• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ் மொழி வளர்ச்சியில் சீனா
  2010-06-22 11:02:56  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்த தலைமுறையினரில் liang fu mei, fang ya qin, zhang jun jie என மூவர் இடம்பெற்றனர். மூன்றாவது தலைமுறையினரில் இடம்பெற்ற நான்கு பேரில் ஒருவராக நானும் இடம்பெற்றேன். ஷாங்காய் வெளிநாட்டுமொழி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் சீன வானொலியில் பணிபுரிய நியமிக்கப்பட்டேன். தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக நான் தமிழ்ப் பிரிவிற்கு மாற்றப்பட்டேன். சீனாவில் தமிழ்மொழி வளர்ச்சி இலட்சியத்திற்கு பங்காற்றும் வாய்ப்பு இதன் மூலம் எனக்கு கிடைத்தது. அப்போது சீன வானொலிக் கல்லூரியில் தமிழ் மொழித்துறை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எனவே சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த நிபுணர் சின்ன தம்பியின் துணைவியார் இராணி அம்மையாரிடம் தமிழ் மொழிக் கற்றேன். எனக்கு அடுத்து வந்த 3 தலைமுறை பணியாளர்கள் பேராசிரியர் பீ.லூசாவிடம் தமிழ் கற்றவர்களாவர். 2003 முதல் 2005 ஆம் ஆண்டு வரை சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணிபுரிந்து கொண்டே 6 பேருக்கு தமிழ் கற்பித்தார் பீ.லுசா அம்மையார்.

தொடர்பியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை

2007ம் ஆண்டிற்கு முன்பு இருந்த சீன வானொலிக் கல்லூரி, தற்போது சீனத் தொடர்பியல் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. அதில் தமிழ் மொழிப்பிரிவு 2003 முதல் தொடங்கப்பட்டது. தமிழ் மொழித் துறையில் 2007 ஆம் ஆண்டு 12 பேர் இளங்கலை பட்டம் பெற்றனர். அவர்களில் 6 பேர் சீன வானொலி தமிழ்ப் பிரிவில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ் மொழி பயில மாணவர்கள் சேர்க்கப்படுவர். அவர்கள் பட்டம் பெற்ற பின்னர், மீண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தொகுதி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் ஒரு வகுப்பு இத்துறையில் நடந்து கொண்டே இருக்கும். இப்போதும் பல்கலைக்கழகத்தில் 15 மாணவர்கள் தமிழ் மொழி பயின்று வருகின்றனர். அவர்கள் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் இளங்கலை பட்டம் பெறுவர். இவ்வாறு தனியாக தமிழ் மொழித்துறை நடத்தப்படுவது சீனாவில் தமிழ் மொழி வளர்ச்சியின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தமிழ் ஒலிபரப்புப் பணியில் 47 ஆண்டுகள்

இன்னும் இரு ஆண்டுகளில் தமிழ் ஒலிபரப்பின் பொன்விழா ஆண்டில் சீன வானொலி தமிழ்ப்பிரிவு அடியெடுத்து வைக்கும். இதுவரையிலான 47 ஆண்டுக்கால சேவையில் 40 ஆண்டுகள் அரை மணிநேரம் மட்டுமே ஒலிபரப்பான தமிழ்ப்பிரிவின் சேவை, 2004 ஆம் ஆண்டு ஒரு மணிநேர ஒலிபரப்பாக மாறியது. 16 பணியாளர்கள், 3 வெளிநாட்டுப் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பின்னரும் பகுதிநேர பணியாளர்களாக எங்களுக்கு உதவும் இரண்டு மூத்த பணியாளர்கள் என மொத்தம் 2 பேர் தமிழ்ப் பிரிவில் இப்போது பணிபுரிந்து வருகின்றனர். அன்றி, சிற்றலை ஒலிபரப்புடன், இணையதள வானொலி ஒலிபரப்பும் செவ்வனே நடைபெற்று வருகின்றது. தவிர, ஏப்ரல் திங்கள் முதல் இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தமிழ் பண்பலை வானொலி ஒலிபரப்பாக சீன வானொலி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தமிழகர்கள் பயனுறும் வகையில், கொழும்புவிலிருந்து நாள்தோறும் 4 மணிநேர நிகழ்ச்சிகளை பண்பலை மூலமாக வழங்கி வருகின்றோம்.

