்து விரிவாகியுள்ளது.

1979ஆம் ஆண்டு டிசெம்பர் 6ந் நாள், சீன-ஜப்பானிய பண்பாட்டுப் பரிமாற்ற உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இரு நாடுகளின் பண்பாட்டு, கல்வி, கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறைகளிலான பரிமாற்றத்தை சீனாவும் ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளன. சீனப் பண்பாட்டு ஆண்டும் ஜப்பானிய பண்பாட்டு ஆண்டும் நடத்துவதென 2002ஆம் ஆண்டு இரு நாட்டு அரசாங்கங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன. தவிர, சீன, ஜப்பானிய, தென் கொரிய இளைஞரின் கோடை கால முகாம், பொது அறிவு பற்றிய சீன, ஜப்பானிய, தென் கொரிய தொலைக்காட்சி மூல போட்டி, சீன-ஜப்பானிய பொருளாதாரக் கருத்தரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை இரு தரப்பும் ஏற்பாடு செய்துள்ளன.

தற்போது, சீன-ஜப்பானிய உறவு பற்றி நுண் உணர்வுடைய பிரச்சினைகள் பலவற்றை உணர்வு பூர்வமாகக் கையாள வேண்டும். அவை பின்வருமாறு,

முதலாவது பிரச்சினை, வரலாற்றை அணுகும் பிரச்சினையாகும். இது, சீன-ஜப்பானிய உறவில் நுண் உணர்வுடைய அரசியல் பிரச்சினையாகும். 2001ஆம் ஆண்டு முதல், ஜப்பானில், வரலாற்று உண்மையைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாட நூலைத் திருத்தி, ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த வரலாற்று உண்மையைத் திரித்துப்புரட்டும் நிகழ்ச்சிகளும், ஜப்பானிய தலைமையமைச்சர் கொயிசுமி, யசுகுனி கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தன. இவை, சீன-ஜப்பானிய உறவுக்குக் கடும் தொல்லையை ஏற்படுத்தியுள்ளன.

இரண்டாவது பிரச்சினை, தைவான் பிரச்சினையாகும். ஜப்பானிய-தைவான் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. அதாவது, ஜப்பானுக்கும் தைவானுக்குமிடையில் அரசு சாரா தொடர்பு கொள்வது குறித்து சீனா வேறுபட்ட கருத்தை மேற்கொள்ளாது. ஆனால், எந்த வடிவத்திலான அரசுகளுக்கிடையிலான பரிமாற்றத்தையும் இரண்டு சீனாக்கள், ஒரு சீனா ஒரு தைவான் ஆகிய கருத்துக்களை சீனா உறுதியாக எதிர்க்கின்றது. ஜப்பானிய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவில் தைவான் அடங்கவில்லை என்று அது கோருகின்றது.

மூன்றாவது பிரச்சினை தியௌயு தீவு பிரச்சினையாகும்.

தியௌயு தீவுகள், சீன தைவான் மாநிலத்து சிலுங் நகரின் வட கிழக்கில் சுமார் 92 மைல் தொலைவிலுள்ள கிழக்கு சீனக் கடற்பிரதேசத்தில் அமைந்துள்ளன. அவை, தைவான் தீவைச் சேர்ந்தவை. தியௌயு தீவு, ஹுவாவெய் தீவு, சவெய் தீவு, நன்சியௌ தீவு, பெய்சியௌ தீவு ஆகியவையும் சில கற்பாறை தொடர்களும் இத்தீவுகளில் முக்கிய இடம்பெற்றுள்ளன. பண்டை காலம் தொட்டு இத்தீவுகள் சீனாவின் உரிமைப் பிரதேசமாக விளங்கிவருகின்றன. அவை, தைவான் போல, சீனாவின் உரிமைப் பிரதேசங்களில் பிரிக்கப்பட முடியாத பகுதியாகும். இத்தீவுகள் மீதும் அவற்றின் அருகிலுள்ள கடற்பிரதேசத்தின் மீதும் விவாதத்துக்கு இடமில்லாத அரசுரிமையை சீனா கொண்டுள்ளது.

சீனாவின் இந்நிலைப்பாட்டுக்குப் போதிய வரலாற்று மற்றும் சட்ட ஆதாரம் உண்டு. 1943ஆம் ஆண்டு டிசெம்பர் திங்கள் சீனவும் அமெரிக்காவும் பிரிட்டனும் கைரொ அறிக்கை வெளியிட்டன. கைப்பற்றிய வட கிழக்கு பிரதேசம், தைவான், பொன்ஹு தீவுகள் உள்ளிட்ட சீனாவின் உரிமைப் பிரதேசங்களை ஜப்பான் சீனாவுக்குத் திரும்பித் தர வேண்டும் என்று அறிக்கை வகுத்துள்ளது. கைரொ அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று 1945ல் வெளியிடப்பட்ட போஸ்தான் அறிக்கை கூறியது. அதே ஆண்டின் ஆகஸ்ட் திங்கள், ஜப்பான் இவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டு, நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தது. தைவானையும் அதைச் சேர்ந்த தியௌயு தீவுகளையும் சீனாவுக்கு ஜப்பான் திருப்பித் தருவதாக இது பொருட்படுகின்றது.

