• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: சி அன் நகரின் தனிச்சிறப்பு மிக்க வரலாறு மற்றும் பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றல்
  2013-06-27 21:22:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலை அளவில் மிக பெரியதாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. அவரது கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் விந்தையானவை, தலைசிறந்தவை. இந்த சுடுமண் வீரர் சிலைகளின் உடம்பு, உண்மையான மனிதர் மற்றும் குதிரைகளைப் போல் இருக்கின்றது. இச்சிலைகள் சின் வம்சத்தின் ராணுவத்தின் உண்மையான நிலைமையை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தியுள்ளன. இது மட்டுமல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன் சின் வம்சத்தின் படை வகைகள், ஆயுதங்கள், படைப்பிரிவுகள் உள்ளிட்ட அம்சங்களை இவை வெளிப்படுத்துகின்றன. பயணிகள், சின் வம்சத்தின் முதல் பேரரசரின் டெரகோட்டா சுடுமண் வீரர் சிலைகளைப் பார்வையிடும் போது, சின் விம்சத்தின் துணிவு மிகுந்த படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவது போல் உணர்கின்றனர். வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பயணி ஆண்டனியோ, இந்த சுடுமண் வீரர் சிலைகளைக் கண்ட பிறகு கூறியதாவது:

"மிகவும் அழகானது. மிகவும் அழகானது. சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைகளைக் கண்டு, பண்டைய காலத்தை நினைவு கூர்ந்தேன்" என்றார் அவர்.

சி அன் நகர், செழிப்பான வரலாறு மற்றும் பண்பாட்டைக் கொண்டுள்ளது. இந்நகரில் அதிகமான தொல் பொருட்களும் வரலாற்று சின்னங்களும் காணப்படுகின்றன. இதனால் சி அன் நகர், "இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்" என புகழ்ந்து பாராட்டப்படுகிறது. சி அன் நகரில், சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலையைத் தவிர, ஷென் சி வரலாற்று அருங்காட்சியகத்துக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் தொல் பொருட்கள் உள்ளன. பண்டைக்காலத்தில் மனித குலம் பயன்படுத்திய எளிய கல் கருவிகள், 1840ஆம் ஆண்டுக்கு முந்தைய சீனச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வகை கருவிகள் இடம்பெறுகி்றன. ஷாங் மற்றும் சோ வம்சக்காலத்தின் வெண்கலக் கலங்களின் வகைகள், பல்வேறு வம்சங்களின் மட்பாண்ட சிலைகள், ஹான் மற்றும் தாங் வம்சக்காலத்தின் தங்க மற்றும் வெள்ளி கலங்கள், தாங் வம்சத்தின் கல்லறைகளில் உள்ள சுவர் ஓவியங்கள் முதலியவை இத்தொல் பொருட்களில் அதிகமாக இருக்கின்றன.

ஷென் சி வரலாற்று அருங்காட்சியகம், நாட்டின் அரும்பொருளான 18 தொல் பொருட்களைக் கொண்டுள்ளது. ஆனால் இவற்றில் இரண்டு தொல் பொருட்கள் வெளிநாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவில்லை. இவ்விரண்டு பொருட்களில், "தங்கப் பின்னணியில் விலங்கு தலை அகேட் மணிக்கல் கோப்பை" ஒன்றாகும். இது "தாங் வம்சத்தின் விலங்கு தலை அகேட் மணிக்கல் கோப்பை" எனவும் அழைக்கப்படுகிறது. 1970ஆம் ஆண்டு சி அன் நகரின் தென் புறநகரில் உள்ள ஹெ சியா கிராமத்தில் இத்தொல் பொருள் தோண்டியெடுக்கப்பட்டது. இப்பொருள், விலங்கின் கொம்பை மாதிரி படிவமாக கொண்டு, உருவாக்கப்பட்டது. இக்கோப்பையின் முன்பகுதியில், பசுவின் தலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த பசுகள் கண்கள் விரிந்து திறந்தவையாகவும், உருண்டையானவையாகவும், ஒளிமிக்கவையாகவும் இருக்கின்றன.

ஷென் சி வரலாற்று அருங்காட்சியகத்தின் பணியாளர் Xu Xing கூறியதாவது:

"இத்தொல் பொருள், ஷென் சி வரலாற்று அருங்காட்சியகத்தின் மிக அரிய செல்வமாகும். தங்கப் பின்னணியில் விலங்கு தலை அகேட் மணிக்கல் கோப்பை, அகேட் மணிக்கல்லால் உருவாக்கப்பட்டது. இக்கோப்பைப் பயன்படுத்துவோரின் தகுநிலை உயர்வானது என்றும், அரசக் குடும்பத்தின் உயர் குடி மகன் அல்லது பேரரசராகத் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்" என்றார் அவர்.

இந்த தொல் பொருள், செல்வம் மற்றும் அதிகாரத்தின் சின்னமாக விளங்குகிறது. இது மிக தலைசிறந்த கலைப்பொருளாகும். பண்டைக்காலத்தில் மத்திய மேற்கு ஆசியாவில் உள்ள குறிப்பிட்ட நாடு, தாங் வம்சத்துக்கு கொடுத்த அன்பளிப்பாக (அரசிறையாக)இருந்திருக்கக்கூடும். இத்தொல் பொருள் பெரும் முக்கியத்துவம் வாயந்தது. கீழை நாகரீகத்துக்கும் மேலை நாகரீகத்துக்குமிடை பரிமாற்றத்தில் பிறந்த ஒரு முக்கிய தொல் பொருள் இது.

கட்டுரையின் இரண்டு வினாக்களை நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன் மீண்டும் அறிவிக்கின்றோம்.

ஒன்று, ஷென் சி மாநிலத்தின் பன் போ வரலாற்று சிதிலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இசைக் கருவியின் பெயர் என்ன?

இரண்டு, ஷென் சி வரலாற்று அருங்காட்சியகத்தில் மிக அரிய செல்வம் எது?

நேயர்களே, "கவர்ந்திழுக்கும் சீனா" என்னும் பொது அறிவுப் போட்டியின் இரண்டாவது கட்டுரை நாளை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040