• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இளம் சீனவியலாளர்களுக்கான முதலாவது மேற்படிப்பு வகுப்பு
  2014-09-23 16:54:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், சீன மொழியைக் கற்றுக் கொண்டு, சீனப் பண்பாடு மீது பேரார்வம் கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் மென்மேலும் அதிகரித்துள்ளனர். சீனப் பண்பாட்டு அமைச்சகமும், சீனச் சமூக அறிவியல் கழகமும் கூட்டாக நடத்திய "2014ஆம் ஆண்டு இளம் சீனவியலாளர்களுக்கான முதலாவது மேற்படிப்பு வகுப்பின்" துவக்க விழா அண்மையில் பெய்சிங்கில் நடைபெற்றது. அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, பல்கேரியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 18 தலைசிறந்த சீனவியலாளர்கள் சீனாவுக்கு வந்து இவ்வகுப்பில் சீனப் பண்பாடு பற்றி ஆய்வு செய்து விவாதித்தனர். தற்போது சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் வெளிநாட்டவர்கள் அதிகரித்து வருவதுடன், உலகளவில் சீனப் பண்பாட்டின் செல்வாக்கை உயர்த்தும் பொருட்டு, பல்வேறு நாடுகளில் சீனப் பண்பாட்டு மையத்தை நிறுவ வேண்டும் என்று இந்த சீனவியலாளர்கள் வகுப்பில் கருத்து தெரிவித்தனர். தவிர, மேலதிக சீன அறிஞர்கள் வெளிநாடுகளில் பிரச்சாரம் நடத்துவதற்கு ஊக்கமளித்து, வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு வந்து, சீனப் பண்பாட்டை தாமாக அனுபவிப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது, சீனாவின் சர்வதேச தகுநிலையின் உயர்வுடன், உலகளவில் சீனவியல் ஆய்வு மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசியா ஆகிய பிரதேசங்களின் அறிஞர்கள், சீனா மீது ஆர்வங்கொண்டுள்ளனர். அவர்களில், பலர் சீனப் பாரம்பரியப் பண்பாடுகளில் பேரார்வமடைகின்றனர். பலர், நவீன சீனாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகினறனர். மூத்த சீனவியலாளர்கள் முதியவராகியுள்ளனர். சீனா மீது இளம் தலைமுறை சீனவியலாளர்களின் புரிந்துணர்வை அதிகரிப்பதும், சீனப் பண்பாட்டின் வெளிநாட்டுப் பரிமாற்ற நிலையை உயர்த்துவதும், தற்போது சீன மற்றும் வெளிநாட்டுச் சீனவியலாளர்கள் கவனம் செலுத்தும் முக்கிய அம்சமாகும்.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பலரேவா ஜெர்ஜீனா அம்மையாருக்கு வயது 31. அவர் சீன-பல்கேரியப் பண்பாட்டுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, சீன மொழியைக் கற்றுக்கொள்ளும் பல்கேரிய மக்கள் மென்மேலும் அதிகரித்துள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சீன மொழியை முக்கியமாக கற்றுக்கொள்பவர். பல்கேரிய மக்கள் சீனாவின் பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஒளிவீசும் சீன பண்பாடு மீதான பல்கேரிய மக்களின் புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில், மேலதிக சீன அறிஞர்கள் பல்கேரியாவுக்குச் சென்று, சீனப் பண்பாட்டு பற்றி அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பல்கேரியாவின் மூன்று பல்கலைக்கழகங்களில் சீன மொழி துறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சீன மொழி துறையிலிருந்து பட்டம் பெறுகின்றனர். பல்கேரியா, சிறிய நாடாக இருந்த போதிலும், சீன மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புவோர் அதிகம். இவ்வாண்டின் இறுதியில் சீனப் பண்பாட்டு மையம் பல்கேரியாவில் கட்டிமுடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிறுவனம் மிகவும் நல்லது என கருதுகிறேன். பல்கேரியாவில் கன்பிஃசியெஸ் கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கன்பிஃசியெஸ் கழகத்தில், சீன மொழி பாடம் முக்கியமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. பண்பாட்டு மையத்தில், சீன பேராசிரியர்கள், சீனப் பண்பாடு பற்றிய பிரச்சாரம் நடத்துவது, சீனப் பண்பாடுகளைப் பரவல் செய்வதற்குத் துணை புரியும். பல்கேரியாவில் மக்கள் சீனப் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் சீனப் பண்பாடு, தத்துவம் முதலியவை பற்றி அதிக புரிந்துணர்வு கொள்ளவில்லை. தொடர்புடைய சிறப்புத் துறையினர் பல்கேரியாவுக்கு வந்து, பல்கேரிய மக்கள் சீனப் பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும்" என்றார் அவர்.

