இந்த ஒலியை பல ஆப்பிரிக்க நேயர்கள் நன்றாக அறிந்து கொண்டுள்ளனர் என்று நம்புகின்றோம். சீன வானொலி கிஸ்வாகிலி பிரிவைச் சேர்ந்த மூத்த அறிவிப்பாளர் சென் லியேன் யிங் அம்மையார் 1980ம் ஆண்டுகளில் பதிவு செய்த ஒலிப் பதிவு இதுவாகும். இந்த இனிமையான ஒலிப்பதிவு இன்று வரை கிஸ்வாகிலி ஒலிபரப்பில் பயன்படுத்தப்படுகின்றது. கடந்த சுமார் 40 ஆண்டுகளில் சென் அம்மையாரும் அவரது சகப் பணியாளர்களும் நாள்தோறும் இனிமையான கிஸ்வாகிலி மொழியில் ஆப்பிரிக்க நேயர்களுக்கு சீனா பற்றிய செய்திகளை வழங்கி, சீன-ஆப்பிரிக்க நட்புறவை பரவல் செய்து வருகின்றனர். நெடுந்தொலைவில் அமைந்துள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தில் கென்யா, தான்சானியா முதலிய நாடுகளின் நேயர்கள் நாள்தோறும் சீன வானொலி ஒலிபரப்பைக் கேட்டு ரசிக்கின்றனர். அவர்கள் சென் அம்மையாருக்கு MaMa Chen என்ற இனிமையான பெயரை சூட்டினர். சென் அம்மையார் கூறியதாவது
ஒரு முறை கென்யாவிலுள்ள ஐ.நாவின் நிறுவனம் ஒன்றை பார்வையிட்டோம். பல ஆப்பிரிக்கர்கள் கிஸ்வாகிலி மொழியில் பேசியதைக் கேட்டேன். ஆகையால், முந்வந்து அவர்களுடன் உரையாடினேன். என் குரலைக் கேட்டதும், நான் சீன வானொலியின் அறிவிப்பாளர் என்று அவர்கள் கண்டறிந்தனர். இது உண்மை தான். ஆப்பிரிக்காவில் அனைவரும் Mama Chenஐ அறிந்து கொண்டுள்ளனர் என்று சொல்லலாம் என சென் அம்மையார் கூறினார்.
சீன வானொலிக் கட்டிடத்தின் 2வது மாடியில் வானொலி வரலாறு பற்றிய ஒரு கண்காட்சியிடம் அமைந்துள்ளது. ஒவ்வொரு மொழிப் பிரிவுக்கு ஒரு கண்காட்சிப் பெட்டி உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நேயர்கள் வழங்கிய அன்பளிப்புக்கள், நினைவுப் பொருட்கள், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிழற்படங்கள் ஆகியவை இந்தப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வந்த நேயர்களின் உளமார்ந்த வாழ்த்துக்களை இவை காட்டுகின்றன.