• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சிறுபான்மை தேசிய இன கட்டிடங்கள்]

கோயில் கட்டிடங்கள்  

கோயில், சீனப் புத்தமத கட்டிடக்கலையில் ஒருவகையாகும். இந்தியாவில் தோன்றிய கோயில் கட்டிடக்கலை, சீனாவின் பெய்வெய் வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் ஓங்கிவளர்ந்தது. இந்த கட்டிடங்கள் சீன நிலப்பிரப்புத்துவ சமூகப் பண்பாட்டின் வளர்ச்சியையும் மதங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிகளைச் சித்திரிக்கின்றன. எனவே இந்த கோயில்கள் பெரும் வரலாற்றுச் சிறப்பும் கலை மதிப்பும் கொண்டவையாக உள்ளன.

பண்டைக் காலத்தில் சீன மக்கள், கட்டிடங்களை ஆழ்ந்த வானியல் மற்றும் விண்ணியல் கருத்தையும், ஒத்த அமைவு, ஒழுங்கு, அமைதி, உள்ளிட்ட அழகை அனுபவிக்கும் மனநிலையையும்கொண்டு கட்டியுள்ளனர். எனவே, சீனாவின் கோயில்களின் அமைவு, பொதுவாக, சதுரம், ஒத்திசைவு, நெருக்கம் ஆகியவற்றைக் கொண்டது. தவிர, பூங்கா போன்ற கோயில் கட்டிடங்கள் சீனாவில் பரவலாக காணப்படுகின்றன. இந்த பூங்காவும் கோயிலும் இணைந்த கட்டிடங்கள் கம்பீரமான மண்டபமாக காட்சி தந்து, ஆழ்ந்த இயற்கை உணர்வையும் ஊட்டுகின்றன.

சீனாவில் பண்டைக் காலத்தில் கோயிலின் நடுவில் ஒரு ஷான்மென் எனும் ஒரு அதிகாரபூர்வ நுழைவாயில் இருக்கின்றது. அதன் இரு பக்கங்களிலும் மணிக் கூண்டுகள், மேளக் கூடங்கள் உள்ளன. மத்தியில் தியன்வாங் மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தில் 4 படைவீரர்களின் சிலைகள் நிற்கின்றன. இந்த மண்டபத்துக்குப்பின் அடுத்தடுத்து முறையே தாசியுங் மண்படம், திருமறை கட்டிடம், மதகுருமார் அறை, நோன்பு மண்டபங்கள் முக்கிய பாதையின் இரு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன. தாசியுங் மண்டபம் கோயிலின் மிக முக்கிய முதல் பெரிய இடமாகும். தாசியுங் என்றால், புத்தமதத்தை துவக்கிவைத்தவரான சாக்யாமுனியைக் குறிக்கின்றது.

லோயாங்கிலுள்ள பைமா கோயில்

ஹான் வமிச ஆட்சிக் காலத்தில் ஹோனான் லோயாங் நகரில் கட்டப்பட்ட பைமா கோயில், சீனாவில் கட்டப்பட்டமிகவும் தொண்மையான புத்தமத கோயிலாகும். சுமார் 40 ஆயிரம் சதுரமீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த கோயில் சீனா, கிழக்காசியா, மற்றும் தென்கிழக்காசியாவில் புத்தமதம் பரவுவதற்கு பெரிதும் துணைபுரிந்தது. எனவே பைமா கோயில் இன்றுவரை பல நாடுகளின் புத்தமதத்தவர்கள் வழிபடும் புனித இடமாக விளங்குகின்றது.

வூ தை மலையிலுள்ள பௌத்த மத கட்டிடங்கள்

ஷான்சி மாநிலத்தின் வூ தை மலை சீனாவின் புகழ்பெற்ற புனிதமான பௌத்த மத இடமாகும். இந்த மலையில் பழம் பெருமை மிக்க 58 பௌத்த மத கட்டிடங்கள் உள்ளன. அவற்றில், தாங் வமிச காலத்தில் கட்டப்பட்ட நான்தான் கோயிலும், பொக்குவாங் கோயிலும் புகழ் பெற்றவை. நான்தான் கோயில், சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்டு வரும் வெகு காலத்திற்கு முன்பே மரங்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இந்த கோயிலில் சீனாவின் பல்வேறு காலகட்டங்களிலான கட்டிடக்கலை வடிவங்கள் காணப்படுகின்றன. கோயிலிலுள்ள கட்டிடங்கள், சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், நேர்த்தியான கையெழுத்துகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

 ஹெங்ஷான் மலையிலுள்ள தொங்கு கோயில்

ஷான்சி மாநிலத்திலுள்ள ஹெங்ஷான் மலையில் கட்டப்பட்ட கோயில் பள்ளத்தாக்கின் மேல் கட்டப்பட்ட அடித்தளம் இல்லாத கோயிலாகும் எனவே இது தொங்கு கோயில் என்று அழைக்கப்படுகின்றது. தனிச்சிறப்பியல்புடைய இத்தகைய வேறு ஒரு கோயிலைக் காண்பது அரிது. இந்த கோயில் ஹுன்யுவான் மாவட்ட நகரத்துக்கு தெற்கில் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜின்லுங் பள்ளத்தாக்கின் செங்குத்தான மலைச் சரிவின் நடுவில் கட்டப்பட்டது. தற்போது சீனாவில் ஒரே ஒரு கோயில் தான் உள்ளது. இந்த தொங்கு கோயில் ஹெங்ஷான் மலையின் ஒரு விசித்திரமான காட்சியாகும். பெய்வெய் வம்சாட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் தாங், ஜின், மிங், சிங் ஆகிய வம்சங்களின் ஆட்சிக் காலத்தில் பழுதுபார்க்கப்பட்டது.

போத்தலா அரண்மனை

லாமா மதம் சீனாவின் புத்தமதத்தின் ஒரு கிளையாகும். லாமா மதக் கோயிலின் மண்டபம் பெரிதாகவும், திருமறை அறை உயரமாகவும் இருக்கின்றன. அவை பொதுவாக மலையின் சரிவில் கட்டப்பட்டவை. திபெத்தின் லாசா நகரிலுள்ள போத்தலா அரண்மனை லாமா மத கோயிலின் முன்மாதிரியாக விளங்குகின்றது. தாங் வமிசாட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனை எல்லா வம்சங்களின் ஆட்சிக் காலங்களிலும் பழுதுபார்க்கப்பட்டது. பல கட்டிடங்களைக் கொண்ட இந்த அரசு மாளிகை மலை சரிவுக்கு ஏற்ப பற்பலப்படிகளாக கட்டப்பட்டுள்ளது. மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றது. அதன் பரப்பளவு 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேலாகும். அதில் 20க்கும் அதிகமான மண்டபங்கள் உள்ளன. மைய மண்டபத்தில் 12 வயதான சாக்யாமுனியின் முழு உருவச்சிலை செம்பில் வடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. போத்தலா அரண்மனை சீனாவின் தாங் வமிசக் கட்டிட பாணியைக் கொண்டது. அத்துடன் அப்போதைய நேபாள மற்றும் இந்திய கட்டிடக் கலையின் தனிச்சிறப்பையும் பெற்றுத் திகழ்கிறது.

தவிர, ஹொப்பெ மாநிலத்தின் செங்தே நகரிலுள்ள "வாய் பாமியோ" எனும் கட்டிடமும், பெய்சிங்கிலுள்ள யுங் ஹோ குங் மாளிகையும் சீனாவில் புகழ்பெற்ற லாமா மத கட்டிடங்களாகும்.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040