1961ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜப்பானின் பீகிங் வானொலி நேயர் மன்றம் சீன வானொலியின் முதலாவது வெளிநாட்டு நேயர் மன்றமாகும். இதுவரை 5 கண்டங்களைச் சேர்ந்த சீன வானொலியின் வெளிநாட்டு நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 3165 ஆகும். இவை அனைத்தும் நேயர்களால் உருவாக்கப்பட்டவை. சீன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் சீனாவை அறிந்து கொண்டு, சீனாவுடனான நட்புறவை முன்னேற்றுவது அந்த நேயர் மன்றங்களின் குறிக்கோளாகும். அவற்றில் சிற்றலை நேயர் மன்றங்கள், இணையப் பயன்பாட்டாளர் மன்றங்கள் மற்றும் பண்பலை நேயர் மன்றங்கள் உள்ளன. இந்த நேயர் மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சில பத்து முதல் பத்தாயிரம் வரை.
சீன வானொலியின் வளாகத்தின் தென்கிழக்குப் பகுதியில் 200 சதுர மீட்டர் பரப்புள்ள செரி பூ மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் திங்களில் இங்கே அழகான காட்சி மக்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும். 1996ம் ஆண்டு ஜப்பானின் நக்கானொ மாவட்ட நேயர் மன்றத்தின் உறுப்பினர்கள் அவற்றை சீன வானொலிக்கு அன்பளிப்பாக வழங்கினர். ஜப்பானிய மொழிப் பிரிவின் தலைவர் பூஃ யீங் அம்மையார் கூறியதாவது
மூத்த நக்கானொ நேயர் ஒருவர் ஜப்பானிலிருந்து இந்த 20 செரி மரக் கன்றுகளை சீனாவுக்குக் கொண்டு வந்தார். ஆண்டுதோறும் நக்கானொ மாவட்ட நேயர்கள் இந்தச் செரி மரங்களைப் பார்க்க இங்கே சிறப்பாக வருவதுண்டு. இந்த செரி மரங்கள் சீன-ஜப்பான் மக்களுக்கிடை நட்புறவை வெளிப்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த பெய்ஜிங் மாநகரம் 2001ம் ஆண்டில் விண்ணப்பம் செய்த போது, இலங்கை நேயர் மன்றம் பெய்ஜிங்கை ஆதரிக்க 50 ஆயிரத்துக்கு அதிகமானோரை திரட்டி கையொப்ப நடவடிக்கை நடத்தியது. இந்த 2 கையொப்பப் படைப்புகள் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக் கமிட்டியிடம் வழங்கப்பட்டன. 2008ம் ஆண்டு சி ச்சுவான் வென் சுவான் பிரதேசத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த போது, தமிழ் நேயர்கள் சீன வானொலிக்கு ஆறுதல் கடிதங்களை அனுப்பினர். நூற்றுக்கு மேற்பட்ட நேயர்கள் சீன வானொலி மூலம் நன்கொடை அனுப்பினர்.