ஆண்டுதோறும் ஜூன் திங்கள் வியாப்பாளிகள் புறப்பட ஆயத்தம் மேற்கொண்டனர். வசந்தக்காலம் மற்றும் கோடைக்காலம், தேயிலை அமோக அறுவடை அடையும் காலமாகும். அதே வேளையில், மழைக்காலமும் வருகிறது. யுன்னான் மாநிலத்தின் தென் பகுதி ஆண்டு முழுவதிலும் ஈரமானது, இறுக்கமான காற்று கொண்டது. தேயிலையை ஏற்றிச்சென்ற பாதையில், தேயிலை உலர்ந்ததாக எடுத்துச் செல்வது இயலாதது. சில சமயங்களில் பாதையில், தேயிலை புளிக்கத் துவங்கியது. பயணத்தின் துவக்கத்தில், அந்த வியாப்பாளிகள், தேயிலை புளித்து, மஞ்சளாக மாறியதால் மனம் தளர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு எதிர்பாராதவாறு, பூ அர் தேயிலை நீண்டக்காலம் புளித்த பிறகு சுவையாக மாறியது. இதன் விலையும் பெரிதும் உயர்ந்தது.
அவர்கள் பயணம் மேற்கொள்ளும் போக்கில், குதிரைகள் இன்றியமையாதவை. புறப்படுவதற்கு முன், குதிரைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. இரண்டு முதிய குதிரைகளின் கழுத்தில் ஓசை எழுப்பும் மணி கட்டப்பட்டது. இவ்விரு முதிய குதிரைகளும் பயணத்துக்கு வழிகாட்டிச் சென்றன. யீ இன முதியவர் லீ தியன் லீன் முன்பு இவ்வணி உறுப்பினராக இருந்தார். அவர் கூறியதாவது:
"குதிரைகள் அணியில், தலைமை குதிரைகள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன. தேயிலை வர்த்தக அணியாளர்கள் தாமாக இக்குதிரைகளுக்குப் பயிற்சி அளித்தனர். தலைமை குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணி எழுப்பிய ஒலியைக் கேட்டு, இதர குதிரைகள் தலைமை குதிரைகளைப் பின்தொடர்ந்தன" என்றார் அவர்.