நான்காவது பிரச்சினை, ஜப்பானிய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரச்சினையாகும். 1996ஆம் ஆண்டு, ஜப்பானும் அமெரிக்காவும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டறிக்கையை வெளியிட்டன. 1978ல் வகுக்கப்பட்ட "பாதுகாப்பு ஒத்துழைப்பு வழி காட்டல் கோட்பாடு"இவ்வறிக்கையின் படி திருத்தப்பட்டது. 1997ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வழிகாட்டல் கோட்பாட்டை இவ்விரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தின. இவ்வழிகாட்ட்ல் கோட்பாடுடன் தொடர்புடைய மசோதா ஜப்பானிய நாடாளுமன்றம் பரிசீலித்து நிறைவேற்றியது. பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய அமைப்பு முறை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதை இது கோடிட்டுக்காட்டுகின்றது. தைவான் பிரச்சினை, ஜப்பானிய ராணுவம் ஆகியவை சீனா கவனம் செலுத்தும் பிரச்சினைகளாகும். பல்வேறு வழி முறைகள் மூலம், தன் பெரும் கவனத்தையும் நிலைப்பாட்டையும் சீனா தெரிவித்துள்ளது.

ஐந்தாவது பிரச்சினை, போருக்கு நட்ட ஈடு வழங்கும் பிரச்சினையாகும். கடந்த காலப் போரினால் சீன மக்களுக்கு உருவாக்கிய துன்பம் குறித்து ஆழமாக சுய சோதனை செய்வதாக 1972ஆம் ஆண்டு சீன-ஜப்பானிய தூதாண்மை உறவின் சுமுக மயமாக்கம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஜப்பானிய அரசு தெளிவாகத் தெரிவித்தது. இந்த நிலைமையில், நாட்டின் அடிப்படை நலனைக் கருத்தில் கொண்டு, சீனாவுக்கு எதிரான ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கான நட்ட ஈட்டுக் கோரிக்கையை சீன அரசு கைவிட்டது. இதை, 1972ல் உருவாக்கப்பட்ட சீன-ஜப்பானிய கூட்டறிக்கையில் சேர்த்துள்ளது. 1978ஆம் ஆண்டு, சீனாவின் 5வது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 《சீன-ஜப்பானிய சமாதான நட்புறவு உடன்படிக்கை》, சட்ட ஆவணம் என்ற முறையில் மேற்கூறிய கோரிக்கையைக் கைவிடுவதென்ற தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஆறாவது பிரச்சினை, சீனாவில் ஜப்பான் விட்டுச்சென்ற வேதியியல் ஆயுதப் பிரச்சினையாகும். சீனாவுக்கு எதிரான ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போரின் போது, சர்வதேசப் பொது இணக்க உடன்படிக்கையை ஜப்பான் வெளிப்படையாக அத்துமீறி, வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதால, அதிகமான சீன மக்களுக்கும் படையினருக்கும் நச்சு ஏறி உயிர் இழப்பு ஏற்பட்டது. போரில் தோல்வி கண்ட ஜப்பானிய படையினர் அதிகமான வேதியியல் ஆயுதங்களைப் புதைத்து விட்டுச்சென்றனர். இதுவரை, சீனாவின் 10க்கும் அதிகமான மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த 30க்கும் அதிகமான இடங்களில் இத்தகைய வேதியியல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில், இத்தகைய ஆயுதம் அவ்வப்போது நசிந்துவருகிறது. இது, சீன மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கும் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கும் கடும் அச்சுறுத்தலாக அமைகின்றது. 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இப்பிரச்சினை குறித்து ஜப்பானிய அரசுடன் சீன அரசு, தொடர்பு கொண்டு, இப்பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜப்பானிய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. 1999ஆம் ஆண்டு ஜூலை 30ந் நாள், சீன அரசும் ஜப்பானிய அரசும் பெய்ஜிங்கில் 《சீனாவில் ஜப்பான் விட்டுச்சென்ற வேதியியல் ஆயுதத்தை ஒழிப்பது பற்றிய குறிப்பாணை》யில் கையொப்பமிட்டன. 《சீன-ஜப்பானிய கூட்டறிக்கை》, 《சீன-ஜப்பானிய சமாதான நட்புறவு உடன்படிக்கை》 ஆகியவற்றை உள்ளத்தில் நிறுத்தி, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உடனடித் தன்மையை அறிந்துகொண்டுள்ளதாக இக்குறிப்பாணையில் ஜப்பானிய அரசு தெரிவித்தது. வேதியியல் ஆயுத தடுப்பு பற்றிய பொது இணக்க உடன்படிக்கையில் வகுக்கப்பட்ட ஒழிப்புக் கடமையை நடைமுறையாக்குவதாக வாக்குறுதியளித்தது. தற்போது, இரு நாட்டு அரசுகளின் தொடர்புடைய வாரியங்கள், இக்குறிப்பாணையின் எழுச்சிக்கிணங்க, இந்த வேதியியல் ஆயுதங்களை எவ்வாறு வெகு விரைவில் ஒழிப்பது என்பது பற்றி கலந்தாய்வு நடத்திவருகின்றன.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040