• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அதிசயங்கள் பற்றிய கதை]

போத்தலா அரண்மனை

வட மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாஸா பள்ளத்தாக்கு மேலாக மோ பு ரி மலைச் சிகரத்தின் மீது போத்தலா அரண்மனை உள்ளது. போத்தலா அரண்மனை 3 லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. உலகத்திலேயே கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக, 3700 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த அரண்மனை பாம்பு போல வளைந்து ஏறும் ஒரு படிக்கட்டுப் பாதையை கொண்டுள்ளது. கம்பீரமாகத் தெரிகின்ற இந்த அரண்மனையில் வெற்றை அரண்மனையும் சிவப்பு அரண்மனையும் உள்ளன. மொத்தம் 999 அறைகள் இதில் உள்ளன.

திபெத்திய கட்டிடக் கலைப் பாணியின் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் ஹன் பண்பாட்டின் சில அம்சங்களையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக வர்ணமிடப்பட்ட உத்தரங்களும் தூண்களும் குறிப்பிடத்தக்கவை. 1300 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய தூபோ மற்றும் தாங் வமிசங்களுக்கு இடையில் இருந்து திபெத்துக்கு கொண்டு வந்த அரச திருமணங்களால் ஹன் பண்பாட்டில் ஏற்பட்ட செல்வாக்கினை இது பறைசாற்றுகிறது.

போத்தலா அரண்மனையின் கட்டுமானம் முதலில் 7ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்து. இது முதலில் தூபோ அரசன் சொங்ச்சன்கம்போ தன்னுடைய மணப் பெண்ணான தாங் அரச வம்சத்தின் இளவரசி வென்செங்குக்காக கட்டியது. தூபோ தேசம் அப்போது அதனுடைய மேன்மையில் இருந்த போது, திபெத்திய மற்றும் ஹன் தேசிய இனங்களுக்கு இடையில் வலுவான தொடர்புகளை உருவாக்கவும், ஹான் பண்பாட்டை தமது தேசத்தில் அறிமுகப்படுத்துவதற்காகவும், இளவரசி வென்செங்கை மணம் புரிய சொங்ச்சன் காம்போ அனுமதி கேட்டார்.

சொங்ச்சன் காம்பு-இளவரசி வென்செங்

தற்போது சி ஆன் எனப்படும் தாங் வமிசத் தலைநகரான சங் ஆனுக்கு தமது தலைமை அமைச்சர் லூ தோங்ட்ச்சனை அதிகாரபூர்வமாக தைச்சாங் பேரரசரிடம் திருமண சம்பந்தம் பற்றிப் பேசுவதற்காக அனுப்பினார்.

ஏனைய நாடுகளில் இருந்து கூட இதே நோக்கத்திற்காக ஒருடஜன் தூதர்கள் வந்து இருந்தார்கள். எல்லோரும் ஒரே நோக்கத்துக்காக வந்திருந்ததால், பேரரசர் ஒரு போட்டியை வைப்பதற்குத் தீர்மானித்தார்.

முதல் சுற்று போட்டியில் பத்து மரக்கட்டைகள் இரு முனைகளிலும் சம அளவு பருமன் உள்ளதாக இருந்தன. அவற்றில் எது வேர் முனை, எது உச்சி முனை என்பதைப் போட்டியாளர்கள் கூற வேண்டும். லு தோங்ட்ச்சன் எல்லா மரக்கட்டைகளையும் ஒரு குளத்திற்குள் தள்ளினார். உச்சியை விட வேர் கனமானது என்பதால், வேர் முனை தண்ணீருக்குள் மூழ்கியது. இதன் மூலம் அவர் புதிருக்கு விடை கூறினார்.

இரண்டாவது சுற்றில் போட்டியாளர்களுக்கு ஒரு துளையுள்ள ஒரு முத்து கொடுத்தப்பட்டது. துளை நேராக இருக்கவில்லை. வளைந்து வளைந்து சென்றது. அந்த சின்னஞ் சிறு வளைவான துளைக்குள் ஒரு நூலினை கோர்க்க வேண்டும். லு தோங்ட்ச்சனை தவிர, வேறு எவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. துளையின் ஒரு முனையில் ஒரு துளி தேனைத் தடவினார். மறு பக்க முனையில் ஒரு எறும்பில் ஒரு நூலைக் கட்டி துளைக்குள் அதைத் தள்ளினார். பின்னர் மெதுவாக ஊதினார்.

மெல்லிய காற்று தள்ளியதாலும் தேனின் வாசனையாலும் அந்த எறும்பு வளைந்து செல்லும் மெல்லிய துளைக்கு ஊடாக நூலை இழுத்துக் கொண்டு சென்றது. இவ்வாறு நூலை முத்தின் மெல்லிய வளைவான துளைக்குள் கோர்த்தார்.

மூன்றாவது போட்டியில், பேரரசர் நூறு பெண் குதிரைகளையும் இன்னொரு நூறு குதிரைக் குட்டிகளையும் வைத்து போட்டியாளர்களை தாய்க் குதிரைகளுடன் அவற்றின் குட்டிகளை சேர்க்க சொன்னார். லு தோங்ட்ச்சனை தவிர, அனைவரும் தோல்வியடைந்தார்கள். இவர் முதலில் தாய்க் குதிரைகளை குட்டிகளிடம் இருந்து பிரித்தார். பின்னர் குதிரைக் குட்டிகளுக்கு ஒரு நாள் முழுவதும் ஒரு சிறுதுளி நீர் கூட கொடுக்காமல் தீவனம் மட்டும் ஊட்டினார். அடுத்த நாள் அவர் எல்லா குட்டிகளையும் வெளியே அவிழ்த்து விட்டார். ஒவ்வொரு குதிரைக் குட்டியும் தங்களது தாயைத் தேடி ஆர்வத்துடன் பால் குடிக்க ஓடின. புத்திசாலியான லு தோங்ட்சன் இவ்வாறு மூன்றாவது சுற்றிலும் வெற்றி பெற்றார்.

இறுதி சுற்று மிகவும் கடினமானதாக இருந்தது. பார்ப்பதற்கு ஒரே மாதிரியான மேலாடை அணிந்த முன்னூறு பணிப் பெண்களுக்கு இடையில் இருந்து இளவரசி வென்செங்கை கண்டுபிடிக்கும்படி போட்டியாளர்களிடம் கூறப்பட்டது. இளவரசி ஓரு விசேடமான நறுமணத்தை விரும்புவாள் என்பதை லு தோங்ட்ச்சன் அறிந்திருந்தார். அவர் தன்னுடன் சில தேனீக்களை எடுத்துச் சென்றார். போட்டி ஆரம்பமான போது அவர் தேனீக்களை பறக்க விட்டார். தேனீக்கள் எல்லாம் இளவரசியிடம் இருந்து வீசிய விசேட வாசனையை நோக்கிப் பறந்தன. லு தோங்ட்ச்சன் மீண்டும் வெற்றி பெற்றார்.

பேரரசர் லு தோங்ட்ச்சனின் விவேகத்தை கண்டு திகைப்படைந்தார். அவருடைய மகளை சொங்ச்சன் கம்போ திருமணம் செய்ய அனுமதித்தார்.

சொங்ச்சன் கம்போ மற்றும் இளவரசி வென்சங்கின் கதை திபெத்தியர்களினாலும், ஏனைய சீன மக்களாலும் மனதில் வைத்து போற்றப்படுகின்றது. இன்று கூட அந்த அரச தம்பதியினரின் சிலைகள் போத்தலா அரண்மனையில் வணங்கப்படுகின்றன. லு தோங்ட்ச்சனின் கதை அரண்மனையின் சுவரில் தெளிவாக வரையப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040