• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுபான்மை தேசிய இன கட்டிடங்கள்]
அரசு மாளிகை கட்டிடம்

அரசு மாளிகை கட்டிடத்தை, அரண்மனை என்றும் அழைக்கலாம். பேரரசர் தனது ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பேரரசரின் அதிகாரத்தை பெருக்கி, ஆத்மீக மற்றும் பொருளாயத வாழ்க்கையை அனுபவிக்க, மிகப் பெரிய அளவிலான கம்பீரமான கட்டிடங்களை கட்டுவது வழக்கம். இந்த கட்டிடங்கள் அனைத்தும் மிகவும் ஒளிமயமாகவும் பளபளப்பாகவும் காட்சி தருகின்றன.

ச்சின் வம்ச காலம் முதல், "அரசு மாளிகை"யானது, பேரரசரும் அரச குடும்பத்தினரும் வாழும் இடமாக இருந்தது. மாளிகையின் மண்டபம், பேரரசர் அரசு விவகாரங்களை கையாளும் இடமாகும். சீன அரசு மாளிகைகள் அளவில் மிக பெரியவை, உச்சிப் பகுதி முழுவதும் பொன் நிற ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்கும். பெய்சிங்கிலுள்ள அரண்மைனை இத்தகைய சிறப்புக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பேரரசரின் அதிகாரம்தான் மிக உயர்ந்த அதிகாரம், பேரரசர் ஆதிக்க அதிகாரத்தை மையமாக கொள்வது என்ற வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், சீனாவின் பண்டைகால அரசு மாளிகை கட்டிடங்கள் பொதுவாக நடு கோட்டின் இரு பக்கங்களும் ஒரே மாதிரி அமைவு என்ற முறையில் கட்டப்பட்டன. நடு பகுதியிலுள்ள கட்டிடங்கள் மிக கம்பீரமானகவும் ஒளிமயமாகவும் இருக்கின்றன. இரு பக்கங்களிலுள்ள கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவும் எளிமையாகவும் கட்டப்பட்டன.

பண்டைக் கால அரசு மாளிகைக் கட்டிடங்கள் பொதுவாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. முற்பகுதி, பேரரசர் அரசு விவகாரங்களை கையாளும் இடமும், மாபெரும் அரசு விழா நடைபெறும் இடமும் ஆகும். பிற்பகுதி, பேரரசர் பேரரசியுடனும் பேரரசரின் காமக்கிழத்தியர்களுடனும் வாழும் இடமாகும். இதை அந்தப்புரம் எனலாம்.

 பெய்சிங் அரண்மனை

பெய்சிங்கிலுள்ள அரண்மனை, சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களின் பிரதிநிதியாகும். தடுக்கப்பட்ட நகரம் என்றும் இது அழைக்கப்படுகின்றது. மிங் வம்ச மற்றும் ச்சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாகும். 24 பேரரசர்கள் இங்கு அடுத்தடுத்து வாழ்ந்தனர். 7 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த அரண்மையில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன. அரண்மனையைச் சுற்றிலும், பல மீட்டர் உயரமான சிவப்பு நிற சுவர் காணப்படுகின்றது. சுவரின் நீளம் 3400 மீட்டராகும். சுவருக்கு வெளியே, பாதுகாப்புக்காக அகழி ஒன்று உள்ளது.

இந்த அரண்மனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முற்பகுதி, பேரரசர் மாபெரும் விழா நடத்தி, ஆணைகளைப் பிறப்பிக்கும் இடமாகும். இப்பகுதியில், தைஹொ மண்டபம், ச்சுங்ஹொ மண்டபம், மற்றும் பௌஹொ மண்டபம் ஆகியன காணப்படுகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெண் பளிங்குக்கற்களால் 8 மீட்டர் உயரமுடைய அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டவை. தூரத்திலிருந்து பார்த்தால் கட்டுக்கதையில் வர்ணிக்கும் தேவதூதர் மாளிகை போல் தோற்றமளிக்கின்றது. அரண்மனையின் பிற்பகுதியில், பேரரசர், பேரரசிகள், பேரரசரின் காமக்கிழதியர்கள் வாழும் இடமாகும். இந்த பகுதியில், ச்சியன் ச்சிங் மாளிகை, குன்நிங் மாளிகை, யுஹுவா பூங்கா ஆகியவை இடம்பெறுகின்றன. அவையனைத்தும் வாழ்கை சுவை நிறைந்தன. கட்டிடங்களில், பூங்கா, நூலகம், ஓய்வகம், மலைகல் முதலியவை அடங்கும். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக முற்றங்கள் உள்ளன.

படத்தின் விளக்கம்: பெய்சிங் அரண்மனை

வம்ச ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகள் குறைவு தான். பெய்சிங் அரண்மனை தவிர, சென்யாங் நகரத்திலும் ஒரு அரண்மனை இருக்கின்றது. சீஆன் நகரில் ஹான் மற்றும் தாங் வமிசக் காலத்தில் கட்டப்பட்ட சில அரண்மனைகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040