41 வயதான யங்ஹு கோ அம்மையார், தென் கொரிய சுங்கியான்வான் பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய கல்லூரியின் ஆய்வாளராவார். சீனியர் பள்ளியில் கற்றுக்கொண்ட துவக்கத்தில் அவர் சீனப் பண்பாட்டில் அக்கறை செலுத்தத் துவங்கினார். சீனாவின் வளர்ச்சிபபோக்கில், மேலை நாட்டுக் கருத்துக்கள் உட்புகுத்தப்படும் அதே வேளையில், சீனத் தனிச்சிறப்புகள் வாய்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "பொது தூதாண்மை", "கலந்தாய்வு மூல ஜனநாயகம்", "பண்பாட்டு மென்மையான ஆற்றல்" ஆகிய கருத்துக்கள் சீனாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, சீனத் தனிச்சிறப்புடைய சில கருத்துக்கள், எடுத்துக்காட்டாக, இணக்க சமூகம், ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக்கள் தொடர்பான சமூக மற்றும் பண்பாட்டுச் சூழ்நிலையைப் புரிந்து கொள்வது, எதிர்காலத்தில் தென் கொரிய-சீன பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் கலந்தாய்வில் தாம் ஈடுபடுவதற்குத் துணை புரியும் என்று அவர் கருத்து தெரிவித்தார். கன்பிஃசியெஸ் கழகம் நிறுவப்பட்ட பின், மேலதிக தென் கொரிய மக்கள் சீன மொழியைக் கற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தென் கொரிய மாணவர்கள் மென்மேலும் சீனாவுக்கு வந்து, சீனாவின் வரலாறு மற்றும் பண்பாட்டை தாமாக அனுபவிக்க வேண்டும். இதன் மூலம், உலகில் சீனப் பண்பாட்டின் செல்வாக்கை உயர்த்த முடியும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"கன்பிஃசியெஸ் கழகம் மூலம், சீன மொழி முன்பை விட மேலும் பரந்துபட்ட அளவில் பரவல் செய்யப்பட்டுள்ளது. மேற்படிப்புக்காக சீனாவுக்கு வர தென் கொரிய அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அவர்கள் மேலும் ஆழமாக சீனாவை பற்றி புரிந்து கொள்வர் என்று கருதுகின்றேன். குறிப்பிட்ட சீன மொழி கருத்துக்களை கொரிய மொழியில் மொழிபெயர்க்கும் போது, சிக்கல் ஏற்படுகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை அதிகரிக்க நேரம் தேவைப்படுகிறது என்று கருதுகின்றேன்" என்றார் அவர்.

இந்த வகுப்பில் "சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி் நடைமுறைக்கு வந்ததற்கு பிந்தைய சீனச் சமூக வளர்ச்சி", "சீனப் பண்பாடு", சீன இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பு", "சீனாவின் உருவாக்கம் மற்றும் இதன் உரிமைப் பிரதேசத்தின் மாற்றம்" என்ற தலைப்பில் சீனாவின் அறிஞர்கள், இளம் சீனவியலாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தவிர, சீனச் சமூக அறிவியல் கழகம், அரண்மனை அருங்காட்சியகம், சீன நுண்கலை காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் இந்த இளம் சீனவியலாளர்கள் சோதனை பயணம் மேற்கொண்டனர்.

சீனா மீதான இளம் சீனவியலாளர்களின் புரிந்துணர்வை இந்நடவடிக்கை ஆழமாக்கி, உலகில் சீனப் பண்பாட்டின் பரவலை விரைவுபடுத்தி, உலக மக்கள் உண்மையான சீனாவை சரியாக புரிந்து கொள்வதற்கு துணை புரிய வேண்டும் என்று சீனத் துணைப் பண்பாட்டு அமைச்சர் திங் வெய் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவின் வளர்ச்சி உலகத்துடன் மென்மெலும் தொடர்பு கொண்டுள்ளது. சீனப் பிரச்சினைகள் ஆய்வுத் துறையில் மூத்த சீனவியலாளர்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். தற்காலத்தில், இளம், புதிய தலைமுறை சீனவியலாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் சீனாவின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகள் பற்றி பன்முகங்களிலும் சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகுப்பு பாடங்களில் ஒரு முக்கிய பாடம் இருக்கிறது. சீன, வெளிநாட்டு மொழி படைப்புகளின் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட இந்த இளம் சீனவியலாளர்களுக்கு இப்பாடம் ஊக்கமளிக்கிறது. உலகளவில் சீனப் பண்பாட்டின் பரவலை வலுப்படுத்தி, மேலதிக மக்கள் தற்கால சீனாவைப் புரிந்து கொள்ள உதவி செய்வது இவ்வகுப்பை நடத்தியதன் நோக்கமாகும்" என்றார் அவர்.

இளம் சீனவியலாளர்களுக்கான இரண்டாவது மேற்படிப்பு வகுப்பு, செப்டம்பர் 2 முதல் 24ஆம் நாள் வரை பெய்சிங்கில் நடைபெறும். பல நாடுகளைச் சேர்ந்த 40 இளம் சீனவியலாளர்கள் சீனாவுக்கு வந்து இவ்வகுப்பில் கலந்து கொள்வர் என்று தெரிய வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040