• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சென்னை-கு.பாரதிமோகன்
  2016-08-30 11:10:15  cri எழுத்தின் அளவு:  A A A   

எனது நெஞ்சில் நிறைந்த சீனம்

G.BARATHIMOHAN, FOUNDER SECRETARY, ICFA-TAMIL NADU UNIT.

தமிழகத்தின் வரைபடத்தில் மிகச் சிறிய புள்ளியாகக்கூடத் தெரியாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு உலகின் மிகப்பெரிய நாடான சீன நாட்டிற்கு நான் அரசு விருந்தாளியாக சென்று வந்தேனா என்ற வியப்பு இந்தக் கட்டுரை எழுதுவது வரையிலும் எனக்கு மாறவில்லை,

இனிமேலும் அந்த வியப்பு எனது வாழ்நாள் பூராவும் இருக்கும்.அதில் ஐயமில்லை, இந்திய சீன நட்புறவுச் சங்கத்தின் இந்திய அளவிலான சீன நாட்டின் அரசு முறைப் பயணத்திற்கு பன்னிரண்டு பிரதிநிதிகள் சீனத் தூதரகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டோம். தமிழ்நாட்டிலிருந்து நான் மட்டும் தான்,

எனது பயண அனுபவத்திற்கு முன்பு அதற்குக் காரணமாக இருந்த தோழர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்வது எனது கடமையாகும்.

முதலில் என்னைத் தேர்வு செய்வதற்கு முழுமுதற் காரணமாக இருந்த அன்புத் தோழர் வி.பாஸ்கரன் அவர்களுக்கும், மதியாதைக்குரிய HE LI YUCHENG, ZHAN ZHIHANG Culutural cousullar மற்றும் first Secretary Qua shawan ஆகிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

இரண்டாவதாகத் தேசியக் குழு மற்றும் தமிழ் மாநிலக் குழுவிற்கும் எனது நன்றிகள் உரியது,

தோழர் வி பாஸ்கரன் அவர்களின தகவலின் பேரில்,11.12.2015 பிற்பகலில் டில்லியிலுள்ள சீனத் தூதரகத்தில் 12 பிரதிநிதிகளைக் கொண்ட சந்திப்புக் கூட்டம் நடைபெறும் விபரத்தை என்னிடம் தெரிவித்தார்.நான் 10.12.2015 அன்றே கோவையிலிருந்து டில்லிக்கு கிளம்பி விட்டேன்.

மறுநாள் 11.12.2015 பிற்பகலில் சீனத் தூதரகத்தில் பயணக் குழுவிற்கான தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.அங்கிருந்தபடியே டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அனைவரும் சென்று சேர்ந்தோம், இரவு 9.45. மணிக்கு China Eastern Airlines என்ற சீன விமானம் மூலம் ஆகாயத்தில் பறந்து சென்றோம்.

அடுத்த நாள் 12.12.2015 சனிக்கிழமைக் காலையில் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கின் சர்வதேச விமானநிலையம் வந்து சேர்ந்தோம்.

விமான ஓடுதளப் பாதையில் எனது காலடிகளை எடுத்து வைத்தேன். அச்சுறுத்தும் வகையில் சீனப் பனிக்காற்று என்னைவரவேற்றன.சீனத்து ஞானி கன்பூசியஸ்ம்,நவசீனத்தின் சிற்பியுமான மாசேதுங்கும் அவதரித்த பூமியில் எனது காலடிகளும் சீன மண்ணின் குளிர்ச்சியை ஸ்பரிசித்தன.

யாருக்கும் தெரியாமல் ஒருநிமிடம் என்னைக் கிள்ளிப் பார்க்க ஆசைப்பட்டேன்.பனியில் எனது விரல்களால் என்னைக் கிள்ளிப் பார்க்க முடியவில்லை.அதிசயம் ஆனால் உண்மைதான்,

வெளியில் வருவதற்காக நாங்கள் அனைவரும் சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்து சென்றோம். விமான நிலையத்தின் கட்டமைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தின.வெளியில் வந்தோம். பயண வழிகாட்டி புரூஸ் எங்களை இனமுகத்துடன் வரவேற்றார்.அன்று மதிய உணவு முடித்து விட்டு நேராக HEAVEN OF TEMPLE பார்த்தோம். இரவு பெய்ஜிங்கின் மிகப் பெரிய ஹோட்டலான ASIA HOTEL க்குச் சென்றோம். அதன் பத்தாவது மாடியில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தங்கினோம்.

