• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மியெள இனத்தின் மூன்று சகோதரிகள்
  2015-03-03 16:41:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் மியெள இனம், ஆபரணங்கள், வெள்ளி அலங்காரப் பொருட்கள் மற்றும் இனிமையான நாட்டுப்புறப்பாடல்களால் புகழ் பெற்றுள்ளது. குவெய் சோ மாநிலத்திலுள்ள சி்யன் துங் நன், மியெள இன மற்றும் துங் இனத் தன்னாட்சி சோ, மியெள இனத்தவர் குழுமி வாழும் பிரதேசமாகும். இத்தன்னாட்சி சோவின் ஒரு கிராமத்தில், ஒரு மியெள இனக் குடும்பத்தின் மூன்று சகோதரிகள், புகழ் பெற்ற பாடகிகளாக மாறியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் அவர்களை பற்றி கூறுகின்றோம்.

மூன்று சகோதரிகளில், மூத்த பெண் அ ச்சாங், இரண்டாவது பெண் அ யி, கடைசி பெண் அ துவெள. குவெய் சோ மாநிலத்தின் மூன்று தேசிய இனத் தன்னாட்சி சோக்களின் ஆடல் பாடல் குழுக்களில் இவர்கள் தனித்தனியாக பணி புரிகின்றனர். தேசிய நிலை பாடகிகளாகிய இவர்கள், தத்தமது லட்சியத்தில் தலைசிறந்த சாதனையை பெற்றுள்ளனர்.

இந்த மூன்று பெண்களின் பெற்றோர், குவெய் சோ மாநிலத்தின் குவாங் பிங் மாவட்டத்தில், புகழ் பெற்ற நாட்டுப்புறப் பாடகர்களாக இருக்கின்றனர். கிராமத்தில் விழா நடவடிக்கைகள் நடைபெறும் போதெல்லாம், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினர். இத்தகைய சூழலில், மூன்று சகோதரிகள் அதிக மியெள இனப் பாடல்களைக் கற்றுக் கொள்வதில் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவது பெண் அ யி கூறியதாவது:

"சிறுபான்மை தேசிய இனத்தவரான நாங்கள், சிறு வயதில் பேசத் துவங்கிய போது, பாடல் பாட தெரியும். நடந்து செல்லத் துவங்கிய போது, ஆட தெரியும். பாட்டொலியுடன், நாங்கள் தூங்கினோம். கண்விழித்து எழுந்த போதும், இனிமையான பாட்டொலி கேட்கும்" என்றார் அ யி.

கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், 16 வயதான மூத்த பெண் அ ச்சாங் மாவட்டப் பண்பாட்டு மையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டு, அவர் தேர்வில் வெற்றி பெற்று, சீன மத்திய தேசிய இனக் கல்வி கழகத்தில் சேர்ந்தார். ஒதுக்குப்புற மியெள இனக் கிராமத்திலிருந்து வெளியேறி, ஒருவர் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி பயில்வது, அப்போது பெருமை கொள்ளத்தக்க ஒரு விடயமாகும். அ ச்சாங் கூறியதாவது:

"எனது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அன்றிரவு நாங்கள் உறங்க முடியவில்லை. மகிழ்ச்சியின் காரணமாக, எனது அப்பா மற்றும் அம்மா மது அருந்தி மகிழ்ந்தனர். எங்கள் மியெள இனக் கிராமத்தில், மகிழ்ச்சி தரும் விடயங்கள் நிகழும் போதெல்லாம், மக்கள் பாடல் பாடி மது அருந்துகின்றனர். வாழ்த்து தெரிவிக்க, கிராமத்தில் அனைவரும் என் வீட்டிற்கு வந்தனர்" என்றார் அ ச்சாங்.

அ ச்சாங் பெய்சிங்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றது, அவரது இரண்டு தங்கைகளுக்கும் ஊக்கம் தந்தது. இரண்டு தங்கைகள் தமது அக்காவை மாதிரியாகக் கொண்டு, முயற்சி மேற்கொண்டனர். அக்காவின் ஊக்கம் மற்றும் ஆதரவுடன், அ யி தேர்வு மூலம் ஷாங்காய் இசை கல்லூரியில் நுழைந்து கல்வி பயின்றார். அ துவெள தேர்வில் வெற்றி பெற்று, குவெய் சோ தேசிய இனக் கல்லூரியில் சேர்ந்தார்.

