"மிகப் பரபரப்பாகவும், வேடிக்கையாகவும் உணர்கின்றேன். தரையில் பார்த்த போது இவ்வளவு உயரம் என உணரவில்லை" என்று சுற்றுலாப் பயணி ஒருவர் கூறினார்.
"தூரத்திலுள்ள மரங்களை மட்டுமே பார்த்தேன். கீழே நோக்கி பார்க்கத் துணிச்சல் இல்லை. மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். மிகவும் சுவாரசியமானது" என்று மற்றொரு சுற்றுலாப் பயணி கூறினார்.
வானப் பாதையிலிருந்து இறங்கிய சுற்றுலாப் பயணிகள் இருவர் செய்தியாளரிடம் தங்களது உணர்வுகளை வர்ணித்தனர். சிஷுவாங்பான்னா தேசிய இயற்கை புகலிட நிர்வாகம் அமெரிக்க இயற்கைப் பாதுகாப்பு கழகத்துடன் ஒத்துழைத்து, குங்கிலிய மரக் காட்டில் 2500 மீட்டர் நீளமுடைய வானப் பாதை ஒன்றை அமைத்துள்ளது. உலகில் மிக உயரமான, சீனாவில் மிக நீளமான இந்த வானப் பாதையில், வெப்ப மண்டல தாவரங்கள் அனைத்தையும் பார்வையிடலாம். மேலும், இந்தக் காட்டில் 1000 மீட்டர் நீளமான கல் பாதை இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள், இவ்விரு பாதைகளில், இயற்கைப் புகலிடத்திலுள்ள பசுமையான காட்சிகளைப் பார்வையிடும் அதேவேளை, இயற்கைச் சூழல் சுற்றுலாவின் சாராம்சத்தையும் அனுபவிக்க முடியும்.
வளர்ச்சிப் போக்கில் மழைக்காட்டைப் பாதுகாப்பது குறித்து, குங்கிலிய மரக் காட்சி பகுதி அலுவலகத்தின் தலைவர் சாவ்வெய் கூறியதாவது—
"சேவை வசதிகள் அனைத்தும் மழைக்காட்டின் வெளியே அமைக்கப்பட்டுள்ளன. கழிவு நீர் கையாளுதலுக்காக 8 இலட்சத்து 50 ஆயிரம் யுவான் முதலீடு செய்துள்ளோம். சுற்றுலாத் துறை மழைக்காட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை இயன்ற அளவில் குறைக்க வேண்டும் என விரும்புகின்றோம். சுற்றுலாவுக்கும் உயிரின வாழ்க்கைக்கும் இடையிலான மாசற்ற சுழற்சி எங்கள் நோக்கமாகும்" என்று அவர் கூறினார்.