சீனாவின் தென் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள யுன்னான் மாநிலத்தின் சிஷுவாங்பான்னா தை இனத் தன்னாட்சி சோ மென்மையான அழகு வாய்ந்தது. சுற்றுலா தலம் என்ற முறையில் ஓரளவு முன்னதாக வளர்ச்சி அடைந்த இவ்விடம், யுன்னான் சுற்றுலாவுக்குச் சம பெயராக இருந்தது. ஆனால், சுற்றுலா வளங்களின் அளவுக்கு மீறிய வளர்ச்சியின் காரணமாக, சிஷுவாங்பான்னாவின் சுற்றுலாத் துறை வீழ்ச்சி அடைந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி இலக்கை யுன்னான் மாநிலம் முன்வைத்துள்ளது. இயற்கைச் சூழல் சுற்றுலா, சிஷுவாங்பான்னா சுற்றுலாத் துறைக்கான முக்கிய வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழல் சுற்றுலா என்றால், சுற்றுலாப் பயணிகள் இயற்கையோடு இயைந்து, சுற்றுலாப் பயணத்தில் இயற்கை பற்றியும் உயிரின வாழ்க்கை பற்றியும் அறிந்து கொண்டு, இது தொடர்பான அறிவியல் அறிவை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தையும் அறநெறியையும் வலுப்படுத்தி, மனிதருக்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவது என்பதாகும். இன்றைய நிகழ்ச்சியில், சிஷுவாங்பான்னாவுக்கு வாருங்கள். தனிச்சிறப்புமிக்க இயற்கைச் சூழல் சுற்றுலாவை எங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாம்.
சீனாவின் முழுமையான, சிறந்த பிரதிநிதித்துவம் வாய்ந்த மிகப் பெரிய வெப்ப மண்டல மழைக்காடு, சிஷுவாங்பான்னாவில் இருக்கிறது. அது, சிஷுவாங்பான்னாவின் மிகச் சிறப்பான சின்னமாகும். சிஷுவாங்பான்னா வெப்ப மண்டல மழைக்காட்டுப் பூங்காவிலுள்ள குங்கிலிய மரக் காட்சிப் பகுதி, இந்த மழைக்காட்டின் மையப் பகுதியாகும். அங்கே ஓவியம் போன்ற அழகு, பறவைகளின் பாடல் மற்றும் மலர்களின் நறுமணத்தை உணர்ந்து மகிழ முடிகிறது. அழிவு விளிம்பிலுள்ள குங்கிலிய மரத்தின் விதை, 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் நாள் தியன்கொங்-1 விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.