சீனத் தமிழொலி

எல்லாத் தமிழர்களையும் சென்றடையும்படி, சீனத் தமிழொலி எனும் இதழை சீன வானொலி தமிழ்ப்பிரிவு வெளியிட்டு வருகிறது. சீன வானொலியில் ஒலிபரப்பான முக்கிய நிகழ்ச்சிகள், சுற்றுலா இடங்கள், பொதுத் தகவல்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த இதழ் வெளிவருகிறது.

தமிழ் மொழி வளர்ச்சியில் பங்கு

தூய தமிழ் மொழிப் பயன்பாடு

கணினி உலகில், உலகமே குக்கிராமம் போல் சுருங்கிவிட்டது என்பதை நாம் நன்கறிவோம். பல்மொழிகள், பண்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை முன்பைவிட இப்போது அறிந்து கொள்வது மிகவும் எளிதாகிவிட்டன. இது பல்வகை நன்மைகளை வழங்கினாலும், சில சீரழிவுகளையும் கொண்டு வருகிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். அத்தகைய சீரழிவுகளில் ஒன்றுதான் நமது மொழியில் அயல் மொழிகளின் ஆதிக்கம். பேசுவதற்கு எளிதாக இருக்கிறது, பிற மொழிக் கலப்போடு பேசினால் மதிப்பு என்ற பொய்யான எண்ணங்களை மனதில் கொண்டவர்களாய் அதிக அளவில் பிற மொழிச் சொற்களை பயன்படுத்த பழகிவிட்டோம். பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், காலப்போக்கில் அதற்கான தமிழ்ச் சொற்களும், புதிய சொல் உருவாக்கங்களும் மறைந்துபோகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதை மையப்படுத்திதான் சீன வானொலி நிலையம் தூய தமிழில் தனது சேவையை வழங்கி வருகிறது. மக்களுக்கு எளிதாக புரியவேண்டும். அத்துடன் தூய தமிழ் பயன்பாடும் இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக இருக்கிறது. எனவே முடிந்தவரை பிறமொழி மற்றும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, செந்தமிழில் நிகழ்ச்சிகளை வழங்குவதையே எங்களின் முதன்மை கொள்கையாகக் கொண்டு சேவை புரிந்து வருகின்றோம். சிமெண்டு, கார், டாக்ஸி என்ற ஆங்கிலச் சொற்கள், தமிழர்கள் இன்றைக்கு அன்றாடம் பயன்படுத்துகின்ற சொற்களாக மாறியுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் கார் என்ற வார்த்தைக்குப் பதிலாக, சீருந்து, வாடகை சீருந்து என்ற சொற்களையே நாங்கள் எமது தமிழ் ஒலிபரப்பில் பயன்படுத்தி வருகின்றோம். அதுபோல கவுண்டவுன் டைமர் என்ற ஆங்கில சொற்களுக்கு தனியாக வரையறுக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் இல்லை. எனவே "இறங்குமுக நேரங்காட்டி" என்று புதிதாக சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தி வருகின்றோம். இச்செயல்பாட்டினை, தமிழ் மொழி பிற மொழிக் கலப்பில்லாமல் தொடர்ந்து வளர்வதற்கு எங்களுடைய பங்களிப்பாக நினைக்கின்றோம்.

பாரதியார் விழா

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு ஒரு விழாவை, இந்திய தூதரக அலுவலர்களின் துணையோடு சீன வானொலி தமிழ்ப் பிரிவு சிறப்பாக நடத்தியது. பெய்ஜிங்கிலுள்ள தமிழர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது, பாரதியார் இயற்றிய கவிதைகள் சிலவற்றை நாங்கள் பாடி மகிழ்ந்தோம். அவரது சமத்துவ எண்ணமும், விடுதலைத் தாகமும் எங்களைப் பெரிதும் கவர்ந்தன. பொதுவாகக் கூறின், அங்கு கூடிய பல சீனர்களுக்கு பாரதியார் பற்றிய நல்லதொரு அறிமுக விழாவாக அவ்விழா அமைந்தது.

தமிழர்களுடன் நட்புறவு

சீன வானொலி தமிழ்ப்பிரிவு மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமகிழ்வு அடைகின்றோம். இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா என தமிழர்கள் பரவிவாழும் நாடுகளில் எல்லாம் எமது தொடர்புகள் வளர்கின்றன. கடந்த 47 ஆண்டுகளாக சீன வானொலிக்கு அனுப்பப்படும் மொத்தக் கடித எண்ணிக்கையில் தமிழ்ப்பிரிவே அதிக முறை முதலாவது இடத்தையும் அல்லது இரண்டாவது இடத்தையும் அடைந்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்கள்படி இருபதாயிரத்திற்கு மேலான நேயர்கள் எமது தமிழ் ஒலிபரப்பை கேட்டு மகிழ்கின்றனர்.

கடிதப்பிரிவு

நேயர்கள் அனைவரின் கடிதங்களுக்கும் மின்னஞ்சல்களுக்கும் உடனடியாக பதிலளிக்கும் வகையில், கடிதப்பிரிவுக்கென தனிப்பட்ட பொறுப்பாளர்களை நியமித்து தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இலட்சக்கணக்கான கடிதங்கள், அன்றாடம் வந்து குவியும் மின்னஞ்சல்களை கையாளும் பணியை மிகவும் சரியாக செய்து நேயர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்றோம். இக்கடிதங்கள் வழியாக உள்ளூர் மொழிப் பயன்பாடுகளையும் எங்களால் அறிந்து கொள்ள முடிகின்றது.

நேயர் மன்றங்கள்

தமிழகத்தில் மட்டும் எம்மிடம் பதிவு செய்து கொண்ட 300- க்கும் கூடுதலான சீன வானொலி நேயர் மன்றங்கள் உள்ளன. பதிவு செய்யாமல் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நேயர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏறக்குறைய ஆண்டுதோறும் அனைத்து நேயர் மன்றங்களின் உறுப்பினர்களும் ஒன்று கூடி கருத்தரங்கை நடத்துவதன் மூலம், சீன வானொலி ஒலிபரப்பையும், அதன் செயல்பாடுகளையும் விவாதிக்கும் வழிமுறையாக உருவாகியிருக்கின்றது. தமிழ் நாட்டிலுள்ள பலரும் நேரடியாக சந்திக்கவும், கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், நட்புறவை வளர்த்துக் கொள்ளவும் உதவி அளிக்கும் மேடையாக இந்த நேயர் மன்ற கருத்தரங்குகள் பங்காற்றுகின்றன.

பொது அறிவுப் போட்டிகள்

நேயர்களின் ஈடுபாட்டையும் பங்கேற்பையும் அதிகரிக்க ஒவ்வோர் ஆண்டும் பொது அறிவுப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் நேயர்கள் அதிகமாக பங்கேற்பது எங்களை வியப்படையச் செய்துள்ளது. இத்தகைய போட்டிகள் மூலம், சீனாவை பற்றிய பல தகவல்களை நேயர்கள் ஆர்வமுடன் உள்வாங்கிக் கொள்கின்றனர்.

நேயர்களின் சீனப்பயணம்

ஆண்டுக்கொரு முறை சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்படும் நேயர் தமிழ்ப்பிரிவின் நேயராக இருக்க வாய்ப்பிருப்பின், தமிழ் நேயர் ஒருவர் சீனாவில் இலவசமாக பயணம் மேற்கொள்ள நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். ஏறக்குறைய பத்து நாட்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் இவர்கள் பல்வேறு நாட்டு நேயர்களோடு பழகும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

தவிர, தங்களது சொந்தப் பணிகளுக்காக சீனாவில் பயணம் மேற்கொள்ளும் சிலர், எமது நேயர்களின் மூலம் தொடர்பு கொண்டு எங்களை சந்தித்து மகிழ்வதுண்டு. சீனாவிற்கு வந்தபிறகு எங்களை தொடர்புக் கொண்டால் இயன்ற உதவிகளை நாங்கள் சளையாது வழங்கி வருகின்றோம்.

எமது பயணங்கள்

நேயர் மன்ற கருத்தரங்குகளின்போது தமிழகத்திற்கு பயணம் செய்து அதில் நேரடியாக கலந்து கொள்ளவே விரும்புகின்றோம். ஆனால் எல்லா ஆண்டும் இந்த முயற்சி வெற்றியடைவதில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்களை நேரடியாக சந்தித்து மகிழ்கின்றோம். முகமறியா நண்பர்களையும் தமிழக பண்பாட்டு அடையாளங்களையும் கண்டறிந்து உதவும் அரிய வாயப்பாக இப்பயணத்தை நாங்கள் கருதுகிறோம்.

மொழிபெயர்ப்பு உதவி

பல்வேறு சூழ்நிலைகளால், சட்ட வகையிலான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பலருக்கு மொழிபெயர்ப்பு சேவையையும் தமிழ்ப்பிரிவு வழங்கி வருகின்றது. அவர்களை பற்றிய தகவல் கிடைத்தவுடன் சீனாவில் அவர்கள் எங்கிருந்தாலும் நேரடியாக சென்று இயன்றவரை அவர்களுக்கு உதவ நாங்கள் முயற்சிக்கிறோம். சீனாவில் மொழியறியா தமிழ் மக்களின் குரலாக நாங்கள் இருப்பது, எமது உடன்பிறவா சொந்தகளுக்குச் செய்யும் கடமையாகவே கருதுகிறோம்.

சீன மொழிக்கல்வி

சீனாவின் கலைச் செல்வங்கள் தமிழ்நாட்டை அடைய தமிழர்கள் பலரும் சீன மொழியை அறிந்திருப்பது நல்லது என்ற நோக்கில் சீன மொழியையும் இயன்ற வழிகளில் அறிமுகம் செய்து வருகின்றோம். சீன மொழியை அறிந்து சீனா வந்து அதன் கலைச்செல்வங்களை தமிழ் நாட்டுக்கு கொண்டு செல்ல இது ஒரு சிறிய முயற்சி மட்டுமே. இத்தகைய மொழி மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற உறவுகள் நம்மிடைய அழியா தொடர்புகளாக மாற வேண்டும் என உளமார விரும்புகின்றேன்.

வெளியீடுகள்

நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள் மற்றும் புதிய தகவல்களோடு வெளியாகும் சீனத் தமிழொலிக்கு அப்பாற்பட்டு, சில புத்தகங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம். தமிழ் மூலம் சீனம் புத்தகம் இரண்டு பதிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. அவற்றை நேயர்கள் பயன்படுத்தும் விதமாக தயார் செய்து அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

வெளி ஊடகத் தொடர்புகள்

வெளிநாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் மக்கள் சீனாவை பற்றி அறிந்துகொள்ள உதவும் தமிழ்ச் செய்தி நிறுவனமாக சீன வானொலியை பலரும் கருதுகின்றனர். சீனாவை பற்றி நேர்மையான முறையில் அரசின் கருத்துகளை அறிய சீன வானொலித் தமிழ்ப் பிரிவையே அனைவரும் அணுகுகின்றனர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது, பிபிசி வானொலி எம்மோடு தொடர்பு கொண்டு ஒலிம்பிக் போட்டியின் செல்வாக்கு, முக்கியத்துவம், ஆயத்தப் பணிகள் ஆகியவை பற்றிய நிகழ்ச்சியை தயாரித்து ஒலிபரப்பியது.

2009 ஆம் ஆண்டு மே திங்கள் 12 ஆம் நாள் சீனாவின் சிக்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடுமையான வென்ச்சுவான் நிலநடுக்கத்தின்போது பி.பி.சி தமிழ்ச் சேவை எங்களிடமிருந்து செய்திகளைப் பெற்றதோடு மட்டுமன்றி, ஆறுதலும் தெரிவித்தது. நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணிகள் பற்றியும், சீன அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் போட்டி கண்டது.

2008 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 14 ஆம் நாள், திபெத்தில் வன்முறை கட்டவிழ்த்தவிட்டபோது, உலகமெல்லாம் தனது ஒளிபரப்பை விரிவாக்கிவரும் "ஆதவன் தொலைக்காட்சி" தொலைபேசி வழியாக செய்தியைப் பெற்று ஒளிபரப்பியது. அத்தோடு வென்ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், உடனடியாக எம்மோடு தொடர்பு கொண்டு தமிழ் மக்களுக்கு தெரிவித்தது. 2008 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தீபத்தொடரோட்டம் நடைபெற்றபோதும் எம்மை பேட்டி கண்டு ஒளிபரப்பியது.

சிங்கப்பூர் வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவும் எம்மோடு தொடர்புக் கொண்டு முக்கிய செய்திகளை பெற்று ஒலிபரப்பி வருகிறது.

இவ்வாறு பன்னாட்டு செய்தி ஊடகங்களுடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கு செய்திச்சேவையை அளித்து வருகின்றோம்.

உரையின் இறுதியாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுக, உலகில் தமிழ் பேசுவோர் அனைவரும் இன்பமாக வாழ்க என்று நான் என் ஆழ் மனதிலிருந்தே வாழ்த்துகின்றேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். நன்றி. வணக்கம்.


1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040