• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஈர்ப்பு தன்மை வாய்ந்த சீனா]

சீனாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்கள்

சீனா, பரந்த நிலப்பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்ட நாடு. பல்வேறு நகரங்களின் கட்டுமானத்துக்கும் வேறுபட்ட தனிச்சிறப்பியல்பு உண்டு. வட சீனாவில் தலைநகர் பெய்சிங்கும் கிழக்கு சீனாவில் பொருளாதார மையமான ஷாங்கையும் அமைந்திருக்கின்றன. மேற்கு பகுதியில் அழகான இயற்கை காட்சியும் தெளிவான சிறுபான்மை தேசிய இனச் சிறப்பியல்பும் படைத்த லாசா நகரம் இருக்கின்றது. தெற்கு பகுதியில், ஆண்டு முழுவதும் வசந்தம் வீசும் குன்மிங் நகரம் உண்டு. எழில்மிக்க, வளமான நகரங்கள் முத்து போல, சீனாவின் 96 லட்சம் சதுரக் கிலோமீட்டர் பூமியில் பரந்துகிடக்கின்றன.

சீனாவில், இப்போது, மொத்தம் 137 தலைசிறந்த சுற்றுலா நகரங்கள் உள்ளன. அவற்றில், ஷாங்கை, பெய்சிங், தியன்ஜின், சுங்சிங், சென்சென், ஹாங்சோ, தாலியன், நான்ஜிங், சியாமென், குவாங்சோ, செங்து, சென்யாங், ஜிங்தௌ, நிங்போ, சிஆன், ஹார்பின், சினான், சாங்சுன், லாசா ஆகியவை இடம்பெறுகின்றன. தவிர, ஹார்பின், ஜிலின், செங்சோ, சௌசிங், லியூசோ, ஜிங்தௌ உள்ளிட்ட பல பத்து புகழ்பெற்ற வரலாற்று பண்பாட்டு நகரங்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

பெய்ஜிங்

சீனாவின் தலைநகரான பெய்சிங் சீனாவின் அரசியல் மற்றும் பண்பாட்டு மையமாகும். அது, வட சீன சமவெளியின் வடப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தாலியின் ரோம், ஸ்பெயினின் மாட்ரீட் ஆகிய நகரங்களுடன் பெய்சிங் பூகோளத்தின் ஒரே சம கோட்டில் இருக்கின்றது. காலநிலை, மித வெப்பமான பருவக் காற்றுப் பெயர்ச்சி காலநிலையாகும். குளிர்காலமும் கோடைகாலமும் நீளமாக இருக்கின்றன. வசந்த காலம், இலையுதிர் காலம் ஆகியவை குறுகியதாகவும் வறண்டதாகவும் இருக்கின்றன. அதன் ஆண்டு சராசரி வெப்பம் 11.8 டிகிரி சென்டிகிரேட்.

பெய்சிங் மிகவும் நீண்டகால வரலாறுடையது, வசந்த மற்றும் இலையுதிர் காலகட்டத்திலும் போர் காலத்திலும் (கி. மு 770ஆம் ஆண்டு முதல் கி. மு 221ஆம் ஆண்டு வரை) பெய்சிங் குறுநில மன்னராட்சிகளின் தலைநகரமாக இருந்தது. QIN வம்ச ஹான் வம்சக் காலத்திலும் மூன்று மன்னராட்சிக் காலத்திலும் பெய்சிங் வட சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. JIN வம்சத்தின் ஆட்சிக் காலம் முதல் பெய்சிங் சீன நாட்டின் தலைநகரமாக மாறியது. அதையடுத்து, YUAN, MING, QING ஆகிய மூன்று வம்சங்களின் அரசுகளும் பெய்சிங்கை தலைநகராக நிறுவின. மொத்தம் 34 பேரரசர்கள் இங்கு இருந்து, முழு சீனைவையும் ஆட்சிபுரிந்தனர்.

