• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டய்ச்சீ மற்றும் யோகா
  2015-05-14 15:36:54  cri எழுத்தின் அளவு:  A A A   

யோகா இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ளதைப் போல, டய்ச்சீ கலை சீனாவில் பரவலகாக் காணப்படும் கலையாகும். இந்த இரண்டு கலைகளும் ஆசிய நாகரிகத்தில் "ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களாக" விளங்குகின்றன. தற்காலத்தில் இந்த இரு கலைகளும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

பூங்காவில் டய்ச்சி கலை

டய்ச்சீ: இக்கலை சீனாவின் தேசிய நிலை பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாகும். சீனாவின் பழம்பெரும் நூலான யி ச்சிங்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள யிங் மற்றும் யாங், டய்ச்சீ கலையின் முக்கிய கருப்பொருளாக விளங்குகிறது.

தற்காப்புக் கலையான டய்ச்சீயின் மூலம், உடல்நலத்தை பெற முடியும். இம்முறையின் மூலம், உடலை சமநிலையுடன் வைத்து, எதிரியின் அசைவுகளைக் கணித்து, பின் காத்திருந்து தாக்க முடியும். கராத்தே, குங்பூ போன்று வேகமான கலை டய்ச்சீ அல்ல. மிக மெதுவான உடல் அசைவுகள் மூலம் இக்கலையை பயில முடியும். மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றை தவிர்ப்பதில் இக்கலை முக்கயப் பங்காற்றுகிறது.

அதனால், முதியோர்கள்கூட இக்கலையின் பயனை அறுவடை செய்யலாம். அதனால், சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இக்கலையை வயது வித்தியாசமின்றி மக்கள் கற்று வருகிறார்கள்.

இக்கலை உடலுக்கும், மனதுக்கும் இதமான அனுபவங்களைத் தருவதால் 60-70 வயதிலான முதியோர்கள் பெரும்பாலும் இதில் ஈடுபட்டு வருவதை நான் கண்டுள்ளேன் என்று பெய்ஜிங் நகரில் வசித்து வரும் தமிழரான சதீஷ் தெரிவிக்கிறார்.

சீனாவில் பரவலாக்க் காணப்படும் பூங்காக்களில் இனிய காலை வேளைகளில் டய்ச்சீ கலையின் அசைவுகள் தவறில்லாமல் செய்யும் முதியோர்களைக் காண முடியும் என்று பல ஆண்டுகளாக வசித்து வரும் தமிழர் கோபிநாத் விவரிக்கிறார்.

மிக மெதுமான அசைவுகள்தான் என்றாலும், டய்ச்சீ கலையின் போட்டி பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சென் ஷு, யாங் ஷு உள்பட 8 விதமான டய்ச்சீ கலை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.

இக்கலையை தொடரும் மனிதர், இயற்கையுடன் இணக்காமவதை உணர முடியும்.

பெருகி வரும் மக்கள் தொகை, பொருளாதாரம் மற்றும் மன இறுக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் சூழல் ஆகிய காரணிகள் இக்கலையை மேல் அதிக மக்கள் பின்பற்றுவதைத் தூண்டுகிறது.

இக்கலையின் நிதர்சனத்தை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் டய்ச்சீ கலையை பரப்பும் மையங்கள் ஆயிரக்கணக்கில் முளைத்துள்ளதை மேற்கோள் காட்ட முடியும்.

சீனாவில் பரவலாக்க் காணப்படினும், ஹ்ஹபெய் மாநிலத்தின் ஹன்தான் மற்றும் ஹூபெய் மாநிலத்தின் ஊதாங் மலைப்பகுதி ஆகிய இரண்டு இடங்கள் டய்ச்சீ கலைக்கு மிகவும் சிறப்புக்குரியது. அதனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு வருகின்றனர்.

ஹாங்காங் சிட்டி பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் சித்திர சிவக்குமார். தமிழரான இவர், 6 மாதங்கள் தொடர்ந்து வகுப்புக்குச் சென்று இக்கலையை கற்றுள்ளார்.

