நேயர்களின் ஈடுபாடு, பல்வேறு சர்வதேசச் செய்தி ஊடகங்களில் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி, சீன வானொலி தமிழ்ச் சேவையின் வளர்ச்சி போக்கு முதலியவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், ஒத்துழைப்பு, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது முதலியவை குறித்து தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சீனாவுக்கான இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் திரு கே. ஜேக்கப் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். இந்திய-சீன நட்புறவு வளர்ச்சியில் சீன வானொலி ஆற்றிய பங்கை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியத் தூதர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியத் தூதரகப் பணியாளர்களின் சார்பில் தமிழ் ஒலிபரப்பின் பொன்விழாவுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
சீன வானொலி தமிழ் ஒலிப்பரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் துவங்கியது. சீனாவையும் உலகத்தையும் அறிந்து கொள்ளும் முக்கிய சாளரத்தை, உலகின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற தமிழருக்கு, சீன வானொலி தமிழ்ச் சேவை தமது நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகிறது.