சீன வானொலியும் உலகத் தமிழ் வானொலிகளும் – ஒரு ஒப்பாய்வு. - தங்க.ஜெய்சக்திவேல்
வானொலி என்ற இந்த பழமையான ஊடகம் இன்றைய சமூக வலைப்பின்னல் (Social Networking) காலத்தில் தனக்கென ஒரு இடத்தினை பிடிப்பது என்பது அசாதாரணமான காரியம். அதுவும் சிற்றலை வானொலி என்ற இந்த ஊடகம் மக்கள் மனதினில் இடம் பிடிக்கவேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதல்ல. காரணம் நாம் அனைவரும் அறிந்தது தான். இன்றைய அவசர உலகத்தில் வானொலியைக் கேட்பதற்கு என ஒரு தனியான நேரத்தினை ஒதுக்கமுடியாது. அப்படியே ஒதுக்கினாலும் சிற்றலை வானொலிகளை மிக எளிதில் இடையூரு இல்லாமல் கேட்டுவிட முடியாது. இப்படியான பல இடையூறுகளுக்கு மத்தியில் தான் நம் சீன வானொலி தனது பொன்விழாவினை சிறப்பாக கொண்டாடுகிறது.
ஒரு தனி மனித வாழ்வில் 50 ஆண்டுகள் என்பது சாதாரணமானது அல்ல. காரணம் இந்த 50 ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களை சீன வானொலி சந்தித்து இருக்கும். அவற்றில் பல வெற்றி தோல்விகளும் இருக்கலாம். அவை அனைத்தினையும் சவாலுடன் எதிர்கொண்டு இன்று வெற்றியுடன் பீடுநடைப் போட்டுக்கொண்டு இருக்கிறது சீன வானொலி.
சீன வானொலி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தின் போது வேறு பல வளர்ந்த நாடுகளால் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலிகளின் தமிழ் ஒலிபரப்புகள் நிருத்தப்பட்டுவிட்டன. அவற்றில் முக்கியமாக வாய்ஸ் ஆப் அமெரிக்கா, (Voice of America) வாய்ஸ் ஆப் ரஷ்யா, (Voice of Russia) சிங்கப்பூர் வானொலி (Media Corp), மலேசிய வானொலி (Voice of Malaysia) என சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்வதானால், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையும் கூட தமிழகத்திற்கான சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திக் கொண்ட இந்த தருணத்திலும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து தனது சேவையைச் செவ்வனே செய்து வருகிறது சீன வானொலி.