அவர் கூறுகையில், இக்கலையில் ஈடுபடும்போது உடலின் அசைவுகள் மெதுவாகவும், அதே சமயம் தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது. இக்கலை உடலுக்கு மட்டுமானது அல்ல. மூளைக்கும் தொடர்புடையது. உதாரணத்துக்கு, நமது உடலை வலப்பக்கம் திருப்பும்போது, நமது மூளை மற்றும் கண்களின் ஓட்டமும் அப்பக்கத்தில் இருப்பது மிக முக்கியதும். பயிற்சிக்கு முன், கழுத்து வலி இருந்து வந்தது. தற்போது அந்த வலியிலிருந்து நான் விடுதலை அடைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

டய்ச்சீ கலையும், யோகாவும் சிறிது வேறுபட்டுள்ள போதிலும், இரண்டின் பயன்களும் ஒன்றுதான். இரண்டிலும் மன அமைதி பெறுவதுடன், உடல் ஆரோக்கியமும் சீரடையும். உடலின் பல்வேறு வியாதிகளுக்கு வாயு முக்கியக் காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யோகா மற்றும் டய்ச்சிலியில் சுவாசப் பயிற்சி முக்கியமாக இருப்பதால், பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள யோகா, சிறந்த மருத்துவராக விளங்குகிறது.

2014ஆம் ஆண்டு யுன்னான் மாநிலத்தின் தாலி நகரில் சீன-இந்திய யோகா உச்சி மாநாடு  

சீன மக்களின் கருத்தில் யோகா

தற்போதைய நிலையில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் யோகாவைக் கற்றுத் தரும் மையங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் யோகா கற்பவர்களில் பெரும்பாலும் பெண்களாவர். இந்திய பயிற்சியாளர்கள் மூலம் யோகா கற்பதையே பெரும்பாலான சீனர்கள் தெரிவு செய்கின்றனர்.

திருமதி சாங் ஹாவ்: தொங் பாங் என்பது சீனாவில் புகழ்பெற்ற ஆடல் பாடல் குழுவாகும். இக்குழுவில் உள்ள தேசிய நிலை ஆசியர்களில் ஷாங் ஹாவும் ஒருவர். இவர், இந்திய நடனம் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலும், சீன கல்வி அமைச்சகமும் 2001ஆம் ஆண்டில் பரிமாற்ற நிகழ்ச்சியை மேற்கொண்டது. இந்நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக, தில்லியில் கணேஷ நாட்டியலயா வகுப்பில் இணைந்த சாங் ஹாவ், பரதத்தைக் கற்றுக் கொண்டார். அப்போது, அவரின் கண்களில் யோகா தென்பட்டுள்ளது. பின்னர், அதன்மீது ஆர்வம்கொண்டு கற்கத் தொடங்கினார். தொடர்ச்சியாக இமயமலையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற ரிஷிகேஷ் பகுதிக்குச் சென்று யோகா மேற்கொண்டு மகிழ்ச்சி கொண்டார். சீனர்கள் மத்தியில் யோகாவுக்கு ரிஷிகேஷ் ஒரு புனித இடமாக் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நடனம், யோகா மற்றும் இயற்கை ஆகியன குறித்து புதிய புரிதலை பெற்றுக் கொண்டதாக சாங் ஹாவ் தெரிவிக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மாஷா கிராம். இவர், மேற்கத்திய நடன ஆசிரியர். இவர், சீனாவிலும் இந்தியாவிலும் பயணம் மேற்கொண்டபோது, யி சிங் மற்றும் யோகா குறித்த அடிப்படையை அறிந்துள்ளார். இக்கலைகளில் பயன்படும் சுவாசப் பயிற்சியை மேற்கத்திய நடனத்தில் அறிமுகப்படுத்திய புதிய புரட்சியை மாஷா கிராம் செய்துள்ளார்.

ஷாங் ஹாவின் பார்வையில் மேலை பண்பாட்டையும், கீழை பண்பாட்டையும் இணைக்கும் முக்கியப் பாலமாக டய்ச்சீயும், யோகாவும் விளங்குகின்றன. மேலும், சீனாவும், இந்தியாவும் உலக நாகரிகத்துக்கு அளித்த முக்கியக் கொடை இவ்விரு கலைகளாகும்.

21ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவும், சீனாவும் பிற நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருகின்றன. தற்போதைய காலத்தில்கூட பழம்பெரும் கலையான டய்ச்சியும், யோகாவும், தனது பழைய பொலிவை இழக்காமல் புதிதாதக் காட்சி அளிப்பதுவே, இக்கலைகளின் மகத்துவத்துக்குச் சான்றாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040