இக்கருத்தரங்கிற்கு, மன்ற செயலாளர் பல்லவி திரு. கே.பரமசிவன் முன்னிலை வகிக்க, மன்றத் தலைவர் திரு.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். பாண்டிச்சேரி மாநில சீன வானொலி நேயர் மன்ற செயலாளர் திரு. ஜி.இராஜகோபால் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், ஆண்டுக்கருத்தரங்கு இனிதே துவங்கியது. வரவேற்புரைக்குப் பின், திரு.எஸ்.செல்வம் தலைமை உரையை வழங்கினார். அதில், கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாளிரவு, பெய்ஜிங்கில் முனைவர் ந.கடிகாசலம் அவர்களை முதன்முதலாக சந்தித்தது பற்றி நினைவுகூர்ந்து, தமிழ்ப்பிரிவின் மூன்று பணியாளர்களான தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர், பாண்டிச்சேரியில் தமிழ்மொழி கற்க வந்ததன் நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறினார். அன்றி, சீன வானொலியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட முனைவர் ந.கடிகாசலம் மற்றும் கலைவாணன் இராதிகா ஆகியோரின் சீனப் பயண அனுபவங்களின் மீதான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, பல்லவி திரு.கே.பரமசிவன் உரையாற்றினார். 1986 ஆம் ஆண்டில், அவரும், காலஞ்சென்ற ஒய்.எஸ்.பாலு அவர்களும் இணைந்து மேற்கொண்ட முதலாவது சீனப் பயணம் பற்றியும், பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்ப்பிரிவின் அப்போதைய தலைவர் திரு.எஸ்.சுந்தரன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம் துவக்கியது பற்றியும் சுவைபட விளக்கிக் கூறினார்.