சீனாவில் தங்கியிருந்த 10 நாட்களை பெய்ஜிங் XIAN SHANGHAI ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சமமாக பிரித்துக் கொண்டோம். தூதுக் குழுவின் தலைவராக கேரளாவைச் சார்ந்த தோழர் கோபி ஆச்சாரி அவர்கள் செயல்பட்டார். சீனாவில் நான் கண்டு ரசித்த சிறப்பு மிக்க இடங்களில் சிலவற்றை மட்டும் இங்கு விவரிக்க விரும்புகின்றேன்.

தியானன்மென் சதுக்கம்

இங்கு சென்ற போது காலையிலேயே அளவு கடந்த கூட்டம்.விலக்கித்தான் செல்ல வேண்டியிருந்த்து.இங்கு நவசீனத்தின் சிற்பி மாசேதுங்கின் மிகப்பெரிய சிலை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் உயிரோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு பூங்கொத்து ஒன்று வைத்து எனது மலரஞ்சலியைச் செலுத்தினேன். மாவோவின் அருங்காட்சியகத்தில்அவரின் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரைக் காணும்போது அவர் தூங்குவதுபோல் காட்சியளித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

SUMMER PALACE

சக்கரவர்த்தியின் மனைவிமார்கள் கோடைகாலத்தை சொகுசாகக் கழிப்பதற்காக அமைக்கப்பட்டவையாகும்.ராணிமார்கள் அனைவரும் அங்கு அமைக்க்கப்பட்டுள்ள ஏரியில் தான் நீராடுவது வழக்கம்,ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் உண்டு. இராணிமார்களுக்கு ஒருவேனைக்காகும் செலவு என்பது கணக்கிலடங்காதது ஆகும்.

ACROBATIC SHOW

மனித உடலை பந்துபோல் உருட்டிக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு.சீனத்து இளம் பெண்களின் நடனங்களும்,அவர்களின் சாகசங்களும் காண்பவரை மலைக்க வைக்கின்றன.

நம்மூர் சர்க்கஸில் காட்டப்படும் மரணக்கிணறுகளில் இரண்டுபேர் மட்டும் ஒருவரோடு ஒருவர் மோதாமல் மோட்டார் வாகனம் ஓட்டுவது நம்மை ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், ARCOBATIC SHOW வில் ஒரு கூண்டுக்குள் எட்டு பேர் மோட்டார் வாகனத்தில் ஓட்டுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.ஒருமணிநேர காட்சியை எழுத்தில் வடிக்க முடியாது. நேரில் கண்டு ரசித்தால் மட்டுமே இன்புறத் தக்கவையாகும்..

சீனப் பெருஞ்சுவர்

சீனாவிற்குப் பயணித்தவர்கள் எவரும் சீனப் பெருஞ்சுவரைப் பார்க்காமல் செல்வதில்லை.நோப்பில்ஸ் நகரம் பார்த்துவிட்டுச் சாகலாம் என்ற ஒருபழமொழிக் கேற்ப சீனப் பெருங்சுவரைப் பார்த்துவிட்டு வாழ்வதற்கு ஆசைப்படுவர்கள் உலகில் உண்டு.

நம்ம ஊர் பழநி திருத்தலத்தில் ரோப் கார் போன்று நிலப்பகுதியிலிருந்து சீனப் பெருஞ்சுவர் உள்ள மிக உயரமான இடத்திற்கு செல்வதற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. பெட்டிக்குள் நான்கு பேர் அமர்ந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக் கொள்கின்றன.மேலே செல்லச் செல்ல அதன் உயரத்தைக் கண்டு எவராலும் வியப்புறாமல் இருக்க முடியாது.

TERRA COTTA

1959 ஆம் ஆண்டில் விவசாயி ஒருவர் அவரது நிலத்தில் கிணறு தோண்டும்போது மண்சிலை ஒன்று கிடைத்தது. தொடர்ந்து தோண்டும் போது சிலைகள் வந்து கொண்டே இருந்தன. இதை அறிந்த அந்த விவசாயி அகழ்வாராய்ச்சித் துறைக்குத் தகவல் தந்தார்.அகழ்வாராய்திச்சியினர் வந்து தோண்டத் தோண்ட சுமார் நான்காயிரம் சிலைகளுக்கும் அதிகமாக்க் கிடைத்து அறிந்து வியப்புற்றனர். ஒவ்வொன்றும் அரசன் முதல் படைவீர்ர்கள் வரை உள்ள சுடுமண் சிலைகள் ஒவ்வொன்றும் வேவ்வேறு முக பாவங்களைக் கொண்டவையாகும்.

