பின்னர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முனைவர் ந.கடிகாசலம் அவர்களின் உரை துவங்கியது. நகைச்சுவையுடன் அதே வேளையில் கருத்துச் செறிவுடன் பல்வேறு தகவல்களை நேயர்களிடையே அவர் பகிர்ந்து கொண்டார். 1983 ஆம் ஆண்டு, சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியில் சேர்ந்து, நிகழ்ச்சிக் கட்டமைப்பில் மேற்கொண்ட சீர்திருத்தம் முதல், அண்மையில் அவர் மேற்கொண்ட சீனப் பயணம் வரை, பல்வேறு செய்திகளை அவர் நன்றாக எடுத்துக் கூறினார். மூன்று கட்டங்களாக, மொத்தம் 12 ஆண்டுகள் சீன வானொலியில் ஆற்றிய பணியின்போது, சீனாவின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கண்கூடாகக் கண்டவர் அவர். எனவே, அவரின் அனுபவ உரை, நேயர்களை கட்டிப்போட்டது.
அடுத்து, சீன வானொலியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகின் பத்து சிறந்த நேயர்கள் மன்றங்களுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் பிரதிநிதியாக, சீனாவில் இத்திங்களின் துவக்கத்தில் பயணம் மேற்கொண்ட திரு.சு.கலைவாணன் இராதிகா அவர்கள், உணர்வுபூர்வமாக தம் சீனப் பயண அனுபவத்தை எடுத்துக் கூறினார். மக்கள்மாமண்டபத்தில் நடைபெற்ற விழா பற்றி எடுத்துரைத்த அவர், முதன் முதலாக மேற்கொண்ட விமானப் பயணம், பல்வேறு சீன உணவு வகைகள் பற்றி எடுத்துக் கூறியதுன், சீனாவின் பூசியன் மாநிலத்தில் மேற்கொண்ட பயண அனுபவங்கள் பற்றியும் நாள்வாரியாக விளக்கினார். அன்றி, தாம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி பற்றியும் நேயர்களிடம் அவர் தெரிவித்தார். உரையின் நடுவே, விழாவில் தாம்பெற்ற அழகிய கோப்பை மற்றும் சான்று ஆகியவற்றையும் அவர் காட்டினார். நேயர்கள் அனைவரும், அழகான கோப்பையை கண்டு களித்தனர்.