நவசீனா நிறுவப்பட்ட பின், குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் பெய்சிங் மாநகரில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. பல்வேறு நவீன கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வெளிநாடுகளுடனான பரிமாற்றம் இடைவிடாமல் அதிகரித்துவருகின்றது. தற்போது, உலகின் மாபெரும் நகரங்களின் வரிசையில் பெய்சிங்கும் விரைவாக சேர்ந்துவருகின்றது. இங்கு, வரலாற்று பாணியும் நவீனத் தோற்றமும் சிறந்தமுறையில் ஒன்றிணைந்துள்ளன. பெய்சிங் பல்வேறு நாடுகளின் பயணிகளை ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பெய்சிங் மாநகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு பயணிகளும் கோடிக்கணக்கான உள்நாட்டு பயணிகளும் வந்துள்ளனர்.

நீண்டகால வரலாறு, பெய்சிங் மாநகரத்துக்கு ஏராளமான தொல் பொருட்களையும் சிதிலங்களையும் பல்வகை பண்பாட்டுக் காட்சித் தலங்களையும் விட்டுச்சென்றுள்ளது. வரலாற்றுக் காட்சித் தலங்களை நீங்கள் காண விரும்பினால், பெரும் சுவரைச் சென்று பார்க்கலாம், பெரிய அளவிலான மிக்க அரண்மனையான தடுக்கப்பட்ட நகரையும் பார்வையிடலாம், அல்லது கோடைகால மாளிகை, பெய்ஹை பூங்கா,சியாங்சான் பூங்கா, மற்றும் மோட்சக் கோயிலையும் சுற்றி பார்க்கலாம். அங்குள்ள அழகான காட்சிகளும் கம்பீரமான கட்டடங்களும் தங்களின் கண்ணுக்கு விருந்தாகிவிடும். சீனாவின் பண்டைகால நாகரிகத்தையும் புகழ்பெற்ற பிரமுகர்களையும் பற்றி அறிய விரும்பினால், நீங்கள் காலமான பிரமுகர்களின் விசிப்பிடங்களைச் சென்று பார்க்கலாம். பெய்சிங் ஆப்பரா எனப்படும் இசை நாடகத்தை கேட்டு ரசிக்கலாம்.சீனாவின் அரசியல், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், இராணுவம் முதலிய துறைகளிலான வளர்ச்சியை அறிய விரும்பினால், பெய்சிங்கிலுள்ள நூறு அருங்காட்சியகங்களைப் பார்க்கலாம். இயற்கை காட்சியைக் கண்டுக்களிக்க விரும்பினால், நீங்கள் பெய்சிங்கின் புறநகரிலுள்ள அழகான ஆறுகளையும் மலைகளையும் பார்க்கலாம்.

தற்போது பெய்சிங்கில், 4Aநிலை இயற்கை காட்சி இடங்கள் வருமாறு: மோட்சக் கோயில், மிங் கல்லறை, கோடைகால மாளிகை, பெய்சிங் கடல் விலங்கு அகம். பெரும் சுவர், பெய்ஹாய்-சிங்சான் பூங்காக்கள், சீனத் தேசிய இனப் பூங்கா, சீன அறிவியல் தொழில்நுட்ப அகம், பெய்சிங் விலங்கு காட்சியகம், பெய்சிங் தாவரப் பூங்கா.

சி ஆன்

சி ஆன் நகரம், சீனாவின் ஷென்சி மாநிலத்தின் தலைநகரமாகும். வட மேற்கு சீனாவில் இது அமைந்துள்ளது. வட மேற்குப் பகுதி மற்றும் இதர உட்புற மாநிலங்களின் அரசியல், பொருளாதார மற்றும் போக்குவரத்து மையமாகும்.

சீனாவின் 6 பண்டைகால நகரங்களில் (சி ஆன், லோயாங், நான்சிங், கைபெங், ஹாங்சோ, பெய்சிங்) சி ஆன் நகரம் தான் மிகவும் முன்னதாக கட்டப்பட்டது. மிக அதிக மன்னர் வமிசங்கள் இங்கு, தலைநகரை நிறுவின. வரலாற்று பண்பாட்டில் இது மிகவும் புகழ்பெற்றது. சிசோ, ச்சின், சிஹான், பெய்சோ, சுய், தாங் உள்ளிட்ட பத்து வமிசங்களின் அரசுகள் சி ஆனை தலைநகராக நிறுவின. எனவே, பல்லாயிரம் ஆண்டு வரலாறுடைய இந்த நகரம் சீன வரலாற்றில் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. இதற்கு இதர நகரங்கள் ஒப்பாகாது.

உலகின் நான்காவது பண்டை நகரான சி ஆன் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். உலகின் எட்டாவது அற்புதம் என அழைக்கப்பட்ட சின் சு ஹுவாங் பேரரசரின் 6000க்கும் அதிகமான சுடுமண் போர்வீரர்களின் உருவச் சிலைகள் இந்நகரின் லன்துங் பகுதியில் இருக்கின்றன. 20ஆம் நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு இது ஆகும். தவிர, தாயான் கோபுரம், ஹுவா சிங் ச்சி, ஹுவா ஷான் மலை முதலிய இயற்கை காட்சி இடங்களும் காணப்படுகின்றன.

லாசா

லாசா நகரம் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாகும். அதன் மொத்த நிலப்பரப்பு 29 ஆயிரத்து 52 சதுர கிலோமீட்டராகும். இமய மலையின் வட பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தில் தெளிவான வானிலை அதிகம். மழை குறைவு, குளிர்காலத்தில் கடும் குளிர் இல்லை, கோடைகாலத்தில் கடும் வெப்பமும் இல்லை. பீடபூமியின் பருவ காற்றுடன் கூடிய வறண்ட காலநிலை அங்கு நிலவுகின்றது. அதன் ஆண்டு சராசரி வெப்பம் 7.4 டிகிரி சென்டி கிரேட். ஜூலை, ஆகஸ்ட். செப்டம்பர் ஆகிய மூன்று திங்களில் மழை பெய்வது வழக்கம். மழை பொழிவு அளவு 500 மி. மீட்டராகும். ஆண்டுமுழுவதும் 3000 மணி நேரம் சூரிய ஒளி இங்கு கிடைக்கிறது. எனவே, சூரிய ஒளி நகர் என்றும் இது அழைக்கப்படுகின்றது. தெளிவான காற்று, ஒளிமயமான சூரிய ஒளி, பகலில் மித வெப்பம், இரவில் குளிர்ச்சி ஆகியவற்றினால், கோடைகாலத்தில் ஓய்வு எடுக்கும் நல்ல இடமாக இது விளங்குகின்றது.

லாசா, உலகின் உச்சி என்று அழைக்கப்படும் சிங்ஹை-திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 3600மீட்டர் உயரத்தில் இருப்பதனால், காற்று அழுத்தம் போதாது, காற்று குறைவு, காற்றில் பிராணவாயும் விகிதம், இதர இடங்களில் இருப்பதைவிட 25விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை குறைவாகும். எனவே, பீடபூமிக்கு தற்காலிகமாக வருகிறவர்களுக்கு, தலைவலி, மூச்சுத் திணறல் முதலிய நிலைமை ஏற்படுவதுண்டு. லாசாவுக்கு வந்துசேர்ந்த முதல் நாளில் சற்று ஓய்வு எடுத்தால், சரியாகிவிடும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, திபெத்தில் சுற்றுலா செய்வதற்கு மிக சிறந்த காலமாகும்.

திபெத் மொழியில், லாசா என்றால், தேவ தூதர் வசிக்கும் புனித இடம் என்று பொருள். லாசா நீண்டகால வரலாறுடையது, மத பண்பாட்டு சூழல் அதிகம். நகரப்புறத்தில், தாசௌ கோயில், பாகோ வீதி, போத்தலா மாளிகை ஆகிய முக்கிய காட்சித்தலங்கள் உள்ளன.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040