அவர்கள் படிப்பை முடித்த பின், மியெள இனப் பாடல்களை பெரிதும் பரவல் செய்யத் துவங்கினர். அவர்கள் நாடு முழுவதிலும் உற்சாகம் தரும் மியெள இனப் பாடல்களைப் பாடுகின்றனர். இது மட்டுமல்ல, இப்பாடல்கள் சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளன. பத்துக்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அவர்கள் அடுத்தடுத்து கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். ஒவ்வொரு அரங்கேற்றத்திலும், ஒரு சீனராகவும், ஒரு மியெள இனத்தவராகவும், அவர்கள் மிகவும் பெருமை அடைகின்றனர். அ யி ஒரு விடயத்தை நினைவு கூர்ந்து கூறியதாவது:

"1994ஆம் ஆண்டு, இத்தாலிக்கு சென்று அரங்கேற்றினேன். இந்நாட்டில் லு செங் காதல் பாடலைப் பாடினேன். மியெள இன ஆடையை அணிந்து, ஆடி பாடினேன். அப்போது ரசிகர்கள் கைதட்டிப் பாராட்டினர். அடுத்த நாள், அழைப்பின் பேரில், பல்வேறு நாடுகளின் கலைக்குழு உறுப்பினர்களுடன், ரோம் நகரில் பயணம் செய்தேன். பலர் என் அருகே வந்து, எனக்கு தெரியாத மொழியில், பல வார்த்தைகளை கூறினர். 'நேற்று தங்கள் அரங்கேற்றம், எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. தங்கள் பாட்டொலி மிக இனிமையானது. தங்கள் ஆடைகள் மிக அழகானவை' என அவர்கள் கூறினர் என்று மொழிபெயர்ப்பாளர் எனக்கு தெரிவித்தார்" என்றார் அ யி.

மூன்று சகோதரிகளும், இனிமையான பாடல்களைப் பாடி, மியெள இனப் பண்பாட்டைப் பரவல் செய்யும் வேளையில், பொது நலன் லட்சியத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். அ துவெள, குவெய் சோ மாநிலத்தின் சியன் சி நன் சோவில் மிகவும் புகழ் பெற்றுள்ளதால், பொது நல நடவடிக்கைகளை அடிக்கடி ஏற்பாடு செய்வதுண்டு. குறிப்பாக நலிந்த குழுவினருக்கு உதவுவதுண்டு. அவர் கூறியதாவது:  

"அறக்கொடை அரங்கேற்றங்களையும், பொது நல நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வதில், எனது நண்பர்கள் எனக்கு பெரும் ஆதரவளித்துள்ளனர். ஒதுக்குப்புறக் கிராமங்களில், கல்வி வாய்ப்பை இழந்த குழந்தைகளுக்கு உதவும் அரங்கேற்றங்களை நடத்தினோம். ஒவ்வொரு அரங்கேற்றத்துக்கு பின், சில நூறு குழந்தைகளின் கல்விக் கட்டணப் பிரச்சினையை தீர்க்க முடியும்" என்றார், அவர்.

மூன்று சகோதரிகள், தங்களது ஊரை எப்போதும் மறக்கவில்லை. குவாங் பிங் மாவட்டத்தின் சியு சோ இடைநிலைப்பள்ளியில், அவர்கள் கலைப் பள்ளி ஒன்றை கூட்டாக நடத்துகின்றனர். அவர்கள் அடிக்கடி இப்பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு பாடம் சொல்லி தந்து, ஆழ்ந்த அன்புடன் ஊரின் மக்களுக்கு இனிமையான பாடல்களை பாடுவதுண்டு.

ஊர் மக்களைப் பார்த்து, தாமும், தமது அக்காக்களும் மிகவும் உற்சாகமடைவதாக அ துவெள கூறினார். மிக இனிமையான பாடல்களைப் பாடுவதன் மூலம் ஊர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

சிறப்புத்துறைப் பாடகிகளாக, மியெள இனத்தின் பாடகர்களைப் பயிற்றுவிக்க மூன்று சகோதரிகள் பாடுபட்டு வருகின்றனர். சீனாவின் பாடல் துறையில் புகழ் பெற்று, வியன்னாவில் உள்ள பொன் மண்டபத்தில் பாடல்களைப் பாடியிருந்த அ யு துவெள, கடந்த பத்துக்கு மேலான ஆண்டுகளில் அ ச்சாங்கின் மாணவராக இருந்தார்.

மியெள இனக் கிராமத்திலிருந்து வெளியேறிய மூன்று சகோதரிகள், "தேசிய இனத்தின் பண்பாடு, உலகத்திற்குரியது" என்பதை ஆழமாக புரிந்து கொண்டுள்ளனர். தத்தமது முயற்சிகளின் மூலம், ஒளிமயமான மியெள இனப் பண்பாடு உலகம் முழுதும் ஒளிவீச வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040