• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாட்டுப்புறப்பாடல்களை பாடும் பாட்டி
  2014-11-24 16:09:56  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜியாங் சி மாநிலத்தின் Shang Rao நகரில், யாவ் ஜின் நா என்னும் 85 வயதான முதியோர் வாழ்கின்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுப்புறப் பண்பாட்டுத் துறையில் அவர் ஈடுபட்டுள்ளார். 500 நாட்டுப்புறப்பாடல்களை அவர் சேகரித்து, இயற்றி, பாடியுள்ளார். உள்ளூர் மக்களால் நேசிக்கப்படும் அவர், Shang Rao நகரில், "நாட்டுப்புறப்பாடல்களைப் பாடும் பாட்டி" என அழைக்கப்படுகிறார்.

Shang Rao நகரின் பழைய பாணி கட்டிடத்தில், யாவ் ஜின் நா அம்மையாரின் தனிச்சிறப்பு மிக்க பாட்டொலி கேட்கிறது. அவர் பாடும் பாடல்களில், உண்மையான சுவையும், சொந்த ஊர் மண்ணின் மணமும் நிரம்புகின்றன. இப்பாடல்களைக் கேட்பதில், ஒருவித இன்பமான உணர்வு ஏற்படும் என்று யாவ் ஜின் நா அம்மையாரின் அண்டைவீட்டுக்காரர்கள் கூறினர்.

"ஆசிரியர் Yao பாடும் பாடல்கள், நகைச்சுவையானவை என்றும், இப்பாடல்கள் தனக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தருகின்றன" என்றும் அண்டைவீட்டுக்காரர் ஒருவர் கூறினார்.

1929ஆம் ஆண்டு, யாவ் ஜின் நா அம்மையார், ஒரு நாட்டுப்புறக் கலைஞர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அவர் நாட்டுப்புற இசை பண்பாட்டு சூழ்நிலையில் வளர்ந்தார். இதில், Chuan Tang Ban என்ற பழமைவாய்ந்த நாட்டுப்புற இசை நாடகம், அவரை பெரிதும் ஈர்த்து பாதித்தது. Chuan Tang Ban நாட்டுப்புற இசை நாடகம், ஜியாங் சி மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் பரவியுள்ளது. இது 500 ஆண்டுகள் வரலாறுடையது.

குழந்தைப் பருவத்தில், தனது தந்தை மற்றும் அண்ணனுடன் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று, Chuan Tang Banஐ அரங்கேற்றுவது, தம்மை பொறுத்த வரை மிக மகிழ்ச்சியான செயலாக இருந்தது என்று யாவ் ஜின் நா அம்மையார் கூறினார். "எனது தந்தையும் அண்ணனும், Chuan Tang Ban குழு உறுப்பினர்களே. அவர்களின் செல்வாக்கினால், நாட்டுப்புறப் பண்பாட்டை நேசிக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

யாவ் ஜின் நா அம்மையார் சில முறை நாட்டுப்புறப்பாடல்களைக் கேட்டல் போதும், அதை மனப்பாடம் செய்துவிட முடியும். அவர் பாடும் பாடல்களின் ராகம் மிகச் சரியானது. இதனால், அவர் அதிகப்படியான நாட்டுப்புறப் பாடல்களை நினைவில் வைத்து கொண்டுள்ளார். நாளுக்கு நாள், Shang Rao நாட்டுப்புறப் பாடல்களின் களஞ்சியம் மற்றும் வாழும் பண்பாட்டுச் சிதிலமாக அவர் மாறியுள்ளார்.

1962ஆம் ஆண்டு, ஜியாங் சி மாநிலத்தின் முதலாவது இசை வாரம் என்ற விழாவில் கலந்து கொண்ட அவர், "மாடுகளை அழைக்கும் பாடல்"என்ற ஒரு Shang Rao நாட்டுப்புறப்பாடலைப் பாடி, முதல் பரிசு பெற்றார். விவசாயிகள் மாடுகளை அழைக்கும் காட்சிகள் அவரது பாடல் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. இப்பாடல் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை ஒருசேர வென்றெடுத்தது. ஷாங்காய் இசைத் தட்டு நிறுவனம், அவர் பாடும் பாடல்களை இசைத் தட்டில் பதிவு செய்து, நாடு முழுவதிலும் பரவல் செய்தது. இதற்கு பின், புகழ் பெற்ற நாட்டுப்புறப் பாடல் கலைஞராக அவர் மாறினார்.

சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த பின், பாடல்களை இயற்றும் உற்சாகம் யாவ் ஜின் நா அம்மையாருக்கு அதிகமானது.

அவர் இயற்றும் பாடல்கள், காலத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளன. இப்பாடல்கள் மக்களால் வரவேற்கப்படுவதற்கு இது முக்கிய காரணமாகும். "செய்தி அறிவிப்பு" நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க விரும்புகின்றேன் என்றும், நான் பாடும் பாடல்களில், பெரும்பாலானவை என்னால் எழுதப்பட்டன" என்றும் அவர் கூறினார்.

நாள்தோறும் அவர் தொலைக்காட்சி செய்திகளைக் கண்டு ரசிக்கின்றார். நாட்டுப்புறப் பாடல்கள் அல்லது நாட்டுப்புறப்பாடல் நாடகங்களை அவர் அடிக்கடி தாமாக இயற்றி, அரங்கேற்றுகிறார்.

ஒரு ஊசி என்னும் பாடல், யாவ் ஜின் நா அம்மையார் தொழிலாளர்களுக்கென சிறப்பாக இயற்றிய பாடலாகும். Shang Rao நகரில் இது பரவலாக அறியப்படுகிறது. சிக்கனம் செய்வதில் உறுதியாக நிற்குமாறு தங்களது பிள்ளைகளுக்கு மக்கள் இப்பாடலின் மூலம் அறிவுரை கூறியுள்ளனர்.

கடந்த 80ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், வேளாண் துறை வளர்ச்சி, அவர் பாடல்களை இயற்றும் உற்சாகத்தை எழுப்பியது. Shang Rao வட்டார மொழியின் தனிச்சிறப்புக்கிணங்க, "காய்கறிகளை எடுப்பது" என்ற பாடலை இயற்றினார். இப்பாடலின் ராகம் மற்றும் வரிகளைக் கேட்டு, விவசாயிகள் கடின உழைப்பை மறந்து, அதிக அறுவடை தந்துள்ள மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர்.

கடந்த 60 ஆண்டுகளில், நாட்டுப்புறப் பண்பாட்டின் களஞ்சியத்திலிருந்து முக்கிய அம்சங்களை உட்புகுத்தி, 500 பாடல்களை அவர் இயற்றினார். இப்பாடல்களில் காலத்தின் நறுமணம் நிரம்பியிருக்கிறது.

2005ஆம் ஆண்டு, யாவ் ஜின் நா அம்மையார் நாட்டுப்புறக் கலைக் குழு ஒன்றை உருவாக்கினார். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், Yao Jin Na அம்மையாரும், 30க்கு அதிகமான குழு உறுப்பினர்களும், நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர் அல்லது பயிற்சி செய்கின்றனர். அவர்கள் Shang Rao நகரின் பொது மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

நீண்டகாலமாக கற்றுக்கொள்வதன் மூலம், தாம் பாடல் பாடும் திறன் உயர்ந்துள்ளது என்றும், ஆசிரியர் யாவ் ஜின் நாவின் நிலையை எட்ட வேண்டுமெனில், தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் இக்கலைக் குழு உறுப்பினர் Hu Dong Lan கூறினார்.

Shang Rao நகரில் உள்ள பல பள்ளிகளின் அழைப்பை ஏற்று, யாவ் ஜின் நா அம்மையார் பாடத்திட்டத்தில் இல்லாத அம்சங்களின் ஆசிரியராக பதவி ஏற்றுள்ளார். அடுத்த தலைமுறையினருக்கு நாட்டுப்புறப் பாடல்களின் ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. வாங் பிங் என்னும் இளையோர் பள்ளி மாணவர் யாவ் ஜின் நா அம்மையார் பாடும் நாட்டுப்புறப் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். "மூதாட்டி Yao தாமாக இப்பாடல்களை இயற்றினார். பிற பிரதேசங்களில் இத்தகைய பாடல்கள் இல்லை. Shang Rao நாட்டுப்புறப் பாடல்கள் பிற பிரதேசங்களில் பரவ வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.

"நாட்டுப்புறப் பாடல்களை நேசிக்கின்றேன். நாட்டுப்புறப்பாடல்களைப் பாட விரும்புகின்றேன். முதியவராக இருந்த போதிலும், பாடல்களை தொடர்ந்து பாடுவேன். மேலதிக மக்கள் நாட்டுப்புறப்பாடல்களைப் புரிந்து கொண்டு, பாட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்" என்று யாவ் ஜின் நா அம்மையார் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040