இன்னும் IPERIAL PALACE, ART MUSEUM, BUDHIST TEMPLE, T.V.TOWER, YU GARDEN, WATER VILLAGE போன்றவைகளும் கண்டு களித்தோம்.

எனது சீனத்து பயணத்தை ஒரு புத்தகமாக எழுத விரும்புவதாலும் இதழின் பக்கம் கருதியும் கடைசியாக சில நறுக்குகளுடன் முடித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

விமான நிலையம்

சினத்தின் சர்வதேச விமான நிலையத்திற்குள் செல்லும் பயணி ஒருவர் பிறரின் வழிகாட்டுதல் இல்லாமலேயே விமானத்தின் தனது இருக்கை வரையிலும் துணிந்து சென்று அமரலாம்.ஏனென்றால் சம்பந்தப்பட்ட பயணியானவர் அடையாளப் பலகைகளைப் பார்த்தே எளிதில் கண்டறியலாம். விமான நிலையத்திற்க்குள் ஆங்காங்கு வழிகாட்டி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. தேவையான உதவிகளை முகச் சுழிப்பு இல்லாமல் இன்முகத்துடன் செய்வதற்கு சீனச் சகோதரிகள் தயாராக உள்ளார்கள். டில்லி வந்தபோது விமான நிலையத்தில், திரையரங்கில் முந்திக் கொண்டு செல்வது போன்று விமானப் பயணிகள் ஒழுங்கில்லாமல் இடித்துக் கொண்டு செல்வதைப் பார்த்தோம்.

காவல் நிலையம்

எங்களின் பத்து நாட்களின் சுற்றுப் பயணத்தில் காவல் நிலையங்களை என்னால் காண முடியவில்லை.போக்குவரத்து காவலர்கள் மட்டுமே காணப்பட்டார்கள்.ஏன் அங்கு குற்றங்கள் நடைபெறுவதில்லையா? நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றே கருதுகின்றேன்.

பேனர்கள்

திரைப்படங்கள் அரசியல் வாதிகளுக்கான விளம்பரப் பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் எங்கு தேடியும் காணக் கிடைக்காதது ஆச்சரியம் தான். படம் ஒடக்கூடிய திரையரங்குகளில் மட்டுமே விளம்பரத் தட்டிகள் உள்ளன. சுவர்களிலும் விளம்பரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவைப் பற்றி சொல்ல வேண்டுமா?

உபசரிப்புக்கள்

நாங்கள் தங்கியிருந்த விடுதிகளிலும் உணவருந்தச் சென்ற உணவகங்களிலும் சீனச் சகோதரிகளின் இனிய உபசரிப்புக்களும் பணிவிடைகளும் தமிழகப் பண்பாட்டின் விருந்தோம்பலை நினைவுபடுத்தின.

சில விமர்சனங்கள்

பன்னிரண்டு பேர்கள் சீன அரசின் பிரதிநிதிகளாகச் சென்று வந்துள்ளோம். சீனதேசத்தில் கழித்த ஒவ்வொரு விநாடியும் நினைத்து நினைத்து இன்புறத்தக்கவையாகும். உணவு விடுதிகளில் ஒவ்வொரு வேளையும் எங்களுக்கான உணவுப் பறிமாற்றங்கள் தாராளமாகவே வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் தான் விரும்பும் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தார்கள். ஆனால், ஒவ்வொரு வேளையும் உட்கொண்ட உணவைவிடவும் மீதமானவைகளே அதிகமாக இருந்தன. அதைத் தவிர்க்க முயற்சித்திருக்கலாம்.

மேலும், சீனாவில் காண்பதற்குரிய பயணத்திட்டங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தால் காணச் சென்ற இடங்கள் மீது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க உதவியாக இருந்திருக்கும்.

எனினும், இந்திய-சீன நட்வுறச் சங்கத்தின் கலாச்சாரம், பண்பாட்டினை மேலும், மேலும் வளர்த்தெடுப்பதற்காக இது போன்ற வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதில் மட்டும் என் மனம் எப்போதும் தயாராகவே உள்ளன.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040