• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஊது குழல் இசைக்கருவி]

ஹுலுசியொ

ஹுலுசியொ என்பது ஒரு வகை இசைக்கருவியின் பெயர். சீனாவின் சிறுபான்மை தேசிய இன மக்கள் பயன்படுத்தும் காற்று அசைவு இசைக்கருவிகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. தென் மேற்கு சீனாவில் வாழும் தைய் இனம், அச்சான் இனம், உவா இனம் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இன மக்கள் மிகவும் விரும்பி அடிக்கடி பயன்படுத்தும் இசைக்கருவிகளில் இது ஒன்றாகும்.

ஹுலுசியொ என்னும் இசைக்கருவி கி.மு. 221ஆம் ஆண்டுக்கு முன் தோன்றியது. இது நீண்ட வரலாறுடையது. இவ்விசைக்கருவியின் தற்போதைய வடிவத்தில் இதே வகையைச் சேர்ந்த பண்டை கால இசைக்கருவியின் தனிச்சிறப்புகளைக் காணலாம்.

அதன் வடிவும் அமைப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. முழுமையான சுரைக்காயில் 3 மூங்கில் குழல்களும் 3 உலோக நாணல்களும் சேர்க்கப்பட்ட பின் இவ்விசைக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தண்டின் முனையில் மூங்கில் குழலொன்று போடப்பட்டுள்ளது. இது ஊதுவதற்குப் பயன்படுத்தப்படும். சுரைக்காய், இசையதிர்வு எழுப்பும் குடமாகப் பயன்படுத்தப்படும். சுரைக்காயின் அடிப்பகுதியில் வெவ்வேறான விட்டங்களைக் கொண்ட மூன்று மூங்கில் குழாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூங்கில் குழாயிலும் செம்பாலான அல்லது வெள்ளியாலான கம்பி கோர்க்கப்பட்டுள்ளது. நடுவில் அமைந்துள்ள மூங்கில் குழாயின் விட்டம் பெரியது. அதில் 7 ஒலி துளைகள் உள்ளன. இதிலிருந்து முக்கிய ஒலி ஏற்படும். இரு பக்கங்களிலுமுள்ள துணைக் குழாய்கள், இணையொலி மட்டுமே ஏற்படுத்த முடியும்.

இதே வகை இதர இசைக்கருவிகளைப் போல ஹுலுசியொ எனும் இந்த இசைக்கருவியின் ஒலி சிறியது. ஆயினும், அதன் முக்கிய குழாயிலிருந்து வெளிவரும் ஒலி, இதர இரண்டு துணைக் குழல்களிலிருந்து வரும் ஒலியுடன் கலந்ததால் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. இவ்விசைக்கருவியிலிருந்து காதில் விழும் நடுக்க ஒலி, பட்டுத்துணியைக் கையால் அசைக்கும் போது ஏற்படும் ஒலி போல மென்மையானது. இதனால், இவ்விசைக்கருவியை ஹுலுஸ் என சிலர் அழைக்கின்றனர். ஸ் என்ற சொல்லுக்கு சீன மொழியில் பட்டுத்துணி என்று பொருள்படுகின்றது.

தேசிய இனம், வட்டாரம் ஆகியவற்றின் வேறுபாட்டினால், யுன்னான் மாநிலத்தில் இதர சிறுபான்மை தேசிய இன மக்கள் பயன்படுத்தும் ஹுலுசியொக்களின் வடிவத்திலும் இசைக்கும் வழிமுறைகளும் வேறுபடுகின்றன. இருப்பினும் ஒரே தனிச்சிறப்பியல்பு அவற்றுக்கு உண்டு. அதாவது, அது அடிக்கடி நாட்டுப்புறப் பாடல் இசையை இசைப்பதற்குப் பயன்படுத்தப்படும். குறிப்பாக, மென்மையான இசையை இசைப்பதற்கு இது தகுந்தது. இசைப்பவரின் உணர்ச்சியை இது நன்கு வெளிப்படுத்தும்.

பின்னர், சீனாவின் தேசிய இன இசைப் பணியாளர் ஹுலுசியொ என்னும் இசைக்கருவியைத் திருத்தி அமைத்தார். புதிய இசைக்கருவியில், பழைய ஹுலுசியொவுக்குரிய ஒலியும் வீச்சும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், அதன் ஒலி அளவும் பெருகியுள்ளது. இதன் விளைவாக, மக்களிடையில் பரவும் சிறுபான்மை தேசிய இன இசைக்கருவி, அரங்கில் பயன்படத் துவங்கியது. இவ்விசைக்கருவியுடன், சீன இசை கலைஞர்கள் வெளிநாடுகளின் கலை அரங்குகளில் நிகழ்ச்சிகளைத் தந்துள்ளனர்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040