(நிழற்படம்: நிலானி)
2017CRI சீன-வெளிநாட்டுச் செய்தியாளர்களின் ஷான்சி பயணம் இன்று துவங்குகிறது. சி ஆன் எங்களது முதல் பயண இடமாகும்.
ஷான்சி மாநிலத்தின் சி ஆன் நகர், சீன வரலாற்றிலும், பண்பாட்டிலும் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. அந்தப் பணியை, தொடர்ந்தும் வருகிறது. மற்ற நகரங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சத்தைக் கூற வேண்டும் என்றால் பழம் வரலாறுகளுடன், புதிய தோற்றத்தையும் சி ஆன் வெளிக்கொண்டு வருகிறது. மரங்களே மண்ணின் உயிர், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று முழக்கமிட்டு வருபவர்கள், சி ஆன் நகருக்கு வந்தால், வியந்துபோய், உள்ளூர் அரசுக்கு பாராட்டு தெரிவிக்காமல் இருக்க மாட்டார்கள். நகரையே மரங்களின் பசுமை போர்த்தியுள்ளது என்று வியந்து பாராட்டுபவர்கள் ஏராளம்.வரலாற்றை பார்த்து அறிந்து கொள்ள பல இடம் சி ஆனில் உண்டு. அதேபோல், ஒய்யாரமாக மாலைப் பொழுதைக் கழிக்க ஹுய் மிங் ஜியே என்ற வீதி ஒன்று உண்டு. குறுகிய வீதி, திண்பன்டங்கள் முதல் பொருள்கள் வரை விற்பனை செய்து வரும் அருகருகே அமைந்துள்ள கடைகள், வாகனங்களின் இறைச்சல் என ஓர் இனம் துடிப்புடன் இயங்கிக் கொண்டுள்ளதற்கான அனைத்து சான்றுகளையும் இந்த வீதி கொண்டுள்ளது. ஆள் அரவத்துக்கு பஞ்சம் இல்லை. வீதி என்பதை விட, ஒரு குட்டி ஊர் எனக் கூறுவது சாலச்சிறந்ததாக இருக்கும். இந்த வீதி, உள்ளூர் திண்பண்டதுக்கு புகழ்பெற்றது. வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் இனிப்பு முதல் இறைச்சி வரை சுவை பார்க்க முடியும். இங்கு, ஹுய் சிறுபான்மை இனத்தவர்கள் அதிகம். அதனால், இஸ்லாமிய நண்பர்களின் கடைகளில் வியாபாரம் எப்போதுமே வெகுமும்மரமாக இருக்கும். சி ஆனில் காலடி வைத்து விட்டு இந்த வீதியை அளக்காமல் செல்வது ஓர் இழப்பாகத்தான் அமையும்.(பண்டரிநாதன்)