• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால பேரரசர்கள்]

மத்தியில் அதிகாரம் குவிந்திருக்கும் நாட்டை உருவாக்கியவர்-ச்சின் ஷ் ஹுவாங்

ச்சின் ஷ் ஹூவாங் என்பவர் ச்சின் வம்ச நாட்டை உருவாக்கிய முதலாவது பேரரசர். யிங் செங் என்பது அவருடைய பெயர். போரிடும் அரசுகள் என்ற காலகட்டத்தின் முடிவில் ச்சின் அரசு மிகவும் வலுவாக இருந்தது. கிழக்கில் இருந்த இதர ஆறு நாடுகளை தன்னுடன் ஒன்றிணைக்கும் ஆற்றலை கொண்டிருந்தது. ச்சின் யிங் செங் பேரரசராக பதவி ஏற்ற போது, சிறுவனாக இருந்ததினால் தலைமை அமைச்சர் லியு பு வே அவருக்குப் பதிலாக அரசு விவகாரத்தைக் கவனித்துக்கொண்டார். கி. மு 238ஆம் ஆண்டு அவர் தாமாக நாட்டை நிர்வகிக்கத் துவங்கிய பின்னர், லியு பு வேயை பதவி நீக்கம் செய்து, வெய் லியோ, லீ சு முதலியோரை நியமித்தார். கி.மு 236ஆம் ஆண்டு முதல் கி.மு 221ஆம் ஆண்டு வரை அவர், அடுத்தடுத்து, ஹான், வெய், ச்சு, யன், சௌ, ச்சி ஆகிய ஆறு அரசுகளை ஒழித்து, சீனாவில் பல அரசுகள் தனித்தனி வட்டாரமாக ஆட்சிபுரியும் போர் அரசுகள் காலகட்டத்திற்கு ஒரு முடிவுகட்டி, சர்வாதிகாரமான மத்திய ஆணை முறைமை கொண்ட ஒன்றிணைந்த நாடான ச்சின் வம்ச நாட்டை நிறுவினார்.

கி.மு.221ஆம் ஆண்டு யிங் செங் தன்னை தானே முதல் பேரரசராகப் பிரகடனப்படுத்தினார். நாட்டைப் பிரித்து ஆட்சிபுரியும் முறையை அவர் ரத்து செய்து, அதற்கு பதிலாக மாநிலம் மற்றும் மாவட்டங்களாக பிரித்து ஆட்சிபுரியும் முறைமையை ஏற்படுத்தினார். பேரரசரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், மத்திய அரசிலிருந்து மாநில மற்றும் மாவட்ட அரசுகள் வரை சங்கிலித் தொடர் போன்ற அதிகார அமைப்புக்களை நிறுவினார். அவர் முன்னாள் ச்சின் அரசின் சட்டவிதிகளை அடிப்படையாகக் கொண்டு, இதர ஆறு முன்னாள் அரசுகளின் சட்டங்களின் சில விதிகளைச் சேர்த்து, ஒருமுகமான சட்டங்களை வகுத்து வெளியிட்டார். அவர், இதர ஆறு முன்னாள் அரசுகளின் பிரபுக்கள் மற்றும் பணக்காரர்களை குவான்சுங், பாஷு எனும் இடங்களுக்கு குடிபெயரச் செய்து அவர்கள் மீண்டும் அரசு அதிகாரங்களைப் பெறவிடாமல் தடுத்தார். மக்கள் ஆயுதங்களை வைத்திருக்க தடைக்க வேண்டும், சேகரித்துள்ள ஆயுதங்களையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.

பொருளாதாரத்தில் வேளாண்மைக்கு ஊக்கம் தந்து வணிகத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை அவர் கடைப்பிடித்தார், நிலப்பிரபுத்துவமுறையில் நிலம் தனியாருக்கு சொந்தம் என்ற உடைமை முறையை வளர்த்தார். கி. மு 216ஆம் ஆண்டு, நிலத்தை கொண்டிருக்கும் நிலப்பிரபுகளும், தங்கள் நிலத்தைத் தாங்களே உழுது பயிரிடும் விவசாயிகளும் அவர்களிடம் உள்ள நிலப்பரப்பின் அளவை அரசுக்கு அறிவித்து, நில வரியைக் கட்டினால், அந்த நிலங்களின் மீதான அவர்களின் உரிமையை அரசு அங்கீகரித்து, பாதுகாக்கும் என்று அவர் பிறப்பித்த கட்டளை கூறுகின்றது. இதனால் நிலத்தை தனியாருடைய சொத்தாக்கும் உடைமை முறை நிறுவப்பட்டது. போரிடும் அரசுகள் காலகட்டத்தில் ஷாங் யாங் வகுத்த நீளம், கொள் அளவு, எடை ஆகியவற்றை அளவிடும் முறைமையைக் கொண்டு, நாட்டின் ஒரே அளவீட்டு முறைமையை உருவாக்கினார். நாட்டின் ஒரே நாணய முறைமையையும் ஏற்படுத்தினார். நாடு முழுவதிலும் நீர் மற்றும் தரைவழிப் போக்குவரத்தை வளர்ப்பதற்காக, சியான்யாங்கிலிருந்து யான் ச்சி மற்றும் வூச்சு வட்டாரங்களுக்கு செல்லும் பாதையும், சியன்யாங்கிலிருந்து யுன்யாங்கிற்கு ஊடாக ச்சியூ யுவான்னுக்கு செல்லும் நேரடி பாதையும் தென்மேற்கு வட்டாரத்தில் வூ ச்சி தௌ எனும் பாதையும் போடப்பட்டன. சியாங் ச்சியாங் ஆற்றையும் லீ ச்சியாங் ஆற்றையும் இணைக்கும் கால்வாயும் வெட்டப்பட்டது.

பண்பாடு மற்றும் சிந்தனைத் துறையில் ச்சின் அரசில் நடைமுறையில் இருந்த எழுத்து வடிவத்தை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதிலும் ஒரே எழுத்து வடிவம் கொண்டுவரப்பட்டது. தவிரவும், கடுமையான தண்டனை விதிகளும் வகுக்கப்பட்டன. கி.மு 212ஆம் ஆண்டு, ச்சின் ஷ் ஹுவாங் பல்வகை நூல்களை தீ வைத்து எரிக்கவும் தனியார் பள்ளியை மூடவும் கட்டளையிட்டார். பின்னர், ச்சின் ஷ் ஹூவாங் முதுமையடையாமல் நீண்டகாலம் வாழ்வதற்கான மருந்தைத் தேட பாடுபட்ட ஹௌ ஷெங், லு ஷெங் என்ற இருவர் தப்பிச் சென்றதால், கம்பியூஷ்யஸ் சிந்தனையாளர்களும் மாய வித்தையாளருமான 400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, அனைவரும் சியன்யாங் நகரிலுள்ள ஒரு குழியில் புதைத்து கொல்லப்பட்டனர். இதுவே வரலாற்றில் புகழ்பெற்ற, "நூலை எரித்து சிந்தனையைளரைக் கொலை செய்த"சோக நிகழ்ச்சியாகும்.

ச்சின் ஷ் ஹுவாங் ஆட்சிக்கு வந்த பின்னர், தளபதி மொங் தியனை அனுப்பி, சியோங்னூ இனத்தைத் தாக்கினார். அத்துடன்,போரிடும் அரசுகள் காலகட்டத்தில் ச்சின், யான் சௌ ஆகிய மூன்று அரசுகளின் வடக்கு எல்லைப்புறத்திலான பெரும் சுவர்களை ஒன்றிணைத்து, மேற்கில் லின் சௌ (இன்றைய கான்சு மாநிலத்தின் மின் மாவட்டம்)என்னும் இடத்திலிருந்து கிழக்கில் லியோதுங் வரையான பத்தாயிரம் லீ நீளமுடைய பொரும் சுவரை கட்டினார். இதனால், குதிரை ஏற்றத்தில் வல்லமை பெற்ற சியோங்னூ இனம் தடுக்கப்பட்டது. ச்சின் வம்ச ஆட்சி மேலும் வலுப்பட்டது. எல்லைப்புறம் அமைதியாக மாறியது. ச்சின் வம்சத்தின் முடிவில், துவக்கத்தில் இருந்த 36 மாநிலங்கள் 40க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டன.

ச்சின் ஷ் ஹுவாங் ஆறு அரசுகளைச் சேர்த்த பின், ஆடம்பரமான ஆஃபாங் குங் மாளிகையையும் லி ஷான் கல்லறையையும் கட்டினார். அடுத்தடுத்து 5 முறை பெரிய அளவில் பயணங்களை மேற்கொண்டார். அவர் சென்ற அனைத்து இடங்களிலும் கல் செதுக்குவது, தேவதைக்கு வழிபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நீண்ட நாள் வாழ்வதற்கான மருந்தை தேடும் வகையில், பல்லாயிரம் ஆண் பெண் குழந்தைகளை அழைத்து, கிழக்கு கடலுக்குச் சென்று தேவதாருவிடம் கேட்டுக்கொள்ளுமாறு சியு பூவை அனுப்பினார். இதனால் அவர் பெருமளவுக்கு நிதி மற்றும் ஆள் பலத்தை செலவழித்து, மக்களின் துன்பதுயரத்தை மேலும் அதிகப்படுத்தினார். கி.மு 210ஆம் ஆண்டு ஜூலை திங்களில் ச்சின் ஷ் ஹூவாங் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040