ஹெய்ஹா ஆறு, தியென்ச்சின் மாநகரத்தின் தாய் ஆறாக கருதப்படுகிறது. அதன் மொத்த நீளம், 72 கிலோமீட்டராகும். இரவில் படகு சவாரி செய்து ஹெய்ஹா ஆற்றங்கரையின் காட்சிகளைக் கண்டுரசிப்பது, மிகவும் வரவேற்கப்படும் சுற்றுலா தெரிவாக மாறியுள்ளது.
படகுப் பயணம், துறைமுகத்திலிருந்து தியென்ச்சின் கண் எனும் இராட்டினம் வரை நடைபெறும். மொத்தமாக சுமார் 1 மணி நேரம் தேவைப்படும். தியெச்சின் தொடர்வண்டி நிலையம் என்ற துறைமுகம், பயணத்தின் துவக்கமாகும். இங்கு, லுங்மென் மாளிகை பேரங்காடி, வெளிநாட்டுக் கட்டிடத்தொகுதிகள், நவீனமயமான பாலம் முதலியவை அமைந்துள்ளன. பயணிகளைத் தவிர, தியெச்சின் உள்ளூர் மக்களும் இங்கு வருவதை மிகவும் விரும்புகின்றனர். பயணத்தின்போது, ஹெய்ஹா ஆற்றின் மேல் அமைந்துள்ள சிங்கப் பாலம், விடுதலைப் பாலம் முதலிய தனிச்சிறப்புடைய பாலங்களையும் பார்க்கலாம். தவிர, இரு கரைகளில் அமைந்துள்ள இத்தாலி, ஹங்கேரி முதலிய நாடுகளின் பாணியுடைய கட்டிடங்களைப் பார்க்கலாம். வானுயர நிமிர்ந்து நிற்கின்ற மாளிகைகள், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அலங்கார விளக்குகள் வீசுகின்ற ஒளி, நீரில் பிரதிபலிக்க அழகாக காட்சியளிக்கின்றது. இறுதியில், தியென்ச்சின் கண் எனும் இராட்டினத்தைக் கண்டுரசிக்கலாம். அதன் விட்டம், 110 மீட்டராகும். அது, தியென்ச்சின் மாநகரத்தின் சின்னமாக மாறியுள்ளது. இங்கிருந்து படகு துறைமுகத்துக்குத் திரும்பி பயணம் நிறைவடையும். நீங்கள் நேரில் ஹெய்ஹா ஆற்றின் அழகான காட்சியைக் கண்டுரசிக்க வரவேற்கிறோம்.