• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலைச்சரிவில் 128 குடும்பங்களின் ஏற்றம்!
  2016-12-05 11:04:57  cri எழுத்தின் அளவு:  A A A   

மலைச்சரிவு என்பதால், ஒருசேர 3 அடியில் சமதளமான நிலத்தை எங்கும் காண முடியாது. இந்த இயற்கையின் சவால் இக்கிராமத்தின் மூதாதையர்களின் முன்னேற்றத்தை நிறுத்திவிடவில்லை. அதற்கு தகுந்த அமைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்து கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். பெரும்பாலானவை மரத்தினாலான வீடுகள். ஒவ்வொரு வீட்டில் உள்ள அலங்கரிப்பிலும் பொருள்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. உதராணத்துக்கு, ஒரு வீட்டின் முகப்பில் இலை வடிவம் கொண்ட அலங்கரிப்பு உள்ளது. மரத்தின் இலை எப்படி துளிர் விட்டு, நிறம் மாறி, மண்ணை அடைந்து, மீண்டும் மரத்தின் வேரை அடைகிறதோ அதுபோல, பொருள் தேடி எங்கு சென்றாலும் இறுதிக்காலத்தில் சொந்த மண்ணை அடைந்து விட வேண்டும் என்ற பொருள் அதில் உள்ளது. அதேபோல், வீடுகளின் நூழைவாயிலில் சிறு சிறு மரத்துண்டுகள் அடிக்கப்பட்டிருக்கும். 2 மரத்துண்டுகள் முதல் 9 மரத்துண்டுகள் வரையில் அது இருக்கும். 9 மரத்துண்டுகள் கொண்ட வீடு அரசரின் வீடாகும். அதற்குக் குறைவாக இருந்தால் அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்கள் என அறிந்து கொள்ள முடியும். ஒரு வாசல்படி மட்டுமே கொண்ட வீடு வணிகரின் வீடு என ஒவ்வொரு திருப்பமும், ஒவ்வொரு முனையும் தனக்குள் ஒரு பொருளை ஒளித்து வைத்துள்ளது.

ஒவ்வொரு பருவக்காலத்துக்கும் ஏதுவாக தங்களது உடலையும் மனதையும் தயார்படுத்திக் கொள்ளும் இம்மக்கள், மழை நீரை சேகரித்து, குடிநீர் பற்றாற்குறையை போக்குகின்றனர். மின்தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை இக்கிராமம் எட்டியுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளைக் கடந்த மரங்கள், தங்களது கம்பீரத்தை இழக்காமல் அகன்று விரிந்து வளர்ந்துள்ளன. நூற்றாண்டுகளைக் கடந்த மரங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டுகின்றன. மரங்களின் பாதுகாப்புதான் கிராமத்தின் ஆணி வேர் என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளை ஹுவங்லிங் அதிகம் ஈர்த்து வந்தாலும், இயற்கையை சிறிதளவும் கூட துன்புறுத்தக் கூடாது என்பதில் ஒவ்வொரு நபரும் கவனமாக உள்ளனர்.

ஒவ்வொரு பழைய வீடும், அதன் அழகு கெடாமல் புதுப்பிக்க ஆயுத்தமானபோது, உள்ளூர் நிபுணர்கள்தான் அதற்குசரி என்று அரசு எண்ணியது. காரணம், அவர்களுக்குத்தான் கிராமத்தின் பலம் மற்றும் பலவீனம் நன்கு தெரியும் என்று தலைவர் வூ சியங் யங் கூறுவதில் உண்மை அடங்கியுள்ளது.

கிராமத்தின் அழகை பறை சாற்றி வரும் அதேவேளை, மூதாதையர்களின் பண்பாடும், பாரம்பரியமும் சிறிதளவும் நிலைபிறழாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னோர்கள் விட்டுச் சென்ற 3 ஆயிரத்துக்கும் அதிகமான வரலாற்று நூல்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இவ்வட்டத்தின் பிராசாரத் துறையின் துணைத் தலைவர் ஹொங் ரொங் ஹுய் அம்மையார் தெரிவிக்கிறார்.

"எது பலவீனமோ அதுவே பலம்" என்ற தத்துவத்துக்கு ஹுவங்லிங் வாசிகள் நல்ல உதாரணம். இங்கு வாழ்ந்து வரும் ஒவ்வொரு நபரின் சராசரியான ஆண்டு வருமானம் சுமார் 3 லட்சம் ரூபாய். அதிக சுற்றுலாப்பயணிகள் ஆபத்து; எதிர்காலத்தில் அதனைக் குறைக்க வேண்டும் என்று மக்கள் சார்பாக தலைவர் கூறும் கருத்தில், கிராமத்தின் மீதான பற்று வெளிப்படுகிறது. நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் கிராமத்தை, இயற்கை அழகு கெடாமல், உலக அளவில் முன்மாதிரியான கிராமமாக எப்படி மாற்றுவது என்ற சிந்தனையுடன் செயலிலும் மக்கள் இறங்கியுள்ளனர். 

கிராமத்துக்குச் சென்றால், திரும்புவதற்கு மனம் இசையாது. அங்கு, வாசிக்கப்படும் புல்லாங்குழலின் கீதம் மனதை விட்டு அகலாது. ஊருக்குத் திரும்பித்தான் ஆக வேண்டும் என்று மனதை ஆற்றிக் கொண்டு ரோப் காரில் ஏறும்போது, ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வை ஒவ்வொரு பயணிகளும் பெறுவதில் விந்தை ஏதும் இல்லை. ஒவ்வொரு மனிதரும், இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதையே அது காட்டுகிறது. கிராமத்தின் தலை எழுத்தை மாற்ற எத்தனிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஒருமுறை இக்கிராமத்துக்கு வந்து சென்றால் நலம் பிறக்கும்.

சரிவு என்ற வார்த்தை எங்களைப் பொறுத்தவரை எதிர்மறையானது அல்ல என்று ஹுவங்லிங் வாசிகளின் மனநிலையை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040