|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
தேடிப்பிடித்த வாரிசு
பண்டைய சீனாவில் பிரபுத்துவ ஆட்சி முறை இருந்தது என்பது வரலாறு. அந்தக் காலத்தில் சீனப் பேரரசர்கள், நாட்டின் ஆட்சி உரிமையை ஆண்வாரிசுகளுக்கே கொடுத்தனர். ஆனால், இந்த வாரிசுரிமை தந்தையிடம் இருந்து மகனுக்கு என்று கைமாறவில்லை. தந்தைக்குப்பின் தனயன் என்பது அன்றைய சீனாவில் இல்லாத ஒரு அரசியல் நடை முறை. அசாதரணமான திறமையும், உயரிய ஒழுக்கமும் உள்ளவர்களையே, மன்னர்கள் தங்களது வாரிசுகளாகத் தேர்ந்தெடுத்தனர்.
யாவோ என்பவர்தான் வரலாற்றில் முதலாவது சீனப் பேரரசர் என்று சொல்லப்படுகிறது. அவர், முதுமையடைந்து, தள்ளாமையால் தவித்த போது, சரி, நமக்கு இனி ஒரு வாரிசைத் தேட வேண்டியது தான் என்று தீர்மானித்தார். உடனே, அவரைச் சுற்றி இருந்த சில துதிபாடிகள், "ஐயா, உங்களின் மகன் இருக்கறப்போ, வேறு ஆளைத் தேடணுமா? உங்களின் மகனுக்கே பட்டம கட்டிரலாமே." என்று சொல்லி உச்சி குளிரவைத்தனர். ஆனால், நேர்மையான மன்னர் மசியவில்லை. "அட, பைத்தியக் காரா, என் மகனுக்கு என்ன ஒழுக்கம் இருக்கு? அவன் எல்லாரிடமும் சண்டை போடறான். அவன் கிட்ட ஆட்சியை கொடுத்தா நாடு உருப்படுமா? "என்று ஒதுக்கிவிட்டார். கோங் கோங் என்று ஒருவரின் பெயரை யாரோ சொன்னார்கள். அவன் நாட்டில் நீர்ப்பாசன வேலைகளை கெட்டிக்காரத்தனமாக செய்து முடித்து நல்ல பெயர் பெற்றிருந்தான். ஆனால், அவனையும் மன்னருக்குப் பிடிக்கவில்லை. அவன் இரட்டை வேடம் போடுகின்றவன் என்று மன்னர் நினைத்தார். மக்களின் முன்பு மிகவும் பணிவாக, கூழைக்கும்பிடு போடுவான். ஆனால் செய்வதோ அதற்கு நேரெதிராக இருக்கும். ஆக முதல் சுற்று ஆலோசனையில் உருப்படியாக எதுவும் தேற வில்லை. கொஞ்சம் ஆறப்போடலாம் என்று மன்னர் தீர்மானித்தார்.
சிறிது காலத்திற்குப் பின்னர் இன்னொரு ஆலோசனைக் கூட்டத்தை யாவோ மன்னர் கூட்டினார். அவ்வளவாக பிரபலமடையாத ஷுன் என்ற இளைஞனை பல அமைச்சர்கள் பரிந்துரைத்தனர். அவன் ஒழுக்கத்தில் உயர்ந்தவன். பெற்றோரிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தான்.
இத்தனைக்கும் அவனுடைய தந்தை பார்வை இழந்தவர். பெற்றதாய் இல்லை. ஆனால் குடும்பத்தில் சிற்றன்னையின் கொடுங்கோல் ஆட்சி நடந்தது. அவளும் அவளுக்குப் பிறந்த மகனும் ஷுன்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். ஆனாலும், அவன் விசுவாசமான மகனாக அன்பான அண்ணனாக நடந்து கொண்டான். இந்த ஷுன் எப்படிப் பட்டவன் என்பதை நாமே கண்டுபிடிக்கலாம் என்று யாவோ மன்னர் முடிவு கட்டினார்.
தனது இரண்டு புதல்விகளையும் ஷுன்னுக்கு மணமுடித்துக் கொடுத்தார். கூடவே ஒரு தானியக் களஞ்சியத்தையும் ஒரு மந்தை செம்மறி ஆடுகளையும் சீராகக் கொடுத்தார். அந்தக் காலத்தில் இது பெரிய செல்வமாகக் கருதப்பட்டது. ஷுன்னுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டம் எல்லாரையும் பொறாமைப்பட வைத்தது. பார்வை இழந்த தந்தையும் கொடிய சித்தியும், தந்திரக்காரத் தம்பியும் பொறாமைத் தீயில் வெந்தனர். இந்த செல்வத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஒரு முறை ஷுன் தானியக் களஞ்சியத்தின் மீது ஏறி, தானியம் எடுத்துக்கொண்டிருந்த போது, அவர்கள் ஏணியை எடுத்துவிட்டு களஞ்சியத்திற்குத் தீவைத்து விட்டார்கள் நல்ல வேளையாக, ஷுன் அகன்ற விளிம்புடைய இரண்டு மூங்கில் தொப்பிகளை அணிந்திருந்தான். அவற்றின் உதவியால், உயிர்தப்பினான். இன்னொரு தடவை, ஒரு கிணற்றுக்குள் இறங்கி தூர் எடுக்கும் படி ஷுன்னிடம் கூறினார்கள். அவன் கிணற்றுக்குள் இறங்கியதும் மேலே இருந்து கற்களை வீசி அவனைக் கொல்லப் பார்த்தனர். கிணறு நிரம்பும் வரை, கற்களை விட்டெறிந்தனர்.
ஆனால், புத்திசாலியான ஷுன் கிணற்றின் சுவரில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக உயிர் தப்பினான். வீட்டுக்கு வந்ததும் நடந்தது எதைப் பற்றியும் யாரிடமும் சொல்லவில்லை. எப்போதும் போல தனது பெற்றோரிடமும் தம்பியிடமும் பாசமழை பொழிந்தான். கடைசியில், இனி நம்மால் முடியாது என்று நினைத்து அவனைக் கொல்லும் திட்டத்தை குடும்பத்தினர் கைவிட்டனர்.
இதை எல்லாம் நுணுக்கமாகக் கவனித்து வந்த யாவோ மன்னர், ஷுன்னை தனது வாரிசாக நியமித்து, பட்டம் கட்டினார். பேரரசர் ஷுன் முன்பை விட பணிவாக நடந்து கொண்டார். எல்லொருடனும் சேர்ந்து நல்லாட்சி நடத்தினார். வயதாகி விட்ட போது, தன்னை யாவோ மன்னர் தேர்ந்தெடுத்தது போலவே, தனக்கொரு வாரிசை தேடிப் பிடித்தார். அவனுடைய பெயர் யு.
இந்த மூன்று மன்னர்களும் ஆண்ட காலத்தில் அதிகாரப் போட்டியும் பதவி ஆசையும் இல்லவே இல்லை. ஏனென்றால், மன்னர்கள் மக்களைப்போல பாமரத்தனமான வாழ்க்கை நடத்தினார்கள்.

|