சீன வானொலி தமிழ்ப்பிரிவு மற்றும் பெய்ஜிங் தமிழ்ச் சங்கமம் இணைந்து நடத்திய தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா, சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் சீன வானொலி நிலையத்தில் நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி கலைமகள் வரவேற்புரை வழங்கினார். தமிழர்களின் பாரம்பரியப்படி சர்க்கரைப் பொங்கலிட்டு குழுமியிருந்த தமிழர்கள் "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்று சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கல் விழாவின் சிறப்பு குறித்து தமிழ்ப்பிரிவு பணியாளர் முனைவர் கி. மணிகண்டன் சிறப்புரை வழங்கினார். அதன் பின்னர் தமிழர்களிடம் உள்ள பல்வேறு திறன்களை வெளிக்கொணரும் வகையில் திருக்குறள் போட்டி, பாட்டுப் பாடும் போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடத்தப் பெற்று பரிசுகள் வழங்கப்பெற்றன.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் சீன வானொலித் தமிழ்ப்பிரிவுத் தலைவர் திருமதி. கலைமகள், துணைத்தலைவர் வாணி உள்ளிட்ட தமிழ்ப்பிரிவு பணியாளர்கள், சீனாவில் மருத்துவம் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், பெய்ஜிங் மாநகரில் வாழ்ந்து வரும் தமிழர்கள் என 60க்கும் மேலானவர்கள் தங்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். விழாவினைத் தமிழ்ப்பிரிவு பணியாளர் திரு.ப. சக்திவேல் தொகுத்து வழங்கினார்.