தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலம், சிச்சுவான் மாநிலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் ஆகியவற்றின் காடுகளில், அற்புதமான பாதை ஒன்று இருக்கிறது. இப்பாதை, சாமா குதாவ் என்ற பழங்கால தேயிலை குதிரை பாதை என்று அழைக்கப்படுகின்றது.
சாமா குதாவ், உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்து, நாகரீகத்தையும் பண்பாட்டையும் பரவல் செய்யும் பழங்காலப் பாதைகளில் ஒன்றாகும். இப்பாதை, யுன்னான் மாநிலத்தின் பூ அர் முதல், தா லி, லீ சியாங், செங்குதான பள்ளத்தாக்கு, ஷெகரிலா ஆகிய இடங்கள் வழியாக, இமய மலை பிரதேசத்தில் அமைந்துள்ள லாசா வரை சென்றது. இந்த பாதையின் இன்னொரு பகுதி, லாசாவிலிருந்து நேபாளம் மற்றும் இந்தியா வரை விரிந்தது. குதிரையில் வர்த்தகம் செய்வோர் மட்டும் இப்பாதையில் போய் வந்தனர். அவர்களைப் பொறுத்த வரை, இப்பாதையைத் தவிர, எந்த தெரிவும் இல்லை. அவர்கள் யுன்னான் பிரதேசத்திலிருந்து தேயிலையை ஏற்றிச்சென்று, 3 மாதப் பயணத்துக்குப் பிறகு தான் லாசா சென்றடைய முடியும். தேயிலைக்கு திபெத் பிரதேசத்தில் வளர்ந்த குதிரைகளை மாற்றாகப் பெறுவது, அவர்களின் ஒரே ஒரு நோக்கமாம். இதன் காரணமாக, இப்பாதை, தேயிலை-குதிரை பாதை என அழைக்கப்படுகிறது.
வட பகுதியின் நாடோடி இனங்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் பொருட்டு, சீன வரலாற்றில் உள்ள பல்வேறு வம்சக்காலங்களில், அதிகமான தலைசிறந்த குதிரைகள் தேவைப்பட்டன. திபெத், முதல் தர போர் குதிரைகளின் பிறப்பிடமாக இருந்தது. டாங் வம்சத்தின் போது, இளவரசி வென் செங், திபெத்தின் Songzain Gamboவைத் திருமணம் செய்து கொண்டார். இளவரசி வென் செங் தேயிலையைத் திபெத்துக்குக் கொண்டு சென்றார். இதற்கு பின் தேயிலை திபெத் பிரதேசத்தில் படிப்படியாக மக்களின் நேசிப்பைப் பெற்றது. "தேயிலையைக் கொடுத்து, குதிரையை வாங்குவது" என்ற வியாபார வழிமுறை மூலம் அதிகமான குதிரைகளை வாங்க டாங் வம்சத்தின் ஆட்சியாளர்கள் விரும்பினர். இதனால் அதிகமான வணிகர்கள் குதிரைகளின் மூலம் தேயிலை வியாபாரத்தில் விரைவாக ஈடுபடத் துவங்கினர். இவ்வியாபாரம் மூலம் அவர்கள் அதிகமான பணம் சம்பாதித்து, அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தினர். கடந்த காலத்தில் குதிரை மூலம் வர்த்தகம் செய்வோர் ஒருவரின் பேத்தி Er Jing செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"முன்பு என் தாத்தா வியாபாரம் செய்ய, வெகு தூரத்திலுள்ள இடத்துக்கு அடிக்கடி சென்றார். அவரும், அவரது சக அணியாளர்களும் மலை பாதையில் செல்ல வேண்டியிருந்தது. இப்பாதை மிகவும் கரடுமுரடாக இருந்தது. தாத்தா ஊர் திரும்பிய பிறகு, எங்களுக்கு இனிப்புகள், அரிசி, இறைச்சி ஆகியவற்றைக் கொண்டு அளித்தார். இது எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது" என்றார் அவர்.