கலை......வணக்கம் நேயர் நண்பர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
கிளீட்டஸ்........நானும் கலையரசியும் உங்களுக்கு தொடர்ந்து கவிஞர் தாகூர் தொடர்பான ஆய்வு பற்றி பகிர்ந்து கொள்கிறோம்.
கலை......மே 7ம் நாளில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூர பெய்ஜிங்கிலும் புதுதில்லியிலும் நடைபெற்ற நடவடிக்கைகளை பற்றி விளக்கமாக பேசினோம்.
கிளீட்டஸ்........ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக, தாகூரின் படைப்புகள் குறித்து சீன அறிஞர்கள் செய்த ஆய்வுகள் பற்றி முக்கியமாக விளக்கிக் கூறுகின்றோம்.
கலை......ஆமாம். தாகூர் இந்தியாவில் மட்டும் புகழ் பெற்ற கவிஞராக இருக்கவில்லை. சீனாவின் இலக்கியத் துறையிலும் ஆழ்ந்த செல்வாக்குக் கொண்டுள்ளார்.
கிளீட்டஸ்........ஆகவே தாகூர் சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்ற வரலாற்றில் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளார். அவரைப் போதியளவில் நினைவு கூரும் நடவடிக்கைகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது.
கலை......ஆமாம். சீனாவில் தாகூரின் படைப்புகள் தொடர்பான ஆய்வு 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது எனலாம். சீன சமூக அறிவியல் கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த லீயூச்சியன் என்பவர், தாகூரின் படைப்புகளை ஆராய்வதன் மூலம் பட்டம் பெற்றவராவார்.
கிளீட்டஸ்........அவர் எப்போது பட்டம் பெற்றார்? என்ன ஆய்வுக் கட்டுரை எழுதினார்? தாகூரின் எந்த படைப்புகள் அவரது கட்டுரையில் இடம்பெற்றன?
கலை......1981ம் ஆண்டு சீனாவில் புகழ் பெற்ற அறிஞர் ji xian linஇன் தலைமையில் நடைபெற்ற பட்டம் பெறுவதற்கான நேர்முகத்தில் "தாகூரின் குறும் புதினத்தின் புத்தாக்கம்"பற்றி ஆய்வுக் கட்டுரையை அவர் வாசித்தார். அவர் விளக்கிய நுணுக்கமான கருத்துக்கள் இந்த நேர்முகத்தில் கலந்து கொண்ட நிபுணர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டன. அவர் வெற்றியையும் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
கிளீட்டஸ்........இன்றைய நிகழ்ச்சியில் அவரது கருத்துக்களை செவிமடுக்க முடியுமா?
கலை......கண்டிப்பாக. எமது செய்தியாளருக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது.
தாகூரின் குறும் புதினங்கள் கலை ஈர்ப்பு மிகுந்தவை. இந்திய விவசாயிகள் மீதான அன்பான உணர்வை இவற்றில் நிறைவாக படிக்க முடியும். இந்த உண்மையான உணர்வு நம்மையும் ஆட்கொள்ளும். அவர் கவிஞராக இருந்ததால் அவர் படைத்த குறும் புதினங்களில் கவிதையுணர்ச்சி நிறைந்த அம்சங்களை உணரலாம்.
கிளீட்டஸ்........சரி, தாகூரின் படைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் முதலில் முதுகலை பட்டம் பெற்றவர் யார்?
கலை......அதுவா, தாகூரின் படைப்பு "கீதாஞ்சலி"யை ஆய்வு செய்து zeng qiong என்னும் பெண்மனி முனைவர் பட்டம் பெற்றார்.
கிளீட்டஸ்........அப்படியா? zeng qiong அம்மையாரை பற்றி கொஞ்சம் கூடுதலாக கூறுங்கள்.
கலை......சரி. அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2007ம் ஆண்டு ஜுலை திங்கள் வரையான காலத்தில், சீன-இந்திய கல்வி பரிமாற்றத் திட்டப்பணியின் மூலம் இந்தியாவில் சிறப்பு கல்வி பெற்றார். இதன்போது அவர், இந்தியாவின் சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் வங்காள மொழித் துறையில் வங்காள மொழி இலக்கியத்தை படித்தார். "கீதாஞ்சலி" தொடர்பான பல்வகை மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்த அடிப்படையில் அவரது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். 2009ம் ஆண்டு ஜுன் திங்கள் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.