ஏப்ரல் 20ஆம் நாள், 2014ஆம் ஆண்டுக்கான ச்சுவாங் இன இசை நாடக அரங்கேற்ற நடவடிக்கையின் துவக்க விழா நடைபெற்றது. இம்மாவட்டத்தின் 13 வட்டங்களைச் சேர்ந்த 59 தொழில் முறை சாரா ச்சுவாங் இன இசை நாடகக் குழுக்கள் மாவட்ட நகருக்குச் சென்று அரங்கேற்ற நடவடிக்கையில் கலந்துக் கொண்டன. நடிகர்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து, திறந்த வெளி அரங்கில் நடனம் ஆடி பாடல்களைப் பாடினர்.
நாள்தோறும் மாலை நெருங்கும் போது, நா து ச்சுவாங் இன இசை நாடகக்குழுவின் பத்துக்கு மேலான உறுப்பினர்கள் வட்டம் வட்டமாக அமர்நது, பழமை வாய்ந்த மா கு ஹூ யாழ் இசைக் கருவியை இசைக்கின்றனர். இத்தகைய காட்சிகள் கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் இல்லாதிருந்தன என்று நா து ச்சுவாங் இன இசை நாடகக் குழுத் தலைவர் குவாங் காவ் சுன் தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு உள்ளூர் அரசின் அழைப்பை ஏற்று, அவர் குவாங் துங் மாநிலத்தில் புரிந்து வந்த பணியிலிருந்து விடுபட்டு, சொந்த ஊர் திரும்பி, ச்சுவாங் இன இசை நாடகக்குழுவை உருவாக்கினார்.
தியன் லீன் மாவட்டத்தின் பண்பாட்டு அரங்குத் தலைவர் வாங் ஃபூ கான் பேசுகையில், கடந்த நூற்றாண்டின் 80, 90ஆம் ஆண்டுக்காலம், ச்சுவாங் இன இசை நாடகக் குழுக்கள் மிகவும் விறுவிறுப்பாக இருந்த காலமாகும். அப்போது, இம்மாவட்டம் முழுவதிலும் சுமார் 106 தொழில் முறை சாரா இசை நாடகக் குழுக்கள் இருந்தன. அதற்கு பின், இக்குழுக்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து அழிந்தன.
கடந்த சில ஆண்டுகளில், தியன் லீன் மாவட்டத்திலுள்ள வட்டங்கள் மற்றும் கிராமங்களில் தொழில் முறை சாரா இசை நாடகக் குழுக்களை உருவாக்குவதை அம்மாவட்ட அரசு பெரிதும் ஆதரித்துள்ளது. தவிர, இசை நாடகக் குழுக்களுக்கு, அரங்கேற்ற ஆடைகள், ஒலி ஒளிக் கருவிகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட சாதனங்களைக் கொள்வனவு செய்ய அரசு அடுத்தடுத்து 60 லட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனிடையே, 40க்கு அதிகமான கிராமங்களில், பொதுச் சேவை மையங்களின் கட்டுமானத் திட்டப்பணியைச் செயல்படுத்தி, இசை நாடக அரங்கு, கூடைப்பந்தாட்ட திடல் உள்ளிட்ட பண்பாட்டு வசதிகளைக் கட்டியமைத